Published : 20 Dec 2014 12:59 PM
Last Updated : 20 Dec 2014 12:59 PM

விகடன் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) வெள்ளிக்கிழமை (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "ஆனந்த விகடன் குழுமங்களின் தலைவர், நண்பர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பும், பாசமும் கொண்டவர்; நான் அன்பொழுக "பாலு" என்று அழைக்கும் ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன்.

பாலுவின் அருமைத் தந்தையார், எஸ்.எஸ். வாசன் அவர்கள், சென்னையில் கலைவாணர் சிலை திறப்பு விழாக் குழுவில் என்னோடு இடம் பெற்று, பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அந்த விழாவில் கலந்து கொண்டதைப் பற்றி "கலைவாணர் சிலையைத் திறக்க இப்போது தான் நல்ல நேரம் வந்திருக்கிறது" என்றெல்லாம் கழகம் ஆட்சிக்கு வந்தது பற்றி குறிப்பிட்டார்கள்.

அதுபோலவே பாலு அவர்கள் ஆனந்தவிகடன் சார்பில் நடத்திய கவியரங்கு விழா வுக்கு நான் வந்தே தீர வேண்டுமென்று அழைத்ததும், 1987ஆம் ஆண்டு தனது ஆனந்த விகடன் இதழில் அவர் வெளியிட்ட ஒரு நகைச்சுவை துணுக்காக அ.தி.மு.க. ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்ட போது, உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று அறிக்கை கொடுத்த நிகழ்ச்சியும் என் நினைவில் நிழலாடுகிறது.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து என்னை அவர் அழைத்ததும், நானும் தவறாமல் அந்த விழாவிலே கலந்து கொண்டதும் மறக்க முடியாத சம்பவங்கள்.

அவரை இழந்து வாடும், அவருடைய அருமைச் செல்வன் பா. சீனிவாசன், மற்றும் அவருடைய மகள்கள், குடும்பத்தினர், விகடன் குழும நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x