

பக்தி மணம் பரப்பிக்கொண்டு பிறக்கிறது மார்கழி மாதம். மாதத்தின் பெயரைச் சொன்னவுடனே உடலெல்லாம் குளிர்கிறது. இதயத்திலெல்லாம் இதமான சுகம் படர்கிறது.
வெளியிலே உதயாதி நாழிகையிலே பாதை தெரியாத அளவு பனி முகடு கண்ணை மறைக்கிறது. பல் கிடுகிடுக்கும் அளவு சிலிர் சிலுப்பு இருந்தாலும் அகல் விளக்கு ஏற்றி வீட்டு வாயிலில் வைத்துக் கடமையாற்றும் பெண்களின் பக்தி ரசம் பார்ப்பவரைப் பரவசப்படுத்துகிறது. அக்னி ஜ்வாலையுடன் ஏற்றி வைக்கப்படும் ஒளியதனை உமிழும் அது பனிப் படர்வை உருகச் செய்யவோ?
விளக்கொளியில் வீதிக்கு வந்து வீட்டின் முன்னால் அந்த நடுக்கம் தருகிற குளிரிலும் சாணி கரைத்த நீரை வாயிலில் தெளிக்கும் காட்சி தெரிகிறது. ஆஹா! என்னே அவர்களது கலையுணர்வு! புள்ளி வைத்து வாயிலில் கோலம் போடுவதில் போட்டி! முதல் நாளே என்ன கோலம் போடுவது என தீர்மானித்து அதைத் தரையில் போட்டுப் பழகி மறுநாள் வீட்டு வாயிலில் அதை வரைந்து அரங்கேற்றிப் பெருமை கொள்வதை மனக்கண்ணில் பார்க்க முடிகிறது. கோலத்தின் மேல் அழகுக்கு அழகு சேர்க்கப் பரங்கிப் பூவை வைத்து இதயத்தில் இன்பம் வரச் செய்தல் வழக்கம்! வீடு காலையிலேயே மங்களகரமான காட்சி பெறுகிறது !
அந்த முன் பனி நேரத்திலே பக்திப் பாடல்களின் ஒலி காற்றில் மிதந்து வந்து மென்மையான சுகம் தருகிறது. ஆஹா! இதோ வெங்கடேச சுப்ரபாதம்! எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில்! தினம் கேட்டாலும் தெவிட்டாத பாடலும், குரலும்! அதை அடுத்து காதிற்கு இனிமையான விஷ்ணு சஹாஸ்ர நாமமும், கந்த சஷ்டி கவசமும்.இவைகளை ஒலிபரப்பும் கோயில்களில் இவைகளைத் தொடர்ந்து அந்தக் காலை வேளையிலேயே சிறார்களின் கோஷ்டி கானம்! என்னே அவர்களது துடிப்பும், ஊக்கமும். அவர்கள் இசைக்கும் இசையெல்லாம் இன்பத்தின் வெளிப்பாடே!
அவர்கள் இசைப்பது இன்பம் தரும் பாடல்! அவை அனைத்தும் தெய்வ சங்கீதம். ஆண்டாள் கண்ணனை கணவனாய் வரித்து அருளிய பாடல். அந்த மார்கழித் திங்களில் கண்ணபிரான் விரவியிருக்கிறார் என்று எண்ணிப் புனையப்பட்ட பாடல்கள்.
ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வோர் நாள் ஒவ்வொரு பாடலைப் பொருளுடன் பதித்து தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துகிறது. சிறார்கள் எல்லோர்க்கும் இவை மனப்பாடம்.பள்ளிகளில் இதை ஒப்புவிக்கப் போட்டி. அதில் சிறந்தோருக்குப் பரிசு. காலையில் கோயிலில் பாடி பரவசப்படுத்தும் பாலகர்களுக்குக் கை நிறைய பொங்கல்! அதை பெற்றுக்கொள்வதில் அவர்களுக்கு வரும் இன்பமே இன்பம். அதை வருணிக்க முடியாது. அதனை உணர்ந்து பார்த்தால்தான் அதன் இன்பம் புரியும். அதற்கு நாம் சிறு வயதுக்குச் சென்று மலரும் நினைவாய் அவ்வுணர்வைப் பெற்று ரசிக்க வேண்டும் .
மாதங்களில் மார்கழி என்ற கண்ணதாசனின் கவிதை உண்மையின் எதிரொலி; பனி இருந்தாலும் பெண்ணினத்தின் பெருமையை பறைசாற்றும் மாதம் இது. நடுங்கும் குளிரிலும் வீடுகளில் ஒளியை மிளிரச் செய்யும் அவர்களது ஆற்றலும், பக்தியும், கடமை உணர்வினையும் பிரதிபலிக்கும் மாதம்; சிறுவர்களின் மகிழ்ச்சிக்கும், அவர்களுக்கு ஆன்மிக உணர்விற்கான விதையினை வித்திடும் வியத்தகு திங்கள் இது என்றால் அது மிகையன்று. அத்தகைய அழகும் ஆன்மிக உணர்வும் ததும்பும் மாதத்தை இரு கை கூப்பி வரவேற்போம் !