Published : 05 Dec 2014 03:21 PM
Last Updated : 05 Dec 2014 03:21 PM

சிகரெட் விற்பனை கட்டுப்பாடுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக ரமேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக அதிகாரி ரமேஷ் சந்திரா அளித்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்தும் திட்டத்தை நிறுத்தி வைப்பதென மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும் சிறப்பான பரிந்துரைகளை இல்லாத காரணங்களைக் கூறி மத்திய அரசு கிடப்பில் போட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சில்லரையாக சிகரெட் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டால், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள புகையிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் புகையிலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டால் புகையிலை சாகுபடியை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறத் தயாராக இருப்பதாக 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளனர்.

எனவே மத்திய அரசு நினைத்திருந்தால் புகையிலை விவசாயிகளுக்கு மாற்றுவழியை காட்டிவிட்டு அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் தடை செய்திருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல் புகையிலை விவசாயிகளை பகடைக்காயாக பயன்படுத்தி மக்கள் நலன்காக்கும் முடிவுகளை கிடப்பில் போடுவது சரியல்ல. மேலும், சிகரெட்களின் சில்லரை விற்பனையை தடைசெய்தால் 20% விற்பனை மட்டுமே குறையும் என்று மத்திய அரசே கூறியுள்ளது. இதனால் புகையிலை உழவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது எனும்போது அதைக் காரணம் காட்டி ஒரு நல்லத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிடக்கூடாது.

சில்லரையில் சிகரெட்களை விற்கத் தடை விதிப்பதைத் தவிர சிகரெட் புகைப்பதற்கான வயதை 18லிருந்து 25 ஆக உயர்த்துதல், பொது இடங்களில் புகைப்பிடித்தால் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை 200 ரூபாயிலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்துதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளையும் ரமேஷ் சந்திரா குழு அளித்திருந்தது.

இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதால் அனைத்துத் தரப்புக்கும் நன்மை ஏற்படுமே தவிர யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. அவ்வாறு இருக்கும்போது இந்த பரிந்துரைகளையும் செயல்படுத்த மத்திய அரசு தயங்குவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை; மேலும் புகையிலைத் தொழிலதிபர்கள் மத்திய அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

சில்லரையில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், இதுவரை சிகரெட் புகைத்து வந்தவர்கள் பீடி உள்ளிட்ட பிற புகையிலைப் பொருட்களுக்கு மாறி விடுவார்களோ? என்ற ஐயமும் இந்த முடிவுக்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசுக்கு இப்படி ஒரு ஐயம் இருந்தால் பீடி உள்ளிட்ட பிற புகையிலை பொருட்களின் விற்பனைக்கு விரிவான கட்டுப்பாடுகளையோ, முழுமையான தடையையோ விதிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைவிடுத்து யூகங்களின் அடிப்படையில் சிகரெட் மீதான கட்டுப்பாடுகளை கிடப்பில் போடுவது நன்மை பயக்காது.

எனவே, சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக ரமேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x