தருமமிகு சென்னையின் தலவிருட்சங்கள்

தருமமிகு சென்னையின் தலவிருட்சங்கள்
Updated on
2 min read

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் “தல விருட்சம்” என்று ஒரு மரம் இருந்து வருகிறது. பண்டைக்காலத்தில் இந்தப் பூமியில் பல விதமான வனங்கள் இருந்து வந்தன. மனிதனுக்கு உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் அந்த வனங்களின் மரங்களிலிருந்தே மருந்து கண்டறியப்பட்டடது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பல வனங்களை அழித்து மனிதன் நகரத்தை உருவாக்குவான் என்பதை உணர்ந்து, இந்த மர இனங்களைப் பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், அங்கு செழித்து வளரும் மரத்துக்கும், ஒரு தொடர்பை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

காலப்போக்கில் வனங்கள் அழிந்து போனாலும் கோயில் தலத்தில் இருக்கும் ஒரு மரமாவது அந்த மர இனத்துக்கு அடையாளமாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஒரு திருக்கோயிலின் தல விருட்சத்தைக் கொண்டு, அந்த இடத்தில் எந்த வனம் இருந்தது என்பதைச் சரியாக சொல்ல முடியும்.

இன்றைய சென்னை மாநகரிலேயே பழமை வாய்ந்த சில சைவத் திருத்தலங்கள் உள்ளன. அந்தத் திருத்தலங்களின் தல விருட்சத்தைக் கொண்டு அந்த இடத்தில் என்ன வனம் இருந்திருக்கும் என்றும், அந்த மரங்களின் மருத்துவக் குணங்களையும் தெரிந்துகொள்வோம்.

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்

இத்தலத்தின் தல விருட்சம் “மகிழ மரம்”. ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கக்கூடிய மகிழ மரம் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வளரக்கூடிய மரம். ஏப்ரல் - மே மாதங்களில் பூக்கும் மகிழம்பூ சற்றே மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தை உடையது; காய்ந்த பிறகும் மணத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உடையது. மகிழம் பூ, காய், இலை, விதை, பட்டை அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. துவர்ப்பும் இனிப்பும் கலந்த மகிழக்காயும், மகிழப்பட்டையும், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உபயோகமானது.

மகிழப்பட்டை கஷாயம் புண்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. பழுத்த மகிழக்காய் சிறுநீர் எரிச்சலைப் போக்கும் திறன் வாய்ந்தது. காய்ந்த மகிழம்பூக்களைப் பொடி செய்து மூக்குப்பொடியாய் உபயோகித்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் எனவும், மகிழம்பூ சாறு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒரு மருந்து எனவும் நம்பப்படுகிறது. இன்றைய திருவொற்றியூர் ஒரு காலத்தில் மகிழவனமாக இருந்திருக்க வேண்டும்.

திருவலிதாயம் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

சென்னையில் ‘பாடி’ என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள இத்தலத்தின் தல விருட்சம் “பாதிரி மரம்”. வறட்சியான காடுகளில் வளரக்கூடிய தன்மை உடையது. ஏப்ரல் - மே மாதங்களில் பூக்கும் பாதிரிப்பூ இளஞ்சிவப்பு நிறத்தை உடையது.

பாதிரி மரத்தின் பூ, காய், இலை, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. பாதிரி வேர் சிறுநீர் எளிதாக வெளியேற உதவி செய்யும். பாதிரிக்காயை அரைத்துப் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பாதிரிப்பூவைத் தேனில் குழைத்து உண்டால் விக்கலிலிருந்து விடுதலை கிடைக்கும்.

திருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்

இத்தலத்தின் தல விருட்சம் “முல்லைச்செடி”. முல்லைச்செடி வருடம் முழுவதும் பசுமையாக இருந்து, வருடம் முழுவதும் பூக்களை அளிக்க கூடியது. முல்லைக் கொடியின் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. முல்லைப்பூ வேருக்கு மயக்கம் தருவிக்கும் தன்மை உள்ளதால் இதனை தலைவலி, தூக்கமின்மை, மூட்டுவலி, எலும்புமுறிவு போன்ற உபாதைகளிலிருந்து விடுபட பயன்படுத்தப் படுகிறது.

முல்லைப்பூவின் எண்ணெய் மனபதற்றத்திலிருந்தும், மனஅழுத்ததிலிருந்தும் விடுபடவும், உலர்ந்த தோலைச் சரி செய்யவும் உதவுகிறது. ஒரு காலத்தில் இவ்விடம் முல்லைவனமாக இருந்திருக்க வேண்டும். ஆதலால் இங்கு இருக்கும் இந்தத் திருக்கோயிலுக்கு முல்லைக்கொடியே தல விருட்சமானது. இவ்விடம் இன்றும் திருமுல்லைவாயில் என அழைக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in