

நிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சென்னை, கீழ்க் கட்டளையில் உறையும் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண மண்டலி என்ற அமைப்பு கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், மண்டலியின் 2-ம் ஆண்டு விழாவின்போது, டி.வி.எஸ். ராவ் என்பவர் தங்களுக்குச் சொந்தமான தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியைத் திருக்கோயில் அமைக்கத் தானமாக வழங்கினார்.
அந்த இடத்தில் தென்னங்கீற்று கொட்டகை கோயிலாக உருவாகி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணத்துகாக வைக்கப்பட்ட பெருமாள் திருவுருவப்படம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ பத்மாவதி ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் அமைப்பதற்கான பணிகள் நடந்தது. கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி பக்தர்கள் புடைசூழ முதல் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
கோயிலின் பிரதான சன்னிதியில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீ வினாயகர் மற்றும் நவகக்கிரக சன்னதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாளும் எழுந்தருளி உள்ளார்.
இக்கோயிலில், ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம், இதன்படி, அடுத்த மாதம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் காலை ஆண்டாளுக்குத் திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.
வருகிற ஆகஸ்டு 3-ம் தேதி ஆடிப்பூரம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை திருமஞ்சனம், மாலை மங்கள இசை முழுங்க ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, இந்தாண்டு செப்டம்பரில் கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, கோயில் அறங்காவலர் நரசிம்மன் கூறுகையில், “ஆடிப்பூரம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி, கோயிலுக்கு வருகிற செப்டம்பர் இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தேவையான நன்கொடைகளை பக்தர்கள் வழங்கலாம்” என்றார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடர்பாகத் தொடர்புகொள்ள
அறங்காவலர் நரசிம்மன் :
9444 990600