Last Updated : 04 Jul, 2019 03:08 PM

 

Published : 04 Jul 2019 03:08 PM
Last Updated : 04 Jul 2019 03:08 PM

பிரம்ம முகூர்த்தத்தில்  விளக்கேற்றுங்கள்; கடன் தொல்லையெல்லாம் தீரும்!

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால், கடன் தொல்லையெல்லாம் தீரும்; கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது ஒருநாளின் அதிகாலைப் பொழுது. இரவில் கண்விழித்துப் படித்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம், ‘கண்ணு முழிச்சி படிக்காம, தூங்கு. காலைல சீக்கிரமா எழுப்பி விடுறேன். அப்போ படி’ என்பார்கள் பெரியவர்கள். அதுதான்... அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி.

அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவது நல்லது. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லுகிறார்கள் ஆச்சார்யர்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான், தேவர்களும் பித்ருக்களும் நம் இல்லங்களுக்கு வருவார்கள் என்பதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாம் தூங்கிக்கொண்டிருந்தால், வரவேற்காமல் இருக்கிறார்களே என்று அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்களாம்.

எனவே, தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, பல் தேய்த்து, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, வாசல் கதவைத் திறக்கவேண்டும். அப்போது, ‘மகாலக்ஷ்மியே வருக’ என்று மூன்று முறை மனதுக்குள் சொல்லச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. இப்போதெல்லாம் அரிசிமாவில் கோலம் போடுவது குறைந்துவிட்டது. மேலும் கோலம் போடுவதே குறைந்து, எல்லோரும் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வைத்திருக்கிறார்கள். இது மிகவும் தவறு.

அடுத்து, குளித்துவிட்டு, பிரம்மமுகூர்த்தத்தில். அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். நேரமிருந்தால், காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, லலிதா சகஸ்ர நாம பாராயணம் சொல்லலாம். அப்படி தேவி மகாத்மியம் முதலான சத்தான விஷயங்களைச் சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

மேலும் வீட்டில் அதுவரை இருந்த கஷ்ட நிலையெல்லாம் மாறும். கடன் தொல்லையெல்லாம் தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x