Published : 18 Dec 2014 01:42 PM
Last Updated : 18 Dec 2014 01:42 PM

காட்சியோடு இயைந்த கானம்

கர்னாடக இசை உலகில் ‘ஒன்’ இசைத் திரைப்படம் புதிய முயற்சி. டி.எம். கிருஷ்ணாவின் கர்னாடக இசையை வெள்ளித்திரையில் பார்த்துக் கேட்டதை ஒரு காட்சி இசைப் பரவசம் என்றே சொல்வேன். தமிழில் இதைப் போன்ற ஒரு உச்சபட்ச ஒலித் துல்லியத்தைக் கச்சேரிகளில் நான் ஒரு போதும் கேட்டதே இல்லை. பாடகர், மந்திரத்தில் கீழே செல்கையில் அந்த குரலின் ரூப மடிப்புகளுக்குள் மூழ்கிக் கரைய முடிந்தது. இதை நம் அரங்குகளால் ஒரு போதும் உருவாக்க முடிவதில்லை.

சங்கீதம் கேட்கும் அனுபவத்தை ஒரு உயர்தளத்துக்குக் கொண்டு சென்ற அந்த ஒலி அமைப்பு இன்னும் காதுகளில் ரீங்கரித்தபடியே இருக்கிறது. காட்சிகளைப் படத்தொகுப்பு செய்த விதமும் உறுத்தலில்லாமல் குளத்தின் வட்ட அலைகள் மிதந்து நழுவுவது போல நகர்ந்தன.

கச்சேரி அரங்குகளுக்குள் உலவிய இசையை மெல்லக் கைபிடித்து அழைத்துப்போய் சுநாதமாய் இயற்கையோடு இயைந்த அனுபவமாய் மாற்றி இன்னும் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்க்க எடுத்த இந்த முயற்சி தமிழில் முக்கியமானது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா, கிருஷ்ணாவின் பாடலுக்கு இணையாக ஒரு அற்புதமான கவிதை அனுபவத்தை வழங்கிக்கொண்டே இருந்தது. படப்பிடிப்புக்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடங்களும் சூழலும் அதைக் காண்பித்த விதமும் தனித்தனி ராக ஆலாபனைகள். முதன் முதலில் இப்படி ஒரு அமைதியான சூழலில் இசையைக் கேட்டது ஒரு புதுவிதமான லாகிரி. கிறக்கமாய் இருந்தது.

லயித்துப் போகும் கிருஷ்ணா

ராகங்களை பாடுகையில் இதுவரை நாம் கேட்டிராத அதன் அபூர்வப் பிரயோகங்கள் சிலவற்றைக் காட்டிவிடுகிறார் கிருஷ்ணா. சிலவேளை அதில் அவரும் லயித்து ஆஹா என்கிறார். அவர் ஒன்றிக் கரைந்து பாடி பிடித்த சில பிடிகள் சில இடங்களில் விதிர்த்துப் போக வைத்தன. மாணிக்க வாசகரின் “புல்லாகி பூடாகி” அதற்குச் சரியான உதாரணம். சதாசிவ பிரம்மேந்திராவின் “ப்ருஹி முகுந்தேதி”, முத்துசாமி தீட்சதரின் “ஜம்புபதே”, என்று ஒவ்வொன்றாகச் சொல்லி அதன் ராக தாள விஷயங்களுக்குள் நான் அதிகம் போக விரும்பவில்லை.

குறும்படங்கள், ஆவணப்படங்கள், விவரணப்படங்கள் போன்ற வகைப்பாட்டுக்குள் நுழைந்திருக்கும் இந்த கர்னாடக இசைத்திரைப்படம் ஒரு புது வகைமாதிரி. இது ஒரு பரிசோதனை முயற்சி என்றாலும் எல்லா முனைகளிலும் அதன் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத இயக்குநர் ஜெயேந்திராவைப் பாராட்டத்தான் வேண்டும். இது அவரது இரண்டாவது முயற்சி. டி.எம். கிருஷ்ணாவையும் பாம்பே ஜெயயையும் ஒரு அரங்கத்தில் பாடவைத்து இயக்கி ‘மார்கழி ராகம்’ என்ற பெயரில் ஏற்கனவே நமக்குக் காண்பித்தார். அதில் பி.சி. ராம் செய்த ஒளி விளையாட்டு இன்னமும் கண்களில் நிற்கிறது. இதில் டி.எம். கிருஷ்ணாவின் தனிப்பாடல் மட்டுமே. ஸ்ருதி தவிர பக்க வாத்யம் ஏதுமில்லை.

கச்சேரி என்ற ஒரு வடிவத்தை இதில் கலைத்துப் பார்க்கிறார் கிருஷ்ணா. தாள வாத்தியங்கள் இல்லையே தவிர, செவிக்குப் புலனாகாத சுத்தமான தாளம் இருக்கவே செய்தது. அதுவும் “வருகலாமோ” “பாருக்குள்ளே நல்ல நாடு” போன்ற பாடல்களில் லய நுட்பம் இருக்கவே செய்தது. ஆனால் அது எல்லோருக்கும் எப்படிப் புலப்படும். நம் காதுகள் அப்படிப் பழக்கப்பட்டதில்லையே. ‘ஒன்’ என்ற இந்த திரைப்படம் பாடகர் சார்ந்தது மட்டுமில்லை. அதில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ஒலிப்பதிவாளர் என்று இன்னும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கையில் ஒரு மிருதங்கம் இருந்திருக்கக் கூடாதா? அந்தக் கூட்டிணைவில் மிருதங்கமும் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. பாடகன் தனக்காக மட்டுமே உள் அமைதிக்காகப் பாடுகிறான் என்றால் அதைப் படம்பிடித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லையே.

ஒரு வழிப்பாதை

பாடகருக்கும் கச்சேரிக்குமான உறவு இதில் பெரும்பாலும் ஒரு வழிப்பாதை. பார்வையாளர்களின் கைத்தட்டல்களை ‘உச்’ ‘உச்சுகளை’ ‘பலே’ ‘பேஷ் பேஷ்களை’ ‘அடடாக்களை’ இதில் பெரும்பாலும் கேட்க முடியவில்லை. அதனால் பாடகர் உடனடியாகப் பெறும் உற்சாக உணர்வுகள் இதில் கிடைக்காது. இதிலும் எதிர்வினைகள் இருந்தன. திரையரங்கத்துக்குள்ளும் கூடவே சில பிரகஸ்பதிகள் பாடினர். தாளம் போட்டு அனத்தினர். ஆனால், அவை பாடகர் அறியாதவை.

சத்தியம் தியேட்டரில் பாதாம் அல்வா, மைசூர் போண்டா, டிகிரி காப்பி போன்றவைகளும் அணிமணியோடு சரசரக்கும் பட்டுப்புடவைகளும் இலவச பாஸ்களும் முன் வரிசை முஸ்தீபுகளும் பார்வையாளர்களின் துண்டுச் சீட்டுகளும் இல்லை. ஆனால் பாப்கான் சிதறல்களும் கோக் குவளைகளும் கிடந்தன.

தமிழ் உச்சரிப்பில் சில இடங்களில் கிருஷ்ணா கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாரதி பாடலின் முதல் வரியே நெடில் சரியாகக் கேட்காமல் ‘பர்ருக்குள்ளே நல்ல நாடு’ என்பது மாதிரி கேட்டது. கோபால கிருஷ்ணபாரதியின் மாஞ்சி ராகப் பாடலிலும் வரிகளை பிரித்ததில் பிரச்சினை.

பாடல்களுக்கு இடையில் ப்ளக்கார்டு போடும்போது அவை வெறும் கேப்ஷன் போலவே இருந்ததே தவிர, பாடலைப் பற்றி முழுமையாக இல்லை. என்ன பாடப்போகிறோம் என்பதன் சாரம்சத்தைத் தமிழில் போட்டிருந்தால் கொஞ்சம் புண்ணியமாய் போயிருக்கும். ஏன் என்றால் பலருக்கும் அதன் சாரம் புரிந்திருக்கும். இன்னும் கொஞ்சம் ரசித்துக் கேட்க வைக்கலாம்.

ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு இசையை நகர்த்தும் பரிசோதனை முயற்சிகளில் இப்படிச் சில சின்னஞ்சிறு குறைகள் இருக்கலாம். முதலில் முனைவோர்க்கு அது தவிர்க்க முடியாததும்கூட. ஆனால் எல்லா வற்றையும் மீறி கிருஷ்ணா ஒன்றரை மணிநேரம் தன் குரலிசையால் மட்டுமே பார்வையாளர்களைக் கட்டிப் போட முடிந்தது ஒரு சாதனை. ‘ஒன்’ கர்னாடக இசைத் துறையில் அவர் திறந்து வைத்திருக்கும் ஒரு புதிய கதவு.

இயற்கையையே பார்வையாளர்களாக்கி ரசிக்க வைத்துள்ளார். நீர்நிலை நடுவில் மலைப் பாறையிலும் மரங்கள் நடுவிலும் காற்றோடு கலந்து வருகிறது டி.எம். கிருஷ்ணாவின் நாதம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x