

‘தக்(கு)பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும், இனிக்கும்’ என்று நாகூர் அனிபா பாடிய புகழ்மிக்க பாட்டு ஒன்று உண்டு. தக்பீர் முழக்கம் எது? ‘அல்லாஹூ அக்பர்’ என்பது. அதன் பொருள் என்ன? இறைவன் மிகப் பெரியவர் என்பது. இறைவன் எதனால் பெரியவர்? நம்மால் செய்ய முடியாதவற்றையெல்லாம் அவரால் செய்யமுடியும் என்பதால் பெரியவர்.
‘டியோ ஓலண்ட்டி’ (Deo Volente) என்று லத்தீனத்திலும், ‘இன்ஷா அல்லா’ என்று அரபியிலும், God willing என்று ஆங்கிலத்திலும், ‘எல்லாம் வல்ல இறைவன் திருவருளால்’ என்று தமிழிலும் சொல்லும்போது, சொல்ல நினைப்பது இதைத்தான்: எதைச் செய்தபோது செய்கிறவன் வெறும் கருவி மட்டுமே; செய்விப்பவனாக இறைவனே இருக்கிறான்; ஒரு செயல் நிகழ்வதும் நிகழாமல் போவதும் இறைவன் திருவுளப்படியே; ஏனெனில் இறைவன் மிகப் பெரியவன்.
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே?
அடக்குவித்தால் ஆர்ஒருவர்
அடங்கா தாரே?
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே?
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே?
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே?
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே?
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே?
காண்பார்ஆர் கண்ணுதலாய்,
காட்டாக் காலே?
(தேவாரம், 6:95:3)
நெற்றிக்கண்ணனாகிய இறைவன் ஒருவேளை காட்டவில்லை என்றால் நம்மால் எதையேனும் காண முடியுமா என்று கேட்கிறார் அப்பர்.
எல்லாம் வல்லவனாக இருக்கும் இறைவனால் செய்ய முடியாத செயல்கள் எவையேனும் உண்டா? உண்டு. “ஓர் அரசன் தன் ஆட்சியின்கீழ் அடங்கி நடக்காத எந்த ஒரு குடிமகனையும் உடனே தன் எல்லையைவிட்டு வெளிக் கடத்திவிட முடியும்; ... ஆனால் இறைவன் தன்கீழ் அடங்கி நடக்காத எந்த உயிரையும் தன் எல்லையை விட்டு வெளிக் கடத்த முடியாது” என்று புரிசை முருகேச முதலியார் முரு.பழ.இரத்தினம் செட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வேடிக்கையாகச் சொன்னாராம். (முரு.பழ.இரத்தினம் செட்டியார், கடவுளால் முடியாத செயல்கள், புன்செய்ப் புளியம்பட்டி: மறைமலையடிகள் மன்றம், 1968, ப.1). இறைவனால் செய்ய முடியாத செயல் இது ஒன்றுதானா? புரிசையார் சொன்னதன் தூண்டுதலில் மேலும் இரண்டு சொல்கிறார் முரு.பழ.இரத்தினம் செட்டியார்:
(1) எல்லா உயிர்களும் உடனே வீடுபேறு அடையும்படி இறைவனால் செய்ய முடியாது;
(2) உலகில் தீய செயல்களே நடைபெறாமல் அறவே ஒழித்து நல்ல செயல்கள் மட்டும் நடைபெறும்படி இறைவனால் செய்ய முடியாது. (மேலது, பக்.50-51).
இவற்றில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முடியாமை, ‘தீமை குறித்த சிக்கல்’ (the problem of evil) என்ற பெயரில் உலக மெய்யியலாளர்களால் / சமயவாதிகளால் விவாதிக்கப்பட்ட ஒன்று; இறைவன் என்று ஒருவன் இல்லவே இல்லை என்று மறுப்பதற்குக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டது. எப்படி? இறைவன் எல்லாம் அறிந்தவன்; எல்லாம் வல்லவன்; எங்கும் நிறைந்தவன் என்பது இறைவனுக்கான வரையறை.
(1) எல்லாம் வல்லவன் என்றால், தீமையை ஒழித்து நன்மை மட்டுமே இருக்குமாறு ஏன் இறைவனால் நிலைநாட்ட முடியவில்லை? தீமை இன்னும் இருக்கிறது என்றால் இறைவன் இல்லை என்றுதானே பொருள்?
(2) இறைவனும் இருக்கிறான், தீமையும் இருக்கிறது என்று சொல்வீர்களேயானால், தீமையை ஒழிக்கும் அளவு இறைவனுக்குத் திறனில்லை என்றுதானே பொருள்?
(3) இறைவன் இருக்கிறான்; தீமையும் இருக்கிறது; ஆனால் தீமையை இறைவன் கண்டுகொள்வதில்லை என்றால், இறைவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லை, தீமையும் இறைவனின் செயல் என்றுதானே பொருள்?
இவற்றில் எது விடையாக இருந்தாலும், இறைவன் இருக்கிறான் என்பதும் அவன் எல்லாம் வல்லவன் என்பதும் முற்றிலும் நல்லவன் என்பதும் பொய்யுரைகள் ஆகிவிடுகின்றன அல்லவா?
நமக்குள் பேசிக்கொள்வோம்
தீமை ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே மற்றொரு பக்கம் இறைவனும் இருக்கத்தான் செய்கிறான், தீமையை வெல்லும் வழிகளை அவன் பார்த்துக்கொள்வான் என்று நிறுவ முயலும் கொள்கைக்கு இறைநீதிக் கொள்கை (theodicy) என்று பெயர். 1710-இல் இந்தச் சொல்லை (theodicy) உருவாக்கியவர் ஜெர்மானிய நாட்டு மெய்யியலாளர் காட்பிரிட் வில்லெம் லைப்னிட்சு (Gottfried Wilhelm Leibnitz).
தீமை இருந்தாலும் அது இறைவனின் நல்லியல்புகளோடு முட்டுவதுமில்லை, இறைவனின் இருப்பைப் பாதிப்பதுமில்லை; தீமைகளுக்கு நடுவிலும் இந்த உலகம் சிறப்பாகவே இயங்குகிறது; இயலக்கூடிய உலகங்கள் எல்லாவற்றிலும் இந்த உலகமே சிறந்ததாகும் (