

கலையே சிவதனயம்
ஸ்ரீசபரீஷம் சகலலோக வந்திதம்
சாஸ்தாரம் சந்ததம்…
- கணீரென்ற குரலில் கல்லிடைக் குறிச்சி ரமேஷ் சுப்ரமணிய பாகவதர் பாட, அவரின் குரலோடு ஹார்மோனியமும் தபேலாவும் இரண்டறக் கலந்து கேட்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. இது கம்பங்குடி வம்சத்தினரால் பாடப்படும் சாஸ்தா வரவுப் பாட்டு. கல்லிடைக்குறிச்சியில் ஆடி மாதத்தில் சாஸ்தா ப்ரீதி விமரிசையாக நடக்கும் திருவிழா.
அரிதான கலையான சாஸ்தா வரவுப் பாட்டுகளை `பக்தாஞ்சலி பஜன் மண்டலி அறக்கட்டளை’ மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆன்மிகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் ரமேஷ் சுப்ரமணியன். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பவர். கம்பங்குடி வம்சத்தினர் குறித்தும் சாஸ்தா வரவுப் பாடல்களை எழுதியவர் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கம்பங்குடி பாரம்பரியம்
வேட்டைக்கு வரும் சாஸ்தா திருநெல்வேலி அருகில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் இளைப்பாறுகிறார். அவருக்கு அங்கிருக்கும் அக்ரஹார மக்கள் கம்பங்கூழ் கொடுக்கின்றனர். அதைக் குடித்துவிட்டு, “கம்பங்குடிக்கு சாஸ்தா உடமை; சாஸ்தாவுக்கு கம்பங்குடி அடிமை” என்று அடிமை சாசனம் எழுதித் தந்ததாகச் சொல்வார்கள்.
கல்லிடைக்குறிச்சியில் பூர்ண புஷ்கலா சமேத குளத்தூரில் அய்யன் என்பதுதான் சாஸ்தாவின் திருநாமம். சாஸ்தா வரவுப் பாடல்கள் அனைத்திலும் `குளத்தூரில் அய்யன்’ என்றே இருக்கும். கல்லிடைக் குறிச்சியில் இன்றைக்கும் திருவிளக்கில்தான் சாஸ்தா ஆவாஹனம் செய்யப்படுகிறார்.
கல்லிடைக்குறிச்சி கரந்தையார் பாளைய பிராமண சமூகத்தினரால் 900 ஆண்டுகளாக செய்யப்படுவது சாஸ்தா ப்ரீதி சம்பிரதாயம். உலகில் எங்கு சாஸ்தா ப்ரீதி நடந்தாலும் கல்லிடைக்குறிச்சி சாஸ்தாவுக்கு காணிக்கை அனுப்புவது, பாரம்பரியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சம்பிரதாயத்துக்குச் சான்று.
`மணிதாசர்’ முத்திரை
இந்தக் கம்பங்குடி வம்சத்தில் வருபவர்தான் மணிதாசர். இவர் 700-க்கும் அதிகமான பாடல்களை, விருத்தங்களை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வாய்வழிப் பாட்டாக தொடர்ந்துவரும் இந்தப் பாடல்களில் ஏறக்குறைய 70 பாடல்களை ரமேஷ் சுப்பிரமணியன் அறிந்துள்ளார்.
சாஸ்தா வரவுப் பாடல்கள்
மணிதாசரின் விருத்தங்கள், பாடல்களில் எல்லாம் `மணிதாசர்’ என்ற முத்திரை இருக்கும். பெரும்பாலான பாடல்கள் அருமையான தமிழிலிலும் சில பாடல்கள் மணிப் பிரவாளத்திலும் அமைந்திருக்கும். இந்தியா முழுவதும் ஏறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் சாஸ்தா ப்ரீதி சம்பிரதாயத்தின்போது, மணிதாசர் மற்றும் அகஸ்தியர் எழுதிய சாஸ்தா வரவு பாடல்களைப் பாடி நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். “இந்த ஆன்மிகப் பணியில் என்னுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய உறவினர்களான சுப்ரமணியன், நடராஜன், கிஷோர் மற்றும் நண்பர்களான ராஜ்குமார், சந்திரசேகர், கிருஷ்ணகோபால் ஆகியோர் கைகோத்துள்ளனர்.” என்கிறார்.
நீலாம்பரியில்தானே தாலாட்ட முடியும்?
இந்தப் பாட்டுகளைப் பாடி 2 சிடிகளையும் 1 டிவிடியையும் வெளியிட்டுள்ளனர்.
`தத்வமஸி’ என்னும் சிடியில், ஒரு புதுமையைச் செய்திருக்கின்றனர். “கம்பங்குடி குளத்து அய்யர் எழுதிய `ஹரிவராசனம்’ பாடல் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைசாத்தும்போது மத்யமாவதி ராகத்தில்தான் பாடப்படுகிறது. ஐயப்பனை சயனம்கொள்ள வைக்க தாலாட்டும் பாடலை அதற்குரிய நீலாம்பரி ராகத்தில் அமைத்து பாடியிருக்கிறோம். இதற்கும் மக்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.” என்கிறார் ரமேஷ் சுப்பிரமணிய பாகவதர்.
தொடர்புக்கு: 9677028475