Published : 04 Jul 2019 12:14 pm

Updated : 04 Jul 2019 12:14 pm

 

Published : 04 Jul 2019 12:14 PM
Last Updated : 04 Jul 2019 12:14 PM

தெய்வத்தின் குரல்: தலபுராணங்களின் உண்மைத்துவம்

வேதத்தில் என்ன சொல்லியிருந்தாலும் அது சத்தியம் என்று நம்ப வேண்டும் என்பதுபோல, சைவ – வைஷ்ணவங்களுக்குத் தமிழ் வேதமாக உள்ள தேவார-திவ்யபிரபந்தங்களில் சொல்லியிருப்பதை நாம் உண்மையென்று ஒப்புக்கொள்ள வேண்டும். அநேக க்ஷேத்ரங்களில் பாடப்பெற்ற தேவாரங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அந்தந்த தலபுராண விஷயங்கள் வருகின்றன. 1,500 வருஷங்களுக்கு முந்தைய இந்த தேவார – திவ்யபிரபந்தங்களிலேயே ஸ்தல புராணக் குறிப்புகள் இருப்பது அந்தப் புராணங்களின் பழமைக்குச் சான்றாக இருக்கிறது.

உதாரணமாக, ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வேறு எந்த ஊரிலும் இல்லாத மாதிரி தெற்கே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அந்த க்ஷேத்திர புராணத்தில் காரணம் சொல்லியிருக்கிறது. ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு விபீஷணன் இலங்கைக்குத் திரும்பிப் போனபோது, ராமர் தான் வழிபட்டு வந்த ரங்கநாத விக்கிரகத்தை அவனுக்குக் கொடுத்தாரென்றும் அதுதான் ஒரு காரணத்தால் அவன் போகிற வழியில் உபயகாவேரிக்கு நடுவே ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டையாகி விட்டதென்றும், தன்னோடு இலங்காபுரிக்கு எடுத்துப்போக முடியவில்லையே என்று துக்கப்பட்ட விபீஷணனைத் திருப்திப்படுத்தவே, ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் என்றும் ஸ்ரீரங்க தலபுராணத்தில் விரிவாகக் கதை சொல்லியிருக்கிறது. இந்த விஷயத்தை ஆழ்வார்கள் தங்கள் பாட்டில் சொல்கிறார்கள்.


மஹாவிஷ்ணு, தெற்கே பார்த்திருப்பதற்குப் புராணம் சொல்கிற காரணம் ஆழ்வார் காலத்திலேயே நிச்சயமாக இருந்திருக்கிறதென்றால் அந்தப் புராணம் அதற்கும் முந்தியதாகத்தானே இருக்க வேண்டும்?

அம்பாள் பூஜை செய்த லிங்கம்

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் அம்பாளே பிடித்து வைத்துப் பூஜை பண்ணிய பிருத்வி [மண்ணாலான] லிங்கம்; ஸ்வாமி அவள் பூஜை பண்ணுகிறபோது பெரிய வெள்ளத்தைப் பிரவகிக்கச் செய்தும் அவள் விடாமல் லிங்கத்தைக் கட்டிக்கொண்டாள்; அதிலிருந்து சுவாமியே ஆவிர்பவித்தார் – என்று தலபுராணத்தில் இருப்பதைத் தேவாரமும் சொல்கிறது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஏகம்பத்தில் பாடிய தேவாரத்தில் பாட்டுக்குப் பாட்டு அம்பாள் பூஜை பண்ணின மகிமையைச் சொல்கிறார்.

ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்கா) ஜம்பு மஹரிஷி என்பவர் ஜம்பு (நாவல்) விருக்ஷமாக ஆக, அதன் கீழேயே ஈஸ்வரன் வந்து கோயில் கொண்டார். அங்கே லிங்கத்துக்கு ஒரு சிலந்தி பந்தல் போட்டுப் பூஜித்தது. இந்த பந்தலை அறுத்துக் கொண்டு ஒரு யானை, லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணியது. இதனால் சிலந்திக்கு ஆத்திரம் வந்து யானையின் தும்பிக்கைக்குள் புகுந்துகொண்டு அதன் மண்டைக்குள் போய்க் குடைந்தது. அப்போது யானை மண்டையை மோதிக்கொண்டு தானும் செத்து சிலந்தியையும் சாக அடித்துவிட்டது. இந்தச் சிலந்திதான் பிற்பாடு கோச்செங்கட் சோழனாகப் பிறந்து ஜம்புகேச்வர ஆலயத்தைக் கட்டிற்று. இந்தக் கதையைத் தலபுராணம் சொல்கிறது.

என்ன ஆதாரம் வேண்டும்?

இத்தனைக்கும் தேவாரத்திலேயே குறிப்பு இருக்கிறது. மூலஸ்தானத்தில் எப்போதும் காவேரி ஊற்று இருக்கும்படியான அற்புத ஸ்தலம் அது என்பதற்கு அப்பர் தேவாரம் ஒன்றில் பத்துப் பாட்டிலும் குறிப்பு இருக்கிறது.

திருக்கழுக்குன்றத்தில் தினமும் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கிற சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போகிறதல்லவா? இது நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். இந்த ஊர் பேரே தேவார காலத்திலிருந்து “கழுக்குன்றம்” என்று இருக்கிறது. இதைவிடப் பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?

திருவிடைமருதூரில் தைப்பூச ஸ்நானம் விசேஷமானது என்று க்ஷேத்ர மஹாத்மியத்தில் சொல்லியிருக்கிறது என்றால், இந்த விசேஷத்தை சுமார் 1,300 வருஷங்களுக்கு முன்பு அப்பரும் சம்பந்தருமே பாடியிருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம், ஜம்புகேச்வரம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர் போன்ற மஹாக்ஷேத்ரங்கள் புராதனமாக பிரசித்தமானதால் அவற்றைப் பற்றிய புராண வழக்குகள் பழைய தமிழ் நூல்களில் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று தோன்றலாம். சின்ன சின்ன க்ஷேத்ரங்களில் உள்ள சின்னப் புராண ஐதிகங்களுக்குக்கூடப் பழைய தமிழ் மறைகளில் குறிப்பு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பிரசித்தியடையாத சில க்ஷேத்ரங்களில் ரிஷிகளோ தேவர்களோ வண்டுகளாக இருந்து பூஜை பண்ணியதாக, தலபுராணங்களில் இருக்கிறது. இப்போதும் அந்த ஊர்களில் சன்னிதியிலேயே பெரிய தேனடைகள் இருந்து கொண்டிருக்கின்றன. நன்னிலத்தில் இப்படி இருக்கிறது. ‘மதுவனம்’ என்றே அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் சித்தாம்பூர் என்று சொல்கிற ஊர் இருக்கிறது.

இதற்கு தேவாரத்தில் திருச்சிற்றேமம் என்று பெயர். இங்கேயும் சுவாமி சன்னிதியில் தேன்கூடு இருக்கிறது. சித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிக்கிறார்கள் என்று ஐதிகம். இந்தத் தேனடைக்கும் தினந்தோறும் பூஜை நடக்கிறது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இவற்றைப் பற்றி அந்தந்த ஊர் தேவார-திவ்யபிரபந்தங்களிலும் குறிப்பு இருக்கிறது.

தலபுராண விஷயங்களை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் குறிப்பிட்டிருப்பதால் அவற்றின் பழமை, பிராமாண்யம் (authenticity) இரண்டும் தெரிகின்றன.

(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் 'அத்தி வரதர்' வைபவம் 


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author