Last Updated : 11 Jul, 2019 11:13 AM

 

Published : 11 Jul 2019 11:13 AM
Last Updated : 11 Jul 2019 11:13 AM

இறைத்தூதர் கதைகள் 04: நபிகளுக்குக் கிடைத்த ஆதரவு

அபு தாலிப், இறைத்தூதரைப் பாதுகாப்பதை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்த மாட்டார் என்பதைக் குரைஷ் தலைவர்கள் தற்போது புரிந்துகொண்டார்கள். அதனால், மீண்டும் ஒருமுறை அபு தாலிப்பைச் சந்திக்க நினைத்தனர். இந்த முறை, அவர்கள் அம்மாராஹ் இபின் அல்-வாலித் என்பவரை கூட அழைத்துச்சென்றனர்.

“இவர் அம்மாராஹ் இபின் அல்-வாலித். எங்களில் வசீகரமானவர், செல்வந்தர். இவரை உங்களுடன் உங்கள் மகன்போல வைத்துகொள்ளுங்கள். அதற்குப்பதிலாக, உங்கள் சகோதரர் மகன் முஹம்மதுவை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் அப்போதுதான் அவரைக் கொல்ல முடியும்,” என்று அவர்கள் அபு தாலிப்பிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் அபு தாலிப் பயந்துபோனார். “ நான் கடவுளின்மீது ஆணையாகச் சொல்கிறேன். என்னிடம் நீங்கள் முன்வைக்கும் மிகப் பொல்லாத கோரிக்கை இது! உங்கள் மகனை, உங்களுக்குப் பதிலாக நான் உணவளித்து வளர்ப்பதற்காக என்னிடம் கொடுக்கிறீர்கள், ஆனால், அதற்குப்பதிலாக நான் உங்களிடம் என் மகனைக் கொல்வதற்காகக் கொடுக்க வேண்டுமா?” என்றார் அவர்.

“நான் இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்! இது ஒருபோதும் நடக்காது”, என்று கோபத்துடன் சொன்னார் அபு தாலிப்.

குரைஷ் தலைவர்களில் ஒருவரான முத்‘இம் இபின் அதி பேசினார். “நம் இனக்குழுவினர் ஓர் ஆலோசனையை முன்வைத்தனர். ஆனால், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நம் இனக்குழுவினரின் எந்த ஆலோசனையையும் நீங்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை போலும்!” என்றார் அவர்.

“நான் இறைவன்மீது மீண்டும் ஆணையிட்டுச்சொல்கிறேன். குரைஷ் தலைவர்களாக நீங்கள் எனக்கு நியாயம் வழங்கவில்லை. நீங்கள் எனக்கு எதிராகச் செல்வதற்குத் தீர்மானமாக முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதைச் செய்யுங்கள்!” என்றார் அவர்.

இறைத்தூதருக்கு வந்த அச்சுறுத்தல்

இறைத்தூதரின்மீது குரைஷ் இனக்குழுவுக்கு இருக்கும் பகையுணர்வைப் பார்த்த அபு தாலிப், இறைத்தூதரின் இனக்குழுவான பானு ஹாஷிம் குழுவைச் சேர்ந்தவர்களை அழைத்தார். குரைஷ் இனக்குழுவினரின் தீய நோக்கங்களில் இருந்து இறைத்தூதரைப் பாதுகாக்கும்படி, அவர்களைக் கேட்டுகொண்டார். இறைத்தூதரை ஆதரிக்கும்படி அவர்களை ஊக்குவித்தார் அபு தாலிப். அதனால், ஒட்டுமொத்த பானு ஹாஷிம் இனக்குழுவும் இறைத்தூதருக்குத் தங்கள் ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கியது.

ஆனால், இவர்களில் ஒரேயொருவர் மட்டும் விதிவிலக்காக இருந்தார். அவர் பெயர் அபு லஹாப். அவர் இறைத்தூதரின் தந்தைவழி உறவினர்களில் ஒருவர். அவர் இறைத்தூதரை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

- பயணம் தொடரும்

தமிழில்: என். கௌரி

(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட், தொடர்புக்கு: 96001 05558)

ஓவியம்: குர்மீத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x