Last Updated : 11 Dec, 2014 04:05 PM

 

Published : 11 Dec 2014 04:05 PM
Last Updated : 11 Dec 2014 04:05 PM

பெருவழி பயணம்.. குருவடி சரணம்

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..

இது ஏதோ எதுகை, மோனை கோஷம் அல்ல. 48 மைல் பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு இதன் நிதர்சனம் புரியும்.

சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ஐயப்பனைத் தரிசிக்க இரண்டு வழிகளில் பக்தர்கள் செல்கின்றனர். பம்பையில் தொடங்கி சன்னிதானம் வரையிலான ஏழு கிலோமீட்டர் தொலைவு கொண்டது சிறிய பாதை. இதில் நீலிமலை, அப்பாச்சிமேடு என்ற இரண்டு ஏற்றங்கள் சற்றுச் சிரமமாக இருக்கும். முன்பு இந்தப் பாதையும் பாறைகள், மேடு பள்ளங்கள் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது சிமெண்ட் தளம், படிகள், கைப்பிடிக் கம்பி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் ஏறுவதற்கு அதிகச் சிரமம் இருக்காது. மேலும், வழிநெடுக க்கடைகள் இருப்பதால் சோர்வைப் போக்கிக் கொள்ளலாம்.

ஐயப்பனின் பூங்காவனம்

எரிமேலியில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரையிலான 48 மைல்கள் (சுமார் 75 கி.மீ.) நடப்பது பெரிய பாதை. அடர்ந்த காடு, மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பாதையில் யாத்திரை மேற்கொள்வது எளிதானதல்ல. எரிமேலியில் இருந்து நடக்கத் தொடங்கினால் பேரூர்தோடுவரை தார்ச்சாலை. அங்கிருந்துதான் ஐயப்பனின் பூங்காவனம் தொடங்குகிறது. சிவன் கோயில் வரையான பாதை சிரமமின்றி இருக்கும். அதன்பிறகு ஒத்தையடிப் பாதையாகச் செல்லும் காட்டு வழிதான்.

காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம்.

ஐயப்பனின் பூங்காவனத்தில் நுழைந்துவிட்டால் கிழக்கு எது, மேற்கு எது என்பதுகூடத் தெரியாது. காட்டுப்பாதை முழுவதும் ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும். பாறைகள், பாதங்களைப் பதம் பார்க்கும் சிறிய கற்கள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மரங்களின் வேர்கள், முட்களைப் போலக் குத்தும் மரக் குச்சிகள் எனக் கரடுமுரடான பாதை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பக்தர்கள் சொல்லும் வழிநடை சரணங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கும்.

ஒத்தையடிப் பாதையையொட்டி கிடுகிடு மலைச் சரிவுகள். கரணம் தப்பினால் அதலபாதாளத்தில் இழுத்துச் சென்றுவிடும். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் ஐயனே நம்மை வழிநடத்திச் செல்வதால் காட்டுப்பாதையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதில்லை.

காளைகட்டியில் வெடி வழிபாடு

காளைகட்டி, இஞ்சிப்பாறைக் கோட்டை, முக்குழி, கரிமலை உச்சி, பெரியானை வட்டம் ஆகிய இடங்களில் வெடி வழிபாடு நடத்தப்படுகிறது. ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஸ்பீக்கர்கள் கட்டி அறிவிப்பு செய்வார்கள். எரிமலையிலிருந்து நடக்கத் தொடங்கினால், காளைகட்டி எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டேதான் பக்தர்கள் நடப்பார்கள். சற்றுத் தொலைவில் வெடிச் சத்தமும், ஸ்பீக்கர் சத்தமும் கேட்டால், காளைகட்டி வந்துவிட்டது என்றபடி, நடையின் வேகத்தை அதிகரிப்பர்.

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், பொய் சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால், பெரியபாதையில் செல்லும்போது, ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்பதுபோலவே குருசாமிகளின் பேச்சு இருக்கும். ‘இன்னும் எவ்வளவுதூரம் சாமி நடக்க வேண்டும்’ என்று புதிதாக வரும் கன்னிசாமிகள் கேட்டால், ‘இதோ வந்துவிட்டது. இன்னும் ரெண்டு ஏத்தம், ரெண்டு இறக்கம்தான்’ என்பார்கள்.

அந்த இரண்டு ஏற்றமும் இறக்கமும் பல கி.மீ. தொலைவாக இருக்கும். ‘இன்னும் கொஞ்சம் தூரம்தான்’ என்று சொல்லியபடியே மற்ற சாமிகளை குருசாமிகள் வழிநடத்திச் செல்வர்.

அழவைக்கும் அழுதா

இரவில் அழுதா நதி நீர் ஐஸ்கட்டியைப்போல இருக்கும். கன்னிசாமிகள் இந்த நதியில் மூழ்கி கல் எடுக்க வேண்டும் என்பதால் நடுங்கும் குளிரிலும் வெடவெடத்தபடி நதியில் குளித்து 2 சிறிய கற்களை எடுத்து வருவர். கன்னிசாமிகள் மட்டுமின்றிப் பெரும்பாலான சாமிகளும் அழுதையில் குளிப்பதுண்டு. ஐஸ் நீரில் குளித்ததும் சற்றுக் களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும். அதே வேகத்தில் அழுதா மலை ஏறத் தொடங்குவார்கள். செங்குத்தான மலை. பாறைகளும், பிரம்மாண்ட மரங்களின் வேர்களும்தான் படிக்கட்டுகள். ‘அழ வைக்கும் அழுதா’ என்று சொல்வதுண்டு. இந்த மலையில் ஏறுபவர்களுக்குத் தெரியும் இது எத்தனை உண்மை என்று.

அழுதா மலை உச்சியில் கல்லிடும் குன்று உள்ளது. அழுதா நதியில் இருந்து எடுத்துவந்த கற்களை இங்கு போட்டு கன்னிசாமிகள் வழிபடுவர். அதன்பிறகு இஞ்சிப்பாறை கோட்டையைக் கடந்தால், அழுதா மலை இறக்கம் வரும். இது கொஞ்சம் சிரமமில்லாத பாதை. நடையை வேகப்படுத்தினால், அடுத்து முக்குழி தாவளம் வந்துவிடும். அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அம்மனை வணங்கிவிட்டு, புறப்பட்டால் கரிவலந்தோடு.. அதன்பிறகு கரிமலை ஏற்றம்.

நெட்டுக்குத்தான மலை கரிமலை. வியர்க்க விறுவிறுக்க உடலில் உள்ள அத்தனை கலோரிகளையும் காலி செய்துவிடும் கரிமலை

ஏற்றம். முழங்கால்களில் வலி தெறிக்கும். கரிமலை உச்சியை அடைந்ததும். அங்குள்ள கடைகளில் நாரிங்கா வெல்லம் (எலுமிச்சை ஜூஸ்), கப்பா கஞ்சி குடித்துவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறுவர். அழுதா ஏற்றம், கரிமலை ஏற்றம் இதையெல்லாம்விடச் சவாலானது கரிமலை இறக்கம். நெட்டுக்குத்தாக இறங்கும் பள்ளத்தாக்கு, பெரிய பெரிய பாறைகள் எனச் சோதனை கடுமையாக இருக்கும்.

கரிமலை அடிவாரத்தைத் தொட்டுவிட்டால் எல்லோருக்கும் ஒருவித உற்சாகம் பிறந்துவிடும். அதன்பிறகு பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பை எல்லாம் கொஞ்சம் சமதள பாதைதான். சிறிய சிறிய ஏற்றம், இறக்கம் இருக்கும். இங்கு ஐயப்ப சாமிகள் விரி (கடைகளில் தங்குமிடம்) எடுத்துத் தங்கி பஜனைகள் பாடி, அன்னதானம் செய்வர். ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

களைப்பெல்லாம் தீரும் பம்பை

புண்ணிய நதியாம் பம்பையில் மூழ்கி எழுந்தால், 40 மைல் நடந்து வந்த அத்தனை களைப்பும் காணாமல் போயிருக்கும். புதிய உத்வேகம் பிறக்கும். கரிமலை இறக்கத்தில் வரும்போது, ‘அடுத்த வருஷம் சிறிய பாதையில் போகலாமா?’ என்ற எண்ணம் சிலருக்கு வரும். ஆனால், அடுத்த ஆண்டில் மாலை அணிந்ததும் பெரிய பாதையில்தான் போக வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும். வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை எல்லாம் பெரியபாதையில் பார்க்கும்போது, நம் மனதில் ஏற்படும் சோர்வு மறைந்துவிடும்.

கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு, நீலிமலை அப்பாச்சி மேடு, சபரிபீடம் கடந்து 18 படிகளில் ஏறி சென்றால், ஐயப்பனைத் தரிசிக்கலாம். 41 நாள் விரதம் இருந்து, 48 மைல்கள் நடந்து சென்றால் ஒரு சில விநாடிகள்தான் ஐயப்பனைத் தரிசிக்க முடியும். ஆனால், அந்த ஒரு சில விநாடியில் கிடைக்கும் பேரின்பம், வார்த்தைகளால் சொல்ல இயலாதது. அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x