

வைணவத் திருத்தலங்கள் அனைத்திலும் உறையும் திருமாலுக்கு வித விதமாக அலங்காரம் செய்வது உண்டு. இதனையொட்டியே பெருமாள் அலங்காரப் பிரியன் என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். ஆண்டு முழுவதும் பண்டிகை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அலங்காரமாகக் காட்சி அளிப்பார் பெருமாள்.
உற்சவ நாட்களைத் தவிர, தேவர்கள் கண் விழிக்கும் மாதமான மார்கழியில், பகல் பத்து, இரா பத்து ஆகிய இருபது நாட்களிலும் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்வது வழக்கம். இந்தப் பிரத்யேக அலங்காரங்கள் கொண்ட பெருமாள்கள் கோயில் கொண்ட வண்ணத்தைக் காணலாம்.
ஸ்ரீரங்கம்: பரமபதநாதன்
பரமபதத்தில் பெருமாள் அமர்ந்த திருக்கோலம். அருகே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி சமேதராக பெருமாள் காட்சித் திருக்கோலம் கொண்டவர். ஸ்ரீரங்கத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இதற்கான புராண கதை சுவாரசியமானது. ரங்கநாதர் திருபாற்கடலில் சயன கோலத்தில் தோன்றினார். இவரை பிரம்மா பூஜித்து வந்தார். நித்திய பூஜைகளை தவறாமல் செய்ய சூரியனிடம் இப்பொறுப்பினை அளித்தார். சூரிய குலத்து வழி வந்த மன்னர்கள் ரங்கநாதரை வழிபட்டு வந்தனர். அந்த வகையில் ராமரும் ரங்கநாதரை பூஜித்து வந்தார். சீதையை மீட்டு அயோத்தியா பட்டணம் திரும்பிய ஸ்ரீராமர் அனைவருக்கும் பல பரிசுகளை அளித்தார். சீதையை மீட்கப் பெரிதும் உதவிய விபீஷணனுக்குத் தான் பூஜித்து வந்த ரங்கநாதரைப் பரிசாக அளித்தார்.
இதனை இலங்கை செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் கீழே வைத்துவிட்டு ஒய்வெடுத்தான் விபீஷணன். இரு ஆறுகளுடன் சோலையாய் இருந்த இவ்விடமே தனக்குப் பிடித்தமானது எனக் கூறிய அரங்கன் இங்கேயே தங்கிவிட்டான்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்விய தேசங்களில், முதலாவது திவ்விய தேசமான இத்திருக்கோயிலே பூலோக வைகுண்டம். இங்கு உற்சவர் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ, பூ, நீளா தேவி சமேத பரமபதநாதனாக வைகுண்டத்தில் காணப்படுவது போலவே சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.
மயிலை: ஸ்ரீமாதவ பெருமாள்
பிள்ளை வரம் வேண்டினார் பிருகு முனி. சென்னை மயிலாப்பூரில் குடில் அமைத்துத் தவமியற்றினார் பிருகு. அவர் முன் அழகிய கன்னிகையாகத் தோன்றினாள் மகாலஷ்மி. அவளுக்கு அமிர்தவல்லி எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார். பின்னர் தன் மகளாய் வந்த மகாலஷ்மிக்கு மணம் முடிக்க எண்ணினார் பிருகு. அப்போது கல்யாண மாதவனாகத் தோன்றிய பெருமாள் மகாலஷ்மியைக் கைத்தலம் பற்றினார்.
பிருகு முனிவர் ஆசிரமத்தில் இருந்த திருக்குளம் சந்தான புஷ்கரணி. இத்திருக்கோவிலில் உள்ள இந்தத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று சுக்ல பஷ, பெளர்ணமி திதியன்று பாரத கண்டத்தில் உள்ள அனைத்து புனித நதிகளும் வந்தடைவதாக ஐதீகம்.
இந்நன்நாளில் இந்த திருக்குளத்தில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கல்வி, கேள்விகளில் முன்னேற இத்திருக்கோவிலில் உள்ள பூதேவி சமேதரான ஸ்ரீபூவராக பெருமாளை வணங்கி வரலாம்.
மாம்பலம்: ஸ்ரீகோதண்டராமர்
பத்ராசலத்தில் ஸ்ரீராமதாசர் ராமருக்கு கோயில் கட்டினார். இத்திருக்கோயிலில் ராமர் பட்டாபிராமனாகக் காட்சி அளித்தார். இவர் வம்சா வழியில் வந்த ஆதிநாரயணதாஸர், பத்ராசலத்தில் உள்ள பட்டாபிராமனைப் போலவே ராம உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளதால் இத்திருக்கோவில் தஷிணபத்ராசலம் எனப் பெயர் பெற்றது.
பின்னர் வங்காயல குப்பையச் செட்டி என்பவர் இத்திருக்கோயிலைப் பெரியதாக எடுத்துக் கட்டினாராம். அப்போது ஸ்ரீகோதண்ட ராமரை மூலவராகவும், உற்சவராகவும் பிரதிஷ்டை செய்தாராம். இத்திருக்கோயிலுக்கு குபேர மூலையில் ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையை கையில் தாங்கியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த ஆஞ்சனேயர் வரப்பிரசாதி.
திருநீர்மலை: ஸ்ரீரங்கநாதன்
திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் மாங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் அரங்கனைச் சேவிப்பதற்காக இத்தலத்திற்கு வந்திருந்தார். பெரிய மழை காரணமாக அன்றைய தினம் மலையையே நீர் சூழ்ந்து இருந்ததால் சில நாட்கள் காத்திருந்து பின்னர் பெருமாளை தரிசித்து மங்களாசாசனம் செய்தார்.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என தனது நான்கு வண்ணங்களைக் காட்டி அருளும் பெருமாள், மலையடிவாரக் கோயிலில் ஸ்ரீராமராகக் காட்சி அளிக்கிறார். இங்கு தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்பது திருப்பெயர்.