

108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் அறுபத்தி ஒன்றாம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோயிலில் உள்ள மூலவர், ஒன்பது அடி உயரமானவர். இங்கு முத்தங்கிச் சேவையில் அவர் அருள்பாலிக்கிறார். பார்த்தசாரதி பெருமாள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பதற்கேற்ப வெண்மீசையுடன் காட்சியளிப்பது சிறப்பு.
மூலவர் பெயர் வேங்கட கிருஷ்ணன் என்றாலும் உற்சவர் பார்த்தசாரதியின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. பார்த்தசாரதி என்று சொன்னாலே திருவல்லிக்கேணி கோயில் பெருமாளே பக்தர்களால் நினைவு கொள்ளப்படுகிறார் என்பது ஆச்சரியம்.
இவர், மகாபாரதப் போரின்பொழுது பார்த்தனுக்குத் தேர் சாரதியாக இருந்தவர் என்பதை நினைவு கூறும் வகையில் அவரது திருமுகத்தில் போரில் அம்புபட்ட வடுக்களுடன் காணப்படுகிறார். காயங்களினால் ஏற்பட்ட வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே நிவேதனத்தில் பெருமளவு நெய் சேர்க்கப்படுகிறது.
பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அவருக்கு மகளாகப் பிறந்ததாகச் கூறப்படும் வேதவல்லி தாயார் இங்கு தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
மனித உருவில் காட்சி தருபவர்
பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மனித உருவில் இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பஞ்சமூர்த்தித் தலம். இங்கு வேங்கடகிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என்று ஐந்து சன்னதிகளும் பிரதானமாக இருக்கின்றன.
இங்கு உள்ள யோக நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்பதால் இவரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கல்யாண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றை வாரி வழங்கக் கூடியவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
படங்கள்: எம்என்எஸ்