

தத் த்வம் அஸி
ப்ரக்ஞானம் பிரம்ம
அயமாத்மா பிரம்ம
அஹம் பிரம்மாஸ்மி
இவை அனைத்தும் உபநிடதங்களில் வருபவை.
தத் த்வம் அஸி என்றால் நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள். அது என்பது பிரம்மம். பிரம்மா எனப்படும் கடவுள் வேறு, பிரம்மம் என்று சொல்லப்படுவது வேறு. இந்த பிரம்மம் குணமற்றது, வடி வற்றது, ஆதி அந்தம் அற்றது.
பிரம்மா, விஷ்ணு, சிவர், பராசக்தி போன்ற கடவுளர்களை சகுண பிரம்மம், அதாவது குணங்களோடு கூடிய பிரம்மம் என்பார்கள். பிரம்மம் என்பது குணம், வடிவம், காலம் ஆகியவற்றைக் கடந்தது.
ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள்.
அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள்.
அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.
இவற்றில் இரண்டாவதைத் தவிர இதர மூன்று வாக்கியங்களும் நீயே அல்லது நானே அல்லது இந்த ஆத்மாவே பிரம்மம் எனச் சொல்கின்றன. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல எனக் கூறும் அத்வைதக் கருத்துக்கு இவை நெருக்கமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் துவைத, விசிஷ்டாத்வைத தத்துவ ஞானிகள் இந்த வாக்கியங்களுக்குத் தத்தமது பார்வையில் விளக்கம் அளிக்கிறார்கள். இந்த விளக்கங்கள் யாவும் இந்த வாக்கியங்களின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள உதவக்கூடியவை.