Last Updated : 04 Dec, 2014 12:33 PM

 

Published : 04 Dec 2014 12:33 PM
Last Updated : 04 Dec 2014 12:33 PM

அதோ கேட்கிறது பனி வண்டியின் மணியோசை

கற்பனையோ நிஜமோ மனித குல வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதாபாத்திரங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குத் தனிக் கௌரவம் உண்டு. காரணம் உலகம் முழுவதும் உள்ள பிள்ளைகளால் மத வேறுபாடுகளைக் கடந்து அவர் நேசிக்கப்படுகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் மூன்று வாரங்களுக்கு முன்பே பிரான்ஸ் நாட்டிலுள்ள அஞ்சல் நிலையங்களில் தபால்கள் வந்து குவியத் தொடங்குகின்றன. ஐந்துமுதல் பத்து வயதுக்கு உட்பட குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பரிசுப் பொருள் என்ன என்பதை எழுதி. கடிதத்தின் செல்லிட முகவரிக்கான பகுதியில் ‘சாண்டா கிளாஸ், வட துருவம்’ என்று எழுதி அஞ்சல் பெட்டிகளில் போட்டுவிடுகிறார்கள். இதைப் படிக்கும் அவர், கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு அவர்கள் விரும்பும் பரிசுப் பொருட்களைக் அவர்களது காலுறைக்குள் வைத்துவிட்டுச் செல்வதாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ் தவப் பிள்ளைகள் நம்புகிறார்கள்.

சாண்டாவுக்கு பதிலாகப் பிள்ளைகள் விரும்பும் பரிசைப் பெற்றோர்கள்தான் வாங்கி வைக்கிறார்கள் என்பது நிதர்சனமாக இருந்தாலும், சாண்டாவின் அன்புக்காக அவர் கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கியப் பங்கேற்பாளராக மாறிவிட்டார். அவரது பெயரால் ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதியை ‘புனித சாண்டா கிளாஸ்’ திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

யார் இந்த சாண்டா கிளாஸ்?

அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் “ ஹூ ஹூ ஹூ..” என்ற அவரது சிரிப்பொலியும் வசீகரமானவை. கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் “கிறிஸ்துமஸ் தாத்தா” என்று மகிழ்ச்சியில் குழந்தைகள் கூச்சலிடுவார்கள்.

அப்படிப்பட்டவர் பென்குயின்கள் வாழும் வட துருவத்தில் வசிப்பதாக நம்புகிறார்கள் குழந்தைகள். எட்டுக் கலைமான்களால் இழுத்துச் செல்லப்படும் பனிச் சறுக்கு வண்டியை ஓட்டியபடி வானில் பறந்து வருபவர். இவரது வண்டியில் சின்னஞ்சிறு கிங்கிணி மணிகள் கட்டப்பட்டிருப்பதால் வண்டியின் மணியோசை காதுக்கு இனிய கானமாக இருக்கும். இத்தனை வர்ணனைகளோடு வாழும் இந்த சாண்டா கிளாஸ் யாரென்று வரலாற்றைத் துருவினால் வந்து விழும் பெயர் புனித நிக்கோலஸ்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மிரா என்று அழைக்கப்பட்ட இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்து மறைந்த கத்தோலிக்கப் பாதிரியார்தான் புனித நிக்கோலஸ். பெருந்தன்மையும் கருணையும் நிரம்பியவரான இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர் என்று மரபுவழியான கதைகள் கூறுகின்றன.

பாதிரியார்கள் எப்பொழுதும் தம்மிடம் நிறைய உணவுப் பொருட்களை வைத்திருப் பார்கள். தன்னைக் காண வரும் ஏழைகளின் பசிப்பிணி போக்க நினைப்பார்கள். ஆனால் சாண்டா கொஞ்சம் மாறுபட்டுக் குழந்தைகளுக்குப் பரிசுகொடுத்து அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பூரித்திருக்கிறார். திடீர் திடீரென்று குழந்தைகளைச் சந்தித்துப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டும் வழக்கத்தை சாண்டா பின்பற்ற, அவரைக் குழந்தைகளின் புனிதர் என அழைக்க ஆரம்பித்தார்களாம் மக்கள்.

இன்றைய சாண்டாவுக்கு அடிப்படை

1823-ம் ஆண்டில் கிளெ மெண்ட் கிளார்க் மூர் என்பவர் தமது குழந்தைகளுக்காக எழுதிய ஒரு பாடலில் நிக்கோலஸ் பரிசுகளுடன் வந்துசெல்லும் கிறிஸ்துமஸ் இரவை வருணித்து எழுதியிருந்தார். இந்தப் பாடலின் அடிப்படையிலும், வாஷிங்டன் நகரில் வாழ்ந்து மறைந்த இர்விங் என்பவர் எழுதிய ‘செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற நூலின் அடிப்படையிலும் 1863-ம் ஆண்டு தாமஸ் நஸ்ட் என்ற ஓவியர் சாண்டா கிளாசின் உருவங்களை விதவிதமாக வரைந்து தள்ளினார். இன்றைய சாண்டா கிளாஸ் உருவத்துக்கு இந்த ஓவியங்களே அடிப்படையாக அமைந்து விட்டன.

தாத்தாவின் தாடிக்குத் தீ

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங் களில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட கிறிஸ்துமஸ் தாத்தாவின் கொடும்பாவிகளை 1951, டிசம்பர் 23 அன்று பாரிஸ் நகரில் எரித்தார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்ப்பதாகவும், கிறிஸ்மஸின் புனிதத் தன்மையை அவரை முன்னிறுத்தும் கொண்டாட்டம் குலைப்பதாகவும், கொடும்பாவிகளை எரிக்கச் செய்த பாதிரிகள் கொதித்தெழுந்து கூறினார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்கள், இயேசு பிறப்பின் ‘அவதார அர்த்த’த்திலிருந்து மக்கள திசை திருப்புவதாகப் பிரெஞ்சு பாதிரிகள் அன்று உணர்ந்ததன் எதிரொலியாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டன. ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் மீறி சாண்டாவுக்காகக் குழந்தைகள் காத்திருப்பது கிறிஸ்துமஸின் பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது. கொடும் பாவிகளில் பற்றிய நெருப்பு அணைந்து விட்டது. கிறிஸ்துமஸ் தாத்தா இன்னமும் உயிரோடு இருக்கிறார்.அதோ பனிச்சறுக்கு வண்டி வரும் ஓசை கேட்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x