

ஒரு நகரத்தில் பெரும் தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். அவர் பெயரில் நிலபுலன்கள், வாடகை வரக்கூடிய கட்டிடங்கள், வங்கிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், பங்கு சந்தையில் முதலீடு எனச் செல்வ வளம் இருந்தது. அவருக்கு எவ்விதக் குறையுமில்லை. அத்துடன் திடகாத்திரமான உடலையும் கொண்டவர் அவர்.
சிறிது நாட்களாகவே அவரின் முகம் வாடி இருந்தது. மனதில் அமைதி இல்லை. அதன் விளைவாக அவரின் உடல் நலிவடைந்து விட்டது. கண்கள் குழி விழுந்து முகம் ஒட்டி உடல் குச்சி போல ஆகிவிட்டது. எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் செய்து பார்த்தார்கள். அவருக்கு எந்த நோயுமில்லை எனக் கூறிவிட்டனர். போகாத புனிதத் தலங்களில்லை. நேர்ச்சைகளுக்கும் குறைவில்லை . ஆனாலும் உடல் தேறியபாடில்லை.
ஒரு நாள் அந்த வணிகரை நலம் விசாரிக்க அவரின் நீண்ட கால நண்பர் வந்தார். விஷயங்களை அறிந்துகொண்ட அந்த நண்பர் தொலைவில் உள்ள மலையடிவார கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெரியவரைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார். அவரைப் போய் ஒரு நடை பார்த்து வருமாறும் பரிந்துரைத்தார்.
மகானும் வணிகரும்
அடுத்த நாளே கையில் ஒரு பொதியுடன் அந்த மலையடிவாரக் கிராமப் பெரியவரின் முன்னிலையில் நின்றார் வணிகர். அந்தப் பெரியவரின் கைகளை இறுகப் பற்றியவாறே தன்னுடைய உடல் நலிவைப் பற்றி கண்ணீர் நிறைந்த கண்களுடன் எடுத்துரைத்தார்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். முறைப்பாடு முடிந்தவுடன் வணிகர் தன் கையோடு கொண்டு வந்திருந்த சிறுபொதியை அந்தப் பெரியவரின் முன் காணிக்கையாக வைத்தார். அந்தப் பொதிக்குள் பணக்கட்டுகளும், தங்க நாணயங்களும் , வெள்ளிக்கட்டியும் இருந்தன.
குதித்தோடிய மகான்
வணிகர் அந்த காணிக்கைப் பொதியைக் கீழே வைத்ததுதான் தாமதம் அந்தப் பெரியவர் அதைத் தூக்கிக் கொண்டு தனது குடிலை விட்டு வெளியில் பாய்ந்து ஓடினார். பெரியவரின் இந்தச் செயலைப் பார்த்துத் திகைத்துப்போன வணிகர் திடுக்கிட்டுப் போய், “அய்யோ என் பை, அய்யோ என் பை” எனக் கூச்சலிட்டவாறே பெரியவரைத் துரத்திக்கொண்டு சென்றார்.
மான் போல் துள்ளி ஓடிய பெரியவரை வணிகரால் பிடிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் பெரியவர் அந்தப் பொதியை ஒரு புதரில் வீசி விட்டு ஓடத் தொடங்கினார். பாய்ந்து போய் அந்தப் பொதியைக் கைப்பற்றிக் கொண்ட வணிகர் “அப்பாடா” எனப் பெருமூச்சு விட்டார். பொதி கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இப்போது அவர் முன் தோன்றிய பெரியவர், “ வணிகரே, சிக்கல் வேறு எங்கும் இல்லை. அது உங்களுக்கு உள்ளேதான் இருக்கிறது. பணப் பொதியை மனதிற்கு மேலே வைக்காமல் அதனை மனதிற்கு கீழே வையுங்கள். சுமைகள் இறங்கி விடும்.” என அறிவுரை கூறி வழியனுப்பினார் .
அந்தத் தொழிலதிபரின் உடல் சீரானது.