Last Updated : 25 Dec, 2014 10:17 AM

 

Published : 25 Dec 2014 10:17 AM
Last Updated : 25 Dec 2014 10:17 AM

பைரவியுடன் ஒரு இனிய பயணம்

மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதினை இந்த ஆண்டு பெறும் 83 வயது இளைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன். , எர்ணாகுளத்திற்கு அருகில் அமைந்த ஒரு சிறிய ஊர் திருப்பூனித்துரா. அந்த ஊரிலிருந்து இந்த விருதினைப் பெறும் மூன்றாவது கலைஞர் இவர். ஏற்கெனவே சங்கீத கலாநிதி விருது பெற்ற வயலின் கலைஞர் டி.என். கிருஷ்ணன், வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.கே.கோவிந்த ராவ் ஆகியோரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற புதனன்று அகாடமியில் பளிச்சென்ற வெண்மை நிறத்தில் வேஷ்டி, சட்டை சகிதமாக 150 நிமிடங்கள் கொஞ்சமும் கூன் போடாமல் நேராக உட்கார்ந்து டிவிஜி பாடியது, இன்றைய இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடம்.

டிவிஜி ஒரு பன்முகக் கலைஞர். மிருதங்கம் வாசித்து ஒரு தனிப் பெயரை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அன்று பாடியபொழுது, இசையில் அசாத்திய முதிர்ச்சி தெரிந்தது. செம்பை, பாலமுரளி கிருஷ்ணா, வீணை பாலசந்தர் போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு வாசித்ததின் பலனாக அவர்களிடம் கேட்டதெல்லாம், அவருள் ஊடுருவி ரத்தத்தில் கலந்து, பாட்டாக வெளிப்படும்பொழுது ஒரு முழுமை தெரிந்தது.

அன்று அவர் பாடிய கல்யாணியும் தோடியும் இந்த வகையைச் சாரும். குரல் வளத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பயிலரங்கமே நடத்தலாம் டிவிஜி. டிவிஜி ராகங்களின் ஆலாபனையின்பொழுது, ஒரு இளைய வித்வானின் சுறுசுறுப்புடன் செயல்பட்டார். ஒரு தேடலும் இருந்தது.

வயலின் வாசித்த எஸ். வரதராஜன், டிவிஜியின் மாணவர். அவரது வாசிப்பு, குருவைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது. ராகங்களின்பொழுது, எந்த விதமான பரபரப்பும் இல்லாமல், ஒவ்வொரு ஸ்வரத்தையும் கொஞ்சி வெளிக்கொணர்ந்தது அலாதியாக இருந்தது.

பத்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்) விரல்களைக் கொண்டு ஒரு மாய வலையைப் பின்னி, அனைவரையும் மயக்கினார். தனி ஆவர்த்தனத்தில் `தொப்பி’யில் அவர் செய்த சாகசங்கள் டிவிஜியிடமிருந்து பாராட்டைப் பெற்றன. கடம் வாசித்த திருப்பூனித்துரா ராதாகிருஷ்ணன் சதீஷுக்கு ஈடுகொடுத்து வாசித்தார்.

வசியம் செய்த குரல்

இந்த வருடம் தி.நகர் தொகுதிக்கு யோகம் அடித்தது. டிசம்பர் இசை விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ முறையே வாணி மஹால், பாரத் கலாச்சார், கிருஷ்ண கான சபா ஆகியவற்றிற்குத் தேதி கொடுத்திருந்தார். ஆனால் வாணி மஹால் கச்சேரியை உடல் நலக் குறைவால் ரத்து செய்துவிட்டார். சரியாக ஒரு வாரம் கழித்து, உடல் தேறி, பாரத் கலாச்சாரில் தோன்றினார். அரங்கம் நிறைந்திருந்தது ஜெயஸ்ரீக்கு உற்சாகத்தை அளித்திருக்க வேண்டும்.

மலையமாருதத்தில் சஞ்சாரம் நன்றாக செய்து தனது குரலின் அன்றைய நிலையை நிர்ணயம் செய்துகொண்டு அருணாச்சல கவிராயரின் `ஹனுமானே ஸ்வாமிக்கு’ பாடலுக்குச் சென்றார். வயலின் வாசித்த ஹெச்.என்.பாஸ்கருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. வேகவேகமாக ராகத்தினை வாசித்தது நிகழ்ச்சியின் போக்குக்கு மாறாக இருந்தது. ஜெயஸ்ரீயின் நிரவல் நிறைவாக இருந்தது. ஸ்வரக் கோர்வையில் வழக்கத்துக்கு மாறாகக் குரலைத் தூக்கிப் பாடினார்.

