

அன்று வைகாசி முழு நிலா நாள். சேனானி என்னும் கிராமத் தலைவனுடைய மகள் சுஜாதா, தான் நேர்ந்துகொண்ட பிரார்த்தனையைச் செலுத்தவேண்டிய நாள் அது.
சுஜாதா மணப் பருவம் அடைந்தபோது, தனக்கு நல்ல கணவன் கிடைத்துத் திருமணம் செய்துகொண்டு ஆண் குழந்தை பிறந்தால் ஆலமரத் தெய்வத்துக்குப் பால் பாயசம் படைப்பதாகப் பிரார்த்தனை செய்துகொண்டாள். வேண்டியபடியே சுஜாதாவுக்கு நடந்தது.
தனது பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக ஒரு நாள் அதிகாலையில் எழுந்து, சுஜாதா பாயசம் காய்ச்சினாள். அதேநேரம், புண்ணியை என்ற பணிப்பெண்ணை அழைத்து, ஆலமரத்தடியைச் சுத்தம் செய்து வரும்படி அனுப்பினாள். அப்பணிப்பெண் ஆலமரத்துக்குச் சென்றபோது, அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்த கவுதம முனிவரையும் அவர் முகத்தில் காணப்பட்ட தெய்வீக ஒளியையும் கண்டு வியப்படைந்தாள்.
தெய்வீக ஒளி
அவரை ஆல மரத்தில் வசிக்கும் தெய்வம் என்றே, அவள் நினைத்துக்கொண்டாள். உடனே ஓடோடி சென்று சுஜாதாவிடம் இந்தச் செய்தியைச் சொன்னாள். சுஜாதா பெரும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தவளாய், தான் செய்த பால் பாயசத்தைப் பொன் பாத்திரத்தில் ஊற்றி, தலைமேல் வைத்துக்கொண்டு ஆலமரத்துக்கு வந்தாள்.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே, ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த கவுதம முனிவரைச் சூழ்ந்து ஒருவித தெய்வீக ஒளி காணப்பட்டதைச் சுஜாதா கண்டுகொண்டாள். வியப்புடனும் பக்தியுடனும் அவரை அணுகி, அவர் முன்பு பாயசப் பாத்திரத்தை வைத்து வணங்கினாள்.
“சுவாமி! இந்தப் பாயசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது என் வேண்டுதல் நிறைவேறும்," என்று கூறி அவரை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினாள்.
புத்தப் பதவி?
சுஜாதா போன பிறகு கவுதம முனிவர் பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங்கரைக்குச் சென்றார். ஒரு மாமரத்தின் கீழே பாத்திரத்தை வைத்துவிட்டுத் துறையில் இறங்கி நீராடிவிட்டு, சீவர ஆடையை அணிந்துகொண்டார். பின்னர் மர நிழலிலே அமர்ந்து பாயசத்தை நாற்பத்தொன்பது சிறுசிறு கவளங்களாக உட்கொண்டார்.
பிறகு, "நான் புத்தப் பதவியை அடைவது உறுதியானால், இந்தப் பாத்திரம் நீரோட்டத்துக்கு எதிராகச் செல்லட்டும்," என்று தனக்குள் நினைத்துக்கொண்டு அந்தப் பாத்திரத்தை ஆற்று நீரிலே வீசி எறிந்தார். நீரிலே விழுந்த அந்தப் பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்துச் சிறிது தூரம் சென்று, பிறகு கிறுகிறுவென்று சுழன்று நீரில் அமிழ்ந்துவிட்டது. இதைக் கண்ட கவுதம முனிவர் தனக்குப் புத்தப் பதவி கிடைப்பது உறுதி என்பதை அறிந்துகொண்டார்.
மனச் சுத்தம்
பிறகு கவுதம முனிவர், அழகு வாய்ந்த புனிதமான பத்திரவனம் என்னும் இடத்துக்குச் சென்றார். அந்தக் காட்டிலே சால மரங்கள் பசுமையான இலைகளுடனும் நறுமணமுள்ள மலர்களுடனும் இனிமையாகக் காட்சியளித்தன. இச்சோலைக்குச் சென்ற கவுதம முனிவர், முன்பு ஆளாரர், உத்ரகர் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகளாகத் தான் கற்ற, செய்துவந்த அப்பிரணத் தியானம் மூலம் தனது மனத்தில் ஏற்பட்டிருந்த மலினங்களை நீக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டார். அதாவது, மனத்தைச் சுத்தம் செய்துகொண்டார்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'
தொகுப்பு: ஆதி