

தண்டன் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு மணிமாலி என்கிற மகன் இருந்தான். தண்டன் மிகுந்த பேராசைக்காரன். அரச போகங்களில் திளைப்பவன். செல்வத்தை மென்மேலும் சேர்ப்பதற்காக அலைந்துகொண்டிருப்பவன். அந்தப் பேராசை எண்ணத்திலேயே மாண்டும் போனான். அவனுக்கு அபரிமிதமான பேராசையிருந்ததால் அரச கருவூலத்திலேயே ஒரு பாம்பாகப் பிறந்தான்.
அந்தப் பாம்பு முற்பிறவி ஞானம் கொண்டு தன் மகன் மணிமாலினியிடம் பேசி, யாரையும் கருவூலகத்தினுள் நுழையாதபடி பார்த்துக்கொண்டது. ஒரு நாள் மணிமாலி ஒரு தவ முனிவரைத் தரிசித்தான்.அந்த முனிவர் முக்காலமும் உணர்ந்தவர். அவர் மூலம் தன் பாம்பாக உள்ள தந்தையைப் பற்றி அறிந்தான்.
தந்தைப் பாசத்தால் மணிமாலி அந்தப் பாம்பிடம் சென்றான். “ அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் நீர் மன்னனாகப் பிறந்தும் நற்காட்சி எனும் உமக்கு தருமத்தில் பற்று இல்லை. ஒழுக்கம், விரதம், தவம் போன்றவற்றில் அக்கறையில்லை. குடும்பம், பொன், பொருள், வீடு வாசல் போன்றவற்றில் பேராசை கொண்டு அதனால் தீங்கதியை பெற்றுள்ளீர்கள்.ஐம்பொறி ஆசைகள் “கிம்பாகம்” எனும் நச்சுப்பழம் போல் துன்பத்தை உண்டாக்கும். எனவே தீய எண்ணங்களையும்,செயல்களையும் பேராசைகளையும் விடுத்து தர்ம எண்ணத்தை மேற்கொள்ளவும்” எனக் கூறினான்.
பாம்பான தண்டன், மகன் உபதேசித்த அறநெறியை ஏற்று, பொருள் ஆசையை விடுத்தான். சல்லேகனை எனும் விரதத்தை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான். அதனால் தேவப் பிறப்பு அடைந்தான். பின் தன் மகன் மணிமாலி முன் தோன்றி, அவனின் தரும உபதேசத்தால் தான் இப்போது தெய்வகதி அடைந்ததாகக் கூறி அவனை வாழ்த்தினான். தான் அணிந்திருந்த மணிமாலையை மகனுக்கு அணிவித்துப் போற்றிச் சென்றான்.
இவ்வாறாக ஜைன ஸ்ரீபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.