

முல்லா, காவலாளியாகப் பணிக்குச் சேர்ந்திருந்தார். அவருடைய முதலாளி, அவரை அழைத்து, மழைப் பெய்கிறதா என்று பார்த்து வருமாறு சொன்னார். தான் போட்டிருந்த மேலங்கி, மழையில் நனைந்தால் பாதிப்படைந்துவிடுமென்பதால் அப்படிக் கேட்டார்.
தன் இடத்துக்கு வந்த முல்லாவுக்கு வெளியே போய்ப் பார்க்கச் சோம்பலாக இருந்தது. அத்துடன், தனக்குத் தானே சலுகையை எடுத்துக்கொண்டார். வெளியே போய்ப் பார்க்கவில்லை. அப்போது, ஒரு பூனை வெளியிலிருந்து உள்ளே நுழைந்தது.
அதன் தேகம் நனைந்திருந்தது. ‘எஜமானரே, வெளியே கடும் மழைப் பெய்கிறது’, என்று முல்லா ஓடிப்போய் தனது எஜமானரிடம் கூறினார்.
எஜமானர், மீண்டும் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே சென்றார்.
ஆனால், மழை பெய்யவில்லை. பூனையின் மீது யாரோ தண்ணீர் ஊற்றியிருந்ததால், அது நனைந்திருக்கிறது.
முல்லாவுக்கு உடனடியாக வேலை பறிபோனது.
பின்னாலிருந்து முன்னால்…
சில மாணவர்கள் முல்லாவைச் சந்திக்க வந்தனர். அவர்கள் முல்லாவின் பாடங்களைத் தாங்கள் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தனர். முல்லா அவர்களுக்கு தனது ஒப்புதலை வழங்கினார். அவர்கள் வகுப்பறைக்கு முல்லாவின் பின்னால் நடந்துசென்றனர். ஆனால், முல்லா கழுதையின் வால் பக்கம் திரும்பி அமர்ந்திருந்தார்.
சுற்றியிருந்தவர்கள் முல்லாவை ஒருமாதிரியாகப் பார்த்தனர். அவர்கள் முல்லாவை முட்டாள் என்றும், அவரைப் பின்பற்றும் மாணவர்களை அடிமுட்டாள்கள் என்றும் கருதினர். என்ன இருந்தாலும், யாராவது கழுதையின் பின்னாலிருந்து சவாரி செய்வார்களா?
கொஞ்ச நேரத்தில், முல்லாவின் செய்கையால் அசவுகரியத்தை உணர்ந்த மாணவர்கள் அவரிடம்:
‘ஓ முல்லா! அனைவரும் நம்மை பார்க்கிறார்கள். ஏன் இப்படி கழுதையை ஓட்டுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.
முல்லா முகத்தைச் சுழித்தார். ‘நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைவிட, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிதான் நீங்கள் அதிகம் யோசிக்கிறீர்கள்’ என்றார்.
‘நான் உங்களுக்கு விளக்குகிறேன். நீங்கள் எனக்கு முன்னால் நடந்தால், அது என்னை அவமதிப்பதாக இருக்கும். ஏனென்றால், உங்கள் முதுகை எனக்குக் காட்டியபடி நடப்பீர்கள். நான் பின்னால் நடந்தாலும், அதுவேதான் நடக்கும்.
என் முதுகைக் காட்டியபடி, உங்களுக்கு முன் நடந்தாலும், அது உங்களை அவமதிப்பதாக ஆகிவிடும். அதனால், இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு இது ஒன்றுதான் வழி’ என்று சொன்னார் முல்லா.