

இந்தியாவின் கலாச்சார தலைநகர் என்னும் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இந்தாண்டும் டிசம்பர் இசை, நாட்டிய விழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தாண்டு நடந்த இசை, நாட்டிய நிகழ்ச்சிகளில் உங்களைக் கவர்ந்த அம்சங்கள், நெகிழ்வான தருணங்கள், கண்டிக்கத்தக்க விஷயங்கள் குறித்து இசை விமர்சகர் சாருகேசியிடமும் `ஸ்ருதி’ மாத இதழின் ஆசிரியர் எஸ்.ஜானகியிடமும் கேட்டோம்.
“நகரம் எங்கும் அங்கங்கே இசைக் கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் நாள் முழுக்க நடந்தாலும் மாலை கச்சேரிகளுக்குத்தான் அதிகக் கூட்டம் இருந்ததைக் காணமுடிந்தது. பகல் நேரங்களில் நடந்த இசை அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளில் ரசிகர் கூட்டம் பல சபாக்களில் அங்கங்கே சிதறிக் கிடந்தது. மாலை இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் கணிசமாக வந்தது. என்றாலும், அதிலும் ஒரு குறிப்பிட்ட சில இசைக் கலைஞர்களுக்கு மட்டுமே அரங்கம் நிரம்பிவழிந்தது. புதிதாக வெளி மாநிலக் கலைஞர்கள் நன்றாகப் பாடினாலும் அவர்களின் நிகழ்ச்சியை கேட்டுப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் `ரிஸ்க்’ எடுக்கத் துணிவதில்லை என்பதும் வெளிப்பட்டது.
தங்கள் நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் ஒன்றுகூடப் பாடாத இசைக் கலைஞர்களும் உண்டு. பாடினால்தான் ஆயிற்று என்பதல்ல. பாடவேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை? என்பதுதான் புரியாத புதிர்!
புதிய தலைமுறை இசைக் கலைஞர்கள் ஏராளமான வர்களுக்கு இந்தமுறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. பலர் அதை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையைக் காண்பித்தார்கள். குரல் வளம் மட்டுமல்லாமல், இவர்களிடம் கற்பனை வளமும் காணமுடிந்தது” என்றார் சாருகேசி.
“கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களிடமும் மேடையில் சில கலைஞர்களிடமும்கூட செல்போன் ஓசை அதிகமிருந்தது. நிச்சயமாக இதை ரசிகர்களும் கலைஞர்களும் தவிர்க்கவேண்டும். தேர்ந்தெடுத்த சபாக்களில் அளவான கச்சேரிகளை மட்டும் செய்தால் கலைஞர்களின் தரமும் குரலும் காப்பாற்றப்படும். இதை நட்சத்திரக் கலைஞர்கள் மனதில் கொள்ளவேண்டும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை நிகழ்ச்சிகளை பல சபாக்கள் நடத்துகின்றன. இதைக் குறைத்துக் கொண்டால் ரசிகர்கள் கூட்டம் சிதறுவதைத் தடுக்கமுடியும்.
மியூசிக் அகாடமியில் இசை, நாட்டியம் தொடர்பான அஞ்சல் வில்லைகள், நாணயங்கள் தொடர்பான கண்காட்சி நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு காரணமாக அமைந்தது. லலித்கலா அகாடமியில் பார்கவி மணியின் புகைப்படக் கண்காட்சியும் அதையொட்டி நடந்த சுதாராணி ரகுபதியின் அபிநயம் நிகழ்ச்சியும் பரவசமான அனுபவத்தைத் தந்தன.
பரதமுனி இளங்கோ அறக்கட்டளை விருதை 98-வயதான கதகளி மேதை செம்மஞ்சேரி குன்னிராமன் நாயருக்கு பத்மாசுப்ரமணியம் வழங்கியபோது அவர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். ராமகிருஷ்ண மூர்த்தி, அசுவத் நாராயணன், அம்ருதா வெங்கடேஷ் போன்ற பல வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் புல்லாங்குழுல் கலைஞர்கள் சுருதி சாகர், ஜெ.ஏ.ஜெயந்த், வயலின் கலைஞர் ஸ்ரேயா தேவ்நாத் ஆகிய இளம் கலைஞர்களும் கவனம் ஈர்த்தனர்.
காசியிலிருந்து வந்திருந்த தமிழ்ப் பெண்மணியான கமலா ஷங்கர், ஷங்கர் கிடாரில் வழங்கிய இந்துஸ்தானி இசை ஆழமாக இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த அனுராதா – ஸ்ரீதர் தம்பதியின் நாட்டியம் வெகு சிறப்பு. அதிலும் ராமாயணக் காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்றது, சபரியாகவே மாறிய ஸ்ரீதரின் அபிநயம். பல மேடைகளில் `கருத்துரை விளக்கம்’ என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளே நடந்தது ஏமாற்றத்தை அளித்தது” என்றார் எஸ்.ஜானகி.