

உலகத்தின் சில நகரங்கள் ஜீவனுள்ள நகரங்கள் என்று அடையளாம் பெறுவதை அவற்றில் சிறிது காலமாவது வாழ்வதன் மூலமே உணர முடியும். வேறெங்கும் காண இயலாத சில விசேஷ அம்சங்களை வருடந்தோறும் மிகப் பெரிய அளவிலும் வியக்கத்தக்க விதத்திலும் கொண்டாடும் பாரம்பரியம், ஒரு நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறி அதைத் துடிப்புடன் வாழவைக்கும் அம்சமாகவும் இருக்கும். பெர்லினுக்கு ‘பியர் ஃபெஸ்டிவல்’, பிராங்க்ஃப்ர்ட் நகருக்குப் புத்தகத் திருவிழா ஆகியவற்றைப் போலச் சென்னைக்கு மார்கழி இசை விழா.
இந்திய அளவில் மும்பையில் 10 நாட்கள் விநாயக சதுர்த்தி உற்சவம், கொல்கத்தாவில் துர்கா பூஜா என்ற நவராத்திரி உற்சவம் ஆகியவற்றை இதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த விழாக்களைக் காட்டிலும் அதிக நாட்கள் நீடிப்பதாகவும் பலதரப்பட்ட மக்களை ஈர்ப்பதாகவும் விளங்குவது சென்னை இசை விழா.
மற்ற எந்த மத அல்லது பாரம்பரிய விழா போல் மட்டும் அல்லாது, மற்ற எந்த இசை விழா போலவும் இல்லாத, இந்த சென்னை இசை விழாவை ஒரு ‘சமதர்ம உற்சவம்’ என்று அழைக்கலாம்.
மிதமான குளிர் நிலவும் இதமான பருவ காலத்தில் வித விதமான பல இசை நடைமுறையில் தேர்ச்சி பெற்ற இசை வித்தகர்கள் குரலாலும் விரலாலும் கர்னாடக சங்கீதம் என்ற அமிர்தத்தை சென்னை முழுவதும் சாரலாகப் பொழிகிறார்கள்.
இசை விழாவில் கச்சேரிகள் நடைபெறும் அரங்கங்களின் உள்ளே சென்று அமர்ந்து ஆனந்தம் அடைபவர்கள் பலர். ஆனால், அங்கு செல்லாது வீட்டிலும் வெளியிலும் இருக்கும் மற்ற சென்னைவாசிகளும் இந்த இசை விழா சுகானுபவத்தைத் தங்களின் சுவாசங்களில் உணரு வதைச் சென்னைக்கு இச்சமயம் வருகைதரும் வெளி நாட்டவர்களும் நம்மவர்களும் பார்த்து வியப்பது சென்னை விழாவின் சிறப்பு.
சென்னை இசை விழாவின் மையப்புள்ளிகளாகவும் மைல் கற்களாகவும் இருந்த மைலாப்பூர், மாம்பலம் தி.நகர் ஆகிய பகுதிகளையும் தாண்டி வேளச்சேரி, கிண்டி, நங்கநல்லூர், அம்பத்தூர் போன்ற இடங்களிலும் தற்போது பூக்கத் தொடங்கியுள்ள மார்கழி இசை விழாவின் வாசம் ஆகிவந்த எல்லைகளைத் தாண்டியும் பரவுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
புவியியல் ரீதியாக விரிவடையும் இந்த எல்லைகள் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் சமூக ரீதியாகவும் விரிவடைந்தால் அது கர்னாடக இசையின் வீச்சை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்து அதன் நீடித்த ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிக்கும். சென்னையில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களும் கர்னாடக இசையை வானொலி மூலம் கேட்பதை சகஜமாகக் காண முடிந்தது. இன்று அது அருகிவருகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை இசை சார்ந்த அமைப்புகளும் கலைஞர்களும் யோசிக்க வேண்டும்.
இசை உலகிற்குச் சென்னையின் மாபெரும் கொடையான இந்த விழாவை அனுபவிக்க உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் பலர் வருகிறார்கள். ஆனால் இதே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பலருக்கு இந்த சபா கச்சேரி வடிவம் இன்னமும் அந்நியப்பட்டதாகவே இருக்கிறது. இந்நிலையில் இசையைப் பலரிடமும் கொண்டுசெல்வதில் கோவில் முதலான பொது இடங்கள், வானொலி முதலான பொது ஊடகங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இசை விழாவைக் கொண்டாடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் இது.