

உலகிலேயே மிகப் பெரிய கோயிலான அங்கோர்வாட், பண்டைய ‘காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டில் உள்ளது. உலகின் எட்டாவது அதிசயம் எனப் புகழப்படும் அங்கோர்வாட், உயர்ந்து, நிமிர்ந்து, வானளாவ நின்று நம் இந்தியக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது.
முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக காம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடுகளை அங்கே பரப்பினர். அப்போது காம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1400) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற கோயில்கள் உருவாக்கப்பட்டன. அங்கோர் என்ற நகரம் அந்நாளில் ‘க்மேர்' பேரரசின் தலைநகரமாக விளங்கியது. ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் வசித்த இவ்வூர், உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
ஆயிரம் லிங்க நதி
இங்கு அரசாண்ட மன்னர்கள் சைவம், வைணவம் ஆகிய மதங்களைக் கடைப்பிடித்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் சிவபக்தனாக விளங்கினான். நாம்குலேன் என்ற மலையில் பல சிவலிங்கங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றவன். ‘பால் ஸ்பீன்' (Khbal Spean) மற்றும் ‘நாம் குலேன்' (Khnam Kulen) என்ற மலைகளில் ஓடும் நதி ' ‘ஆயிரம் லிங்க நதி' எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும் பலவகை பூச்சிகளும் நிறைந்த கரடுமுரடான காட்டு மலைப்பாதையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரே வடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
நாம்குலேனில் ஒரு அழகிய அருவியும், புத்தர் ஆலயமும் உள்ளது. இம்மலையில்தான் இரண்டாம் ஜெயவர்மன் தன்னை 'இறையரசன்' என்று அறிவித்தான்.
இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆனதாம். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இந்து மதத்திலிருந்து மகாயான புத்த மதத்தைத் தழுவி அங்கோர்வாட் ஆலயத்தின்னுள்ளிருந்த இந்துக் கடவுள்களை அகற்றி புத்தரின் திருவுருவங்களை நிறுவினான். அவனுக்குப் பின் கடைசியாக ஆட்சி செய்த எட்டாம் ஜெயவர்மன் மீண்டும் இந்து மதத்தைப் பின்பற்றி இந்துக் கடவுள்களைப் பிரதிஷ்டை செய்தான்.
சீர்குலைந்த கம்போடியா
பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சயாம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளால் கம்போடியா அடிக்கடி தாக்கப்பட்டது. சீர்குலைந்து, சிறப்புகளை இழந்து காடுகளுக்குள் மறைந்தும் போனது. அவ்வழியே யாத்திரை சென்ற புத்த பிட்சுக்கள் இந்த ஆலயத்தைத் தியானம் செய்யும் இடமாகக் கொண்டனர். பல நூறு ஆண்டுகள் காடுகளுக்குள் காணாமல் போயிருந்த அங்கோர்வாட் ஆலயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை மேற்கத்தியரான ‘ஹென்றி மோஹாட்' என்பவரையே சேரும். 1860-ல் அவர் கண்டுபிடித்த பின்பே, அங்கோர்வாட் ஆலயங்களின் பெருமையும், அழகும் வெளியுலகத்துக்குத் தெரிந்து, சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறியது.
அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', ‘கடவுளின் நகரம்' என்று பொருள். 500 ஏக்கர் அளவில் விரிந்திருக்கும் இந்தக் கோயில், மேரு மலைக்கு இணையாகக் கூறப்படுகிறது. 65 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய கோபுரங்களைக் கொண்ட இதன் சுவர்கள் மணற்பாறைகளால் கட்டப்பட்டவை.
சிங்க நுழைவாயில்
இரண்டு சிங்கங்களைக் காவலாகக் கொண்ட மேற்கு வாயில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடக்க பாலம் உள்ளது. நீண்ட ஐந்து, ஏழு தலை நாகங்களைக் காவலாகக் கொண்டு, நீண்ட பிரகாரங்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள், கல்தூண்களால் கட்டப்பட்ட வரிசையான ஜன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் கொண்ட அமைப்பு, வியக்க வைக்கிறது.
உள்ளே சென்றதும் அங்கு காணப்படும் சிற்பக் கலை மெய்மறக்கச் செய்கிறது. வித்தியாசமான வடிவங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சதுர வடிவ ஜன்னல்களும், பூக்கள் வரையப்பட்ட மேல் விதானங்களும் நம் கண்களுக்கு அற்புதமான விருந்து. மூன்று நிலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரமும், அதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு கோபுரங்களும் மேரு மலையைக் குறிக்கின்றன. சூரிய வர்மனின் தலைநகரமாக விளங்கிய ‘அங்கோர்வாட்', விஷ்ணுவின் ஆலயமாகும்.
- அங்கோர்வாட் விஷ்ணு
ஆலயச் சுவர்களில் ‘அப்சரஸ்' எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றங்களைக் காணலாம். கோபுர நுழைவு வாயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் மட்டும் 2000 அப்சரஸ் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயத்தில் மட்டும் 8 கைகள் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை காணப்படுகிறது. அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதங்களையும் மாறிமாறிப் பின்பற்றியதால் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் மகாவிஷ்ணு சிலை வித்தியாசமாகக் காணப்படுகின்றது. பிரதான தெய்வமாக சிவனும், மகாவிஷ்ணுவுமே இருந்திருந்தாலும், இன்று அங்கு இந்துக்களே இல்லாததால் அவ்வாலயங்களில் இறைவனும் இல்லை; வணங்குவதற்கு மக்களும் இல்லை.
அன்றைய நாடு கடந்த இந்து மதத்தின் சிறப்பான சான்றாக மட்டுமே இவ்வாலயங்கள் நிற்கின்றன. இடையில் பவுத்த மதமும் பரவியதன் காரணமாக இடைப்பட்ட மன்னர்களால் அந்த ஆலயங்கள் புத்தவிஹாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல இடங்களில் புத்த பெருமானின் சிலைகளே உள்ளன. புத்த குருமார்களும் நிறைய காணப் படுகிறார்கள். ஒன்பது, பத்து,
பதினொன்றாம் நூற்றாண்டுகளில் ஆண்ட அடுத்தடுத்த மன்னர்களால் கட்டப்பட்ட அங்கோர்தாம், பேயான், டா ப்ரோம், ப்ரேவிஹார், ப்ரே ரூப், நாம் பேகங், பன்ட்டி ஸ்ரே, பன்ட்டி க்டேய், பபுவான் என்று நம்மை வியக்க வைக்கும் ஆலயங்கள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது அங்கோர்வாட்தான். ஆகவேதான் சியாம்ரீப்பைச் சுற்றியுள்ள இந்த ஆலயங்கள் அனைத்தையும் மொத்தமாக அங்கோர்வாட் ஆலயங்கள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
பேயான் பாணி கோயில்கள்
ஏழாம் ஜெயவர்மன் கட்டிய ஐந்து வாயில்களைக் கொண்ட பேயான் ஆலயத்தில் ‘அவலோகிதேஸ்வரா' என்ற புத்தரின் நான்குமுக கோபுரங்கள் 54. இவற்றில் காணப்படும் 216 முகங்களும் புத்தரின் உருவங்கள் எனப்படுகின்றன. நான்கு முகங்களும் ஒவ்வொரு முகபாவம் காட்டுவது இதன் சிறப்பு. தற்சமயம் இதில் 37 கோபுரங்களே காணப்படுகின்றன. அங்கோர்வாட் ஆலய பாணியிலிருந்து வித்தியாசமாக அமைக்கப்பட்டவை இந்த பேயான் பாணி கோவில்கள்.
‘பன்ட்டி ஸ்ரே ' ஆலயம் ' பெண்களின் கோட்டை' எனப் புகழ் பெற்றது. இங்குள்ள நுழைவுவாயில் சிற்பங்கள் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. கம்ச வதம், காளிய நர்த்தனம், சிவபார்வதி சிற்பங்கள் அழகானவை.
‘ப்ரஸாத் க்ராவன்' என்ற ஆலயம் முதலாம் ஹர்ஷவர்மனால் மகாலட்சுமிக்காக உருவாக்கப்பட்டது. ஐந்து கோபுரங்கள் வரிசையாக அமைந்து ஒரு தாமரை போல் காணப்படும் இவ்வாலயத்தில், இன்னமும் ஓவியங்கள் அழியாமல் காட்சி தருவது இதன் சிறப்பு.
இந்த ஆலயங்களைக் கட்டுவதற்கான கற்களை நாம் குலேன் மலையிலிருந்து கொண்டு வந்ததால், அவற்றை எடுத்துவர அனைத்திலும் துளைகள் இடப் பட்டுள்ளது. மன்னர்களின் கலை ஆர்வம் நம்மை வியக்க வைக்கிறது.காட்டு மரங்களின் வேர்களும் கிளைகளும் ஆலயத்துடன் பின்னிப் பிணைந்து ஒரு அதி அற்புத இயற்கைக் காட்சியாக விளங்குகிறது. இவ்வாலய சீர்திருத்தப் பணியில் இந்தியாவும் பங்கு பெற்றுள்ளது. சிதிலமடைந்த இடங்கள் மட்டும் சீர்திருத்தப் படுகின்றன.
அங்கோர்வாட்டின் அற்புத ஆலயங்களை ஆற அமர ரசிப்பதற்கு மூன்று நாட்கள் தேவை. இந்தியாவிலிருந்து அங்கோர்வாட் கோயில்கள் அமைந்துள்ள சியாம் ரீப்பிற்கு சிங்கப்பூர், மலேசியா வழியாகச் செல்லலாம். அங்கோர்வாட் சுற்றுலா பயணம் நிச்சயம் ஒரு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தைத் தரும்.