

ஸ்ரீ மூக கவியோகி இயற்றிய ஸ்ரீ மூக பஞ்சசதீ ஸ்லோகத்திற்குத் தமிழில் விளக்கவுரையைப் பேராசிரியர் முனைவர் எஸ். செளந்தரராஜன் எழுதி வெளியிட்டுள்ளார். தனது 101-வது வயதில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். எஸ். செளந்தர்ராஜன் சென்னையில் தமது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தவர். வேதியியல் குறித்த பட்டத்தை லண்டனில் படித்தவர்.
பெங்களூரில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் வேதியியல் துறையில் முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வேதியியலைத் தனது துறையாகக் கொண்டிருந்தாலும் வேத நூல்களிலும் தத்துவ நூல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ‘திருமூலர் திருமந்திரம் ஓர் ஆய்வு’ என்ற நூலைத் தமிழில் எழுதியுள்ளார்.
எத்தனையோ ஸ்லோகங்கள் இருக்க உரை எழுத ஸ்ரீ மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதை அவர் விளக்குகிறார்:
“காஞ்சி மடத்தின் மகா பெரியவரைத் தரிசிப்பதற்காக, 1986-ம் ஆண்டு பெங்களூரிலிருந்து காஞ்சிபுரம் வந்தோம். சங்கர மடத்தில் மகா பெரியவரைச் சந்தித்தோம். அப்போது, பெரியவர் எங்களிடம் இனி பெங்களூர் செல்ல வேண்டாம் என்றும் காஞ்சியிலேயே தங்கியிருந்து, ஸ்ரீ மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தைப் படிக்குமாறும் அறிவுறுத்தினார். பெரியவரின் விருப்பம் என்பதால், அன்று முதல் காஞ்சியிலேயே தங்கி ஸ்ரீ மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தைப் படித்துவந்தோம். இந்த ஸ்லோக்தில் அர்த்தங்கள் அதிகம்.
ஆனால், எளிதில் புரியாது. இதைப் படித்தால் உனக்கு நன்மைகள் தேடி வரும் எனப் பெரியவர் அருளாசி கூறினார். இதைத் தெளிவுபடுத்தி அனைவருக்கும் புரியவைக்க வேண்டும் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, சமஸ்கிருதத்தில் இருந்த ஸ்ரீ மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தை, தமிழில் மொழிபெயர்த்து விளக்கவுரை எழுதும் பணியைத் தொடங்கினேன்.”
101-வது வயதில் இந்த அரிய பணியை முடித்து நூலாகவும் கொண்டு வந்திருக்கிறார் செளந்தரராஜன். இந்த வயதில் ஆரோக்கியத்தைப் பேண என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, “உணவுக் கட்டுபாடுகள் அதிகம் உண்டு. விரைவில் செரிமானமாகும் உணவு மற்றும் பழங்கள் ஆகியவை நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் அளிப்பவை” என்கிறார்.