Published : 11 Dec 2014 04:11 PM
Last Updated : 11 Dec 2014 04:11 PM

முனிவர்களைக் காத்த வாமனர்

இந்து மதப்புராணங்களைப் போலவே வாமனரைப் பற்றிய செய்திகள் சமணப் புராணங்களிலும் உள்ளன. உஜ்ஜயினி நகரத்தில் ஸ்ரீ வர்மன் எனும் அரசனின் அவையில் மாபலி, அர்க்கன், வினமுஞ்சி,பிகலத்தன் எனும் அமைச்சர் களிருந்தனர். ஒருநாள் மாமுனிவர் அகம்பனர் எழுநூறு முனிவர்களுடன் காட்டுக்கு வந்துள்ளார் என அறிந்து மன்னரும் அமைச்சர்களும் அவர்களைச் சென்று தரிசித்தனர். அமைச்சர்கள் வீண்விவாதங்கள் செய்வார்கள் என்பதை அறிந்த முனிவர்கள் மவுனமாக இருந்தனர்.அரசன் அவர்களின் மவுனத்துக்குக் காரணம் கேட்டான்.

அமைச்சர்களின் கோபம்

அப்போழுது சுருதசாகரர் எனும் முனிவர் ஆகாரம் முடித்து வந்து கொண்டிருந்தார். ஒரு முனிவன் வயிற்றை நிரப்பிக்கொண்டு வருகிறான் என்று அமைச்சர்கள் அரசனிடம் சொன்னார்கள். அதைக் கேட்ட முனிவர் அவர்களுடன் வாதம் செய்து வென்றார்.அதனால் அமைச்சர்கள் கோபமாகி முனிசங்கத்தை நாசம் செய்யத் துணிந்தனர்.

அன்றிரவே அமைச்சர்கள் திரும்பி வந்து தியானத்திலிருந்த முனிவர்களைத் தாக்க கைகளை ஓங்கினர். உடனே அங்கு வனதேவதை தோன்றி அவர்களின் ஓங்கிய கைகளை அப்படியே நிறுத்தியும் அவர்கள் நகராதபடியும் செய்துவிட்டது.இதை அறிந்த அரசன் கோபமுற்று அமைச்சர்களை நாட்டிலிருந்தே வெளியேற்றிவிட்டான். அவர்கள் அஸ்தினாபுர அரசன் பத்மனிடம் சென்று அமைச்சர்களாயினர். பத்மனுக்கு எதிரி அரசன் தமோதரனை மந்திரி மாபலி வென்று இழுத்து வந்தான். அகம்மகிழ்ந்த அரசன் அமைச்சனிடம், வேண்டிய வரம் கேள்! தருகிறேன் என்றான்.அமைச்சனோ பிறகு வாங்கிக்கொள்கிறேன் என வேண்டிக்கொண்டான்.

ஒருநாள் அகம்பனாச்சாரியார் சங்கம் அஸ்தினாபுரம் வந்தது. அவர்களைக் கொல்ல மாபலி எண்ணி அரசனிடம் தன் வரமாக ஏழு நாட்கள் அரசாட்சி கேட்டான்.அரசனும் அளித்துவிட்டான். மாபலி நரமேதயாகம் எனும் யாகம் நடத்தி முனிவர்களைப் பலியிட ஆயத்தமானான். கொடுமையை அறிந்த முனிவர்கள் வடக்கிருக்க முடிவு செய்தனர்.

இவற்றை சந்திராச்சாரியார் எனும் முனிவர் தன் அவதிஞானத்தால் அறிந்தார். மிகவல்லமை பெற்ற விஷ்ணுகுமார முனிவரிடம் ஆபத்திலுள்ள முனிசங்கத்தைக் காக்க வேண்டினார். விஷ்ணுமுனிவர் தன்னருந்தவ ஆற்றலினால் வாமன உருவம்கொண்டு மாபலி அரசனிடம் சென்றார். தான் தவம் செய்ய மூன்றடி நிலம் வேண்டுமென வேண்டினார். அப்படியே மாபலி நிலமளித்தான்.

நிலம் அளந்த வாமனர்

வாமனர் தன்னுருவத்தைப் பெரியதாக்கினார். உலகையும் விண்ணையும் கால்களால் இரண்டடியளந்து மூன்றாவது அடிக்கு நிலம் கேட்டார். மாபலி நடுங்கி அவர் காலடியில் விழுந்து தான் என்ன செய்ய வேண்டும் என்றான். வாமனர் மூன்றாவது அடிக்கு இடம் கொடு இல்லையேல் நீ முனிவர்களுக்கு ஏற்படுத்தும் தீஞ்செயலை நிறுத்து என்றார்.மாபலி உடனே தன் கொடுஞ்செயலை நிறுத்தினான்.

வாமனரை அனைவரும்”முனிவர்களைக் காத்த வாமனர்” என்று தீபங்களை ஏற்றி போற்றினர். மாபலியை மாபாவியெனக் கூறி அவன் கொடும்பாவியை நெருப்பேந்தி மாவலியோ மாவலியோ என ஆடிப் பாடி கொளுத்தினர்.இதனையே இன்றும் ஜினாலயங்களிலும் வீடுகளிலும் கார்த்திகை தீபமேற்றியும் மாவலி சுற்றியும் கொண்டாடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x