Published : 29 Dec 2014 10:25 AM
Last Updated : 29 Dec 2014 10:25 AM

சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி எதிரொலி: மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக

பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்னும் இரண்டாண்டுகளில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்கள் பலவற்றை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

காப்பீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மசோதாக்களை அவசரச் சட்டமாக கொண்டு வந்து அமல்படுத்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நடவடிக்கை எடுத்தார்.

எனவே, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் பெற்றால்தான், பாஜகவால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற நிலை இப்போது உள்ளது.

மொத்தம் 245 உறுப்பினர் களைக் கொண்ட மாநிலங்கள வையில் பாஜகவுக்கு தற்போது 45 உறுப்பினர்கள் உள்ளனர். 2016-ம் ஆண்டு மாநிலங்களவையில் 70 உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிகின்றது. அந்த இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்போது, கணிசமான இடங்கள் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா, கோவா உள்ளிட்ட சட்டப்பேரவைகளில் பாஜகவுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, இந்த மாநிலங்களிலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கiள் கணிசமானோர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அதே சமயம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோல்வி அடைந் துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தற்போதுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 69-லிருந்து 54 ஆக குறைய வாய்ப்புள்ளது.

அதே போன்று, விரைவில் நடைபெறவுள்ள பிஹார், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 2016-ம் ஆண்டு அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களுக்கான 10 பதவியிடங்களும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் காலியாகிறது. அந்த பதவியிடங்களுக்கு மத்திய அரசின் பரிந்துரையின் பேரில்தான் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த தரவுகளையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உரு வெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அப்படிப்பட்ட சூழ் நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்களைப் பெற்றுள்ள சில பிராந்திய கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x