8ம் தேதி சஷ்டி... முருகன் இருக்க பயமேன்!

8ம் தேதி சஷ்டி... முருகன் இருக்க பயமேன்!
Updated on
1 min read

சஷ்டியில் கந்தனை வணங்கினால், சங்கடமும் கவலையும் வேதனையும் துக்கமும் பறந்தோடும் என்பது ஐதீகம். இந்தநாளில், முருகப்பெருமானை தரிசியுங்கள். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், தந்தைக்கே உபதேசித்தருளிய ஞானகுருவான கந்தனை தரிசியுங்கள். கவலைகளையெல்லாம் தீர்த்தருள்வான்  வெற்றிவேலன்! நாளை 8ம் தேதி சஷ்டி.

மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகப்பெருமானைத் தரிசித்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்த நாள் முழுவதும் முருகப்பெருமானை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்து, வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுவார்கள்.

சஷ்டி திதியில் கந்தனை வழிபடுவது மிகவும் விசேஷம். இந்தநாளில், மாலையில் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர் சூட்டுங்கள். செவ்வரளி சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் சிங்காரவேலன்.

மாலையில், அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிரக் கண்டு தரிசியுங்கள்.

வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ கேசரியோ, எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

நாளை 8ம் தேதி திங்கட்கிழமை சஷ்டி. முருகனுக்கு உகந்த சஷ்டியில், வேலவனை வழிபடுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் அழகன் முருகன்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in