Published : 26 Dec 2014 11:11 am

Updated : 26 Dec 2014 11:11 am

 

Published : 26 Dec 2014 11:11 AM
Last Updated : 26 Dec 2014 11:11 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 10

10

ஆப்கானிஸ்தான் தளபதி மசூத், தாலிபன் தலைமையை சந்தித்தார். பலனில்லை. யுத்தத்தின் புது அத்தியாயம் தொடங்கியது.

தாலிபனுக்கு எதிராக மசூத்தின் படை ஆக்ரோஷமாகப் போரிட்டது. தாலிபனுக்கு வான் பலம் கிடையாது என்பதால் அவர்கள் தரப்பில் நிறைய இழப்புகள். அப்போது தாலிபன்களுக்கு பாகிஸ்தான் கைகொடுத்தது. அதன் உளவு நிறுவனம் காந்தஹாரில் தாலிபன் வசமிருந்த போர் விமானங்களை சரி செய்ய தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பியது. இதனால் ஆப்கான் அரசின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான்மீது கடும் கோபம் கொண்டார்கள். அதன் தூதரகத்தை முற்றுகையிட்டார்கள்.

ஆனால் இதற்குள் வான் படைபலமும் கொண்ட தாலிபன் வசம் நாட்டின் மேற்குப் பகுதி முழுவதுமே வந்து விட்டது.ஒரு கட்டத்தில் காபூலுக்குள் நுழைந்த தாலிபன், அதிபர் நஜிபுல்லாவை அறைந்து உணர்விழக்க வைத்தது. ஒரு ஜீப்பின் பின்னால் அவரைக் கட்டி தரையில் அவர் உடல் இழுக்கப்பட்டது. பின் அவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். அவரது தம்பியும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இருவர் உடல்களையும் பொது இடத்தில் தொங்க விட்டார்கள்.

காபூல் கைவசம் வந்த ஒரே நாளுக்குள் இஸ்லாமிய வழிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டன. திருடர்களா? கையை வெட்டு. மது அருந்துபவரா? சாட்டையால் அடி. தொலைக்காட்சி, காற்றாடி, இசை, புகைப்படம் எல்லாவற்றுக்கும் தடை. பெண்கள் அலுவலகம் செல்லக் கூடாது. பள்ளிப் படிப்பு கூட அவசியமில்லை. தாடியில்லாத இளைஞர்களுக்கு தண்டனை காத்திருந்தது. நஜிபுல்லாவுக்குப் பிறகு ஆப்கானின் ஜனாதிபதியாக அவசர அவசரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரப்பானி.

பல இனத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். புதிய அரசில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று ஆசை காட்டினார். தாலிபனைத் தவிர எல்லா எதிரிகளும் ஒரு குடையின்கீழ் வரத் தொடங்கினர். எதிர்த்தரப்பு வலுவடைவதைக் கொண்டு தாலிபன்கள் சீற்றமடைந்தார்கள். நிறைய ராக்கெட் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். ஏதும் அறியா அப்பாவிகள் பலரும் இதில் இறந்தனர்.

எதிரணியும் சும்மா இருக்கவில்லை. உஸ்பெக்குகள் ஆயிரத்துக்கும் அதிகமான தாலிபன்களை சிறைபிடித்து, 600 பேரைக் கொலை செய்தனர். காபூலின் தெற்குப் புறமாக ஹஸாராக்கள் நுழைந்தனர். தாலிபன் சந்தித்த மிக மோசமான தோல்வி இது. அதுவரை காந்தஹாரில் இருந்து கொண்டே கட்டளைகள் பிறப்பித்த ஒமர் காபூலுக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை தோன்றத் தொடங்கியது. அவர் காபூல் சென்றாரா? தெரியவில்லை. ஆனால் அவர் அழைப்பு விடுக்க பாகிஸ்தானிலுள்ள மதரஸாக்கள் மூடப்பட்டன. மாணவர்கள் காபூலை நோக்கி விரைந்தனர்.

1996 ஏப்ரல் 4. ஒமர் காந்தஹார் நகரின் மையப் பகுதியில் இருந்த ஒரு கட்டிடத்தின் கூரைப் பகுதியில் ஏறி நின்று கொண்டார். நபிகள் நாயகத்தின் உடை என்று நம்பப்பட்ட ஒன்றை தன்மீது அப்போது போர்த்திக் கொண்டிருந்தார். அந்த உடையை ஒமர் அப்படியும் இப்படியும் அசைத்துக் காட்ட கைதட்டல் விண்ணைப் பிளந்தது. ‘ரப்பானியின் மீது ஜிஹாத்’ என அறிவித்தார் ஒமர்.

ஐ.நா.வின் சிறப்புத் தூதர் நார்பெல்ட் ஹோல் என்பவரால் தாலிபனை சமாதான மேடைக்கு அழைத்துவர முடியவில்லை. தன் பதவியை ராஜினாமா செய்தார். பெண் நோயாளிகளைப் படம் எடுத்ததற்காக சில ஐரோப்பிய பத்திரிகைக்காரர்களை தாலிபன்கள் சிறையில் அடைத்தனர். வாஷிங்டனில் மகளிர் இயக்கங்

கள் தாலிபனுக்கு எதிராக உரத்து குரல் கொடுத்தன. அதற்கு மேலும் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் தாலிபன் ஆதரவு நிலையை எடுக்க முடியவில்லை. “நாங்கள் தாலிபனை எதிர்க்கிறோம்’’ என்று அமெரிக்கச் செயலாளர் வெளிப்படையாகவே அறிவித்தார். பாகிஸ்தான் பதைபதைத்தது. தாலிபனா? அமெரிக்காவா? யாரை எதிர்ப்பது என்ற கவலை அதற்கு.

“தாலிபன் அல்லாத அரசை ஆப்கானிஸ்தானின் அமைக்க நாங்கள் உதவுவோம்’’ என்று அறிக்கை வெளியிட்டன இரானும், ரஷ்யாவும். ஆக பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் மட்டுமே தங்கள் தூதர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பின.

தாங்கள் ஆள வேண்டிய பகுதிகள் அதிகரித்ததால் அதிக ராணுவ வீரர்கள் தாலிபன் இயக்கத்துக்குத் தேவைப்பட்டனர். புதிதாக இணைவோர் குறைந்தனர். பாகிஸ்தானைத் தவிர அண்டை நாடுகள் தாலிபன் அரசுடனான உறவை முழுவதுமாக வெட்டிக் கொண்டன. சோவியத்யூனியன் பிரிந்து விட்டது. தாலிபனை தங்கள் எல்லைப் பகுதிக்குள் வாலாட்ட விடக்கூடாது என்று ரஷ்யாவும், கஜகஸ்தானும் கூடிப் பேசின.

பாதுகாப்பு அமைச்சராக பதவி பெற்றிருந்த மசூர் காபூலை நோக்கிப் படையெடுத்தார். ஒருவழியாக தாலிபன் படை பின் வாங்கத் தொடங்கியது. பின்னர் அமெரிக்காவின் முதல் எதிரியாக விளங்கியவர். ஒசாமா பின் லேடன். ஆனால் இருதரப்பும் நெருங்கிக் கைகோத்த காலமும் ஒருகாலத்தில் இருந்தது.

சோவியத் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை விடுவிக்க வேண்டும் என்று தீவிரம் கொண்டிருந்தார் ஒசாமா. தான் விரும்பிய பணியை ஒசாமா செய்ய முனைந்ததில் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. காலப் போக்கில் ஒசாமாவின் படை சோவியத்தை ஆப்கானிலிருந்து வெளியேற வைத்தது. ஆனால் இதைத் தன்னுடைய வெற்றி என்று அமெரிக்கா அறிவித்துக் கொண்டது ஒசாமாவுக்குப் பிடிக்கவில்லை.

1990ல் சிறிய நாடான குவைத்தை இராக் ஆக்ரமித்தது. இதைத் தொடர்ந்து தான் ஆளும் சவுதி அரேபியாவுக்கும் சதாம் உஸேனால் ஆபத்து வரும் என எண்ணிய மன்னர் அமெரிக்காவின் ஆதரவை நாடினார். இது ஒசாமாவுக்கு கடும் எரிச்சலை அளித்தது. அமெரிக்க – சவுதி நட்பு இறுக இறுக, அமெரிக்க – ஒசாமா பகைமை அதிகமானது.

(இன்னும் வரும்..)


ஜி.எஸ்.எஸ்தொடர்வரலாற்று தொடர்ஜிஎஸ்எஸ் தொடர்ஆப்கான் வரலாறுஉலக அரசியல்

You May Like

More From This Category

More From this Author