

அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரமா நீங்கள்? காஞ்சி அத்திவரதரை அவசியம் தரிசியுங்கள். எண்ணற்ற பலன்களைப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காஞ்சி அத்திவரதரை 40 வருடங்கள் கழித்து, இதோ... இன்று 1ம் தேதி முதல் கண்ணாரத் தரிசிக்கலாம். இன்று தொடங்கி 48 நாட்கள் வரை இந்த தரிசனம் இருக்கும். பின்னர், மீண்டும் வரதராஜ பெருமாள் கோயிலின் புஷ்கரணியில் தண்ணீருக்குள் இறக்க்கிவைக்கப்படுவார்.
எனவே இந்த மண்டல காலத்தில் அத்தி வரதரைத் தரிசியுங்கள். பிறகு 40 வருடம் கழித்துதான் அத்தி வரதரைத் தரிசிக்க முடியும்.
உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய நாளில், அதற்கு உகந்த நாளில், அத்தி வரதரைத் தரிசிப்பது கூடுதல் விசேஷம். இரட்டிப்புப் பலன்களைப் பெறலாம்.
அத்தி வரதர் அஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்கிறது புராணம். எனவே அஸ்த நட்சத்திரக்காரர்கள், அத்தி வரதரை அவசியம் தரிசித்தால், நல்ல நல்ல பலன்களைப் பெறலாம். குறிப்பாக, உங்களின் அஸ்த நட்சத்திர நாளில், தரிசியுங்கள்.
மகாவிஷ்ணுவின் திருநட்சத்திரம், திருவோணம். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருநட்சத்திரம் ரோகிணி. எனவே, திருவோணம், ரோகிணி ஆகிய நட்சத்திரக்காரர்கள், அந்தந்த நட்சத்திர நாளில் தரிசித்தால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இழந்ததை மீட்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். சகல செளக்கியங்களும் வாழ்வில் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம் என்கிறார் வரதராஜ பெருமாள் கோயிலின் கிட்டு பட்டாச்சார்யர்.