கிரிக்கெட்டில் பந்து வீசுபவர் திசை மாற்றத்தை விரும்பும்போது, இன்னொருவரை அந்தத் திசையில் ஒரு ஓவர் வீசச்செய்து திசையை மாற்றுவார்கள். End change bowler என்று இவரைக் கூறுவார்கள். அதுபோல், நமது இசைக் கச்சேரிகளிலும் முக்கியமான ராகங்களை விஸ்தாரமாகப் பாடுவதற்கு முன்பு ஒரு பாட்டை மத்திய வேகத்தில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுண்டு. அன்று, ஜிஎன்பி இயற்றிய `கமல சரணே’ அந்தப் பெருமையைப் பெற்றது.

அடுத்தது, பைரவி. முதல் சங்கதியிலேயே ராகத்தைக் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. ஜெய அன்று ஒரு `பர்ன்’ பிடியைப் பிடித்து, பைரவியை அறிமுகம் செய்தார். அடுத்து `பைரவியுடன் ஒரு இனிய பயணம்’ என்று கட்டுரை எழுதும் அளவிற்குப் பாடித் தீர்த்தார். பயணத்தின்பொழுது `ரக்ஷ பெட்டரே’ கிருதியைத் தான் கையாளப் போவதை சூசகமாக தெரிவித்தார்.

பாஸ்கரின் அவசர கதியில் மீண்டும் வாசித்தது, ஒரு பழைய படத்தை நினைவுபடுத்தியவண்ணம் இருந்தது. ஸ்ரீப்ரியா நடித்தது என்று ஞாபகம். நிரவல் ஸ்வரம் முடிந்து தனி விடப்பட்டது. இரண்டாவது சுற்றில் மனோஜ் சிவாவின் தாள வேலைப்பாடுகள் திஸ்ர கதியில் அவர் காட்டிய டேக்காக்கள், அபாரம்.

அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா), தனது தாத்தா வி.நாகராஜனின் வழியில் இரண்டாவது சுற்றில் திஸ்ரத்தில் சதுஸ்ரம் செய்து ஆச்சர்யப்படுத்தினார். தனி முடிந்தவுடன், திருமதி ஒய்ஜிபி வழக்கம்போல் நன்றி நவின்றார். தொடர்ந்து அழகான குந்தலவராளியையும் வசந்தாவையும் பிழிந்துகொடுத்தார் ஜெயஸ்ரீ. மிகவும் பழமைவாய்ந்த ராகங்கள் இப்பொழுது பின்னே தள்ளப்பட்ட நிலையில் உள்ள குறிஞ்சி மற்றும் நாதநாமக்ரியாவை அழகிய மாலையாகத் தொடுத்தளித்தார்.

ஜெயஸ்ரீக்கு ஒரு வேண்டுகோள், இந்த மாதிரி புழக்கத்தில் இல்லாத தாளங்களில் பல்லவி பாடும்போது, ஒருமுறை ரசிகர்களுக்குப் போட்டுக் காட்டி, அதன் பெயரையும் அறிவித்துவிடுங்கள். ரசிகர்கள் சர்ச்சை பண்ணுவதை விட்டுவிட்டு, தங்களோடு பயணிப்பார்கள்.

நிகழ்ச்சி முடியும் நேரம் நெருங்க, தேஷ் ராகத்தைக் கையாண்டு, ரசிகர்களைக் கட்டிப் போட்டார். என்ன ஒரு அசைவு, குழைவு. தொண்டைக்குள் தேனையும் வெண்ணையையும் தடவிக் கொள்வீர்களோ!

பாரதியார், ராதையை, அன்னை பராசக்தியாக பாவித்தெழுதிய பாடல் தமிழ் சமஸ்கிருதம் கலந்தது `தேஹிமுதம் தேஹி’ ஜெயஸ்ரீக்கே உரித்த தனித் தன்மையோடு இருந்தது.

1987 என்று நினைக்கிறேன். ஒருநாள் மதியம் ஒரு மணியளவில் என் நண்பன் தொலைபேசியில் என்னை அழைத்து, “உடனே சுவாமி சங்கரதாஸ் கலை அரங்கத்துக்கு புறப்பட்டு வா.. பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் பாடுகிறாள். முதல் பாட்டே அசத்தலாக இருக்கிறது” என்றான்.

நானும் அதிகாரியிடம் ஏதோ ஒரு சாக்குச்சொல்லிவிட்டு விரைந்தேன். நண்பன் சொன்னது உண்மை என்று உணர்ந்தேன். இந்தப் பெண்ணிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதும் தோன்றியது.

அந்தப் பெண்தான் பாம்பே ஜெயஸ்ரீ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x