

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி - டிசம்பர் 21
சகல செளபாக்கியங்களும் கிடைக்க சுந்தர காண்டம் படிக்க வேண்டும். சுந்தர காண்டம் முழுமையும் மகா மந்திரம். அனுமன் சீதாதேவியைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளின் வெற்றியைக் குறிக்கிறது இக்காண்டம். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் ஆகிய ஏழு காண்டங்களைக் கொண்டது ராமாயணம். ராமனே ராமாயணத்தின் கதாநாயகன் என்றாலும், இக்காண்டங்களின் தலைப்புகளில் ராமனது பெயர் எங்குமே வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் வால்மீகி அனுமனின் அரிய செயல்கள் அனைத்தையும் கொண்ட சுந்தர காண்டத்திற்கு, அனுமன் பெயரைத் தலைப்பில் வைக்க விரும்பினார். இதற்கு அனுமன் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
இந்த நிலையில்தான் அனுமனை அவரது தாயார் அழைக்கும் விதத்தை வால்மீகி ஒரு நிகழ்ச்சியின்பொழுது கேட்டார். வனவாசம் முடிந்து, ராவணனை வதம் செய்து விட்டுப் பட்டாபிஷேகம் செய்துகொண்டான் ராமன். அனுமன் உட்பட அனைவருக்கும் ஒரே அரண்மனையில் சுக வாசம். அரண்மனையில் அன்று நடக்கவிருக்கும் ஆனந்தக் காட்சியைக் காண சூரியன் அதிகாலையில் தகதக என்று எழுந்தான்.
அந்நேரத்தில் அரண்மனையின் அழகான கூடத்தில் யார் கைக்கும் சிக்காமல் அங்கும், இங்கும் தாவிக் கொண்டிருந்தார் அனுமன். அங்கே சீதா தேவியின் சிரிப்பு வைர மணியைக் கொட்டி உருட்டியதைப் போல் ஒலித்தது. ஸ்ரீராமர் முகத்தில் ஆனந்தப் புன்னகை. லஷ்மண, பரத, சத்ருக்னன் ஆகியோர் கைகளில் பொன் கிண்ணங்கள். அதிலே தளும்பிக்கொண்டிருந்தது ஸ்நான எண்ணெய்.
அவர்கள் மூவரும் அனுமனுக்கு எண்ணெய் தேய்த்துவிட முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் பிடியில் சிக்காமல் தப்பிக்கத்தான் அனுமன் தாவிக்கொண்டிருந்தார். ஆனால் சீதம்மா விடவில்லை. அனுமனிடம் காரணம் கேட்டார். அதற்கு அவரோ எண்ணெய் ஸ்நானம் என்றால் அதிக நேரம் ஆகும். அதுவரை ராமரை பிரிந்திருக்கத் தன்னால் இயலாது என்றார். இதனைக் கேட்ட ராமரும், தான் கூடவே இருப்பதாக உறுதி அளித்தார். எண்ணெய் ஸ்நானம் முடித்து, புத்தாடை அணிந்தார் அனுமன். அரண்மனை விழாக் கோலம் பூண்டது.
அண்மையில்தானே ராமர் பட்டாபிஷேகம் முடிந்தது. பின்னர் எதற்காக இவ்விழாக் கோலம் என்பதை அறிய அனைவர் மனமும் விழைந்தது. இந்நிலையில் அரசவை கூடியது. அப்பொழுது, சுந்தரா என்று அழைத்தபடியே அஞ்சனை அரண்மனையுள் நுழைந்தாள். தன் மகன் அனுமனின் அழகிய திருக்கோலம் கண்டாள். அனுமனும் ஓடி வர, ஆரத்தழுவிக் கொண்டாள் அனுமனின் அன்னை.
பின்னர் ஸ்ரீராமரும் சீதையும் பொன் மணி மாலைகளை அனுமனுக்கு வழங்கி, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தனக்குப் பிறந்த நாளா என்று ஆச்சரியக் குறி தோன்ற கண்களை விரித்து பார்த்தார் அனுமன். அனுமனுக்கும் அன்னை சீதம்மாதானே. இந்நிகழ்ச்சியை அவையில் கண்ட வால்மீகி, அனுமன் தாய், தன் மகனை சுந்தரா என்று அழைத்த பெயரையே, அவரது அசாத்திய செயல்களைக் கொண்ட அதிகாரத்திற்குப் பெயராக வைத்துவிட, அதனை அனுமனால் மறுக்க முடியவில்லை. சுந்தரம் என்றால் அழகு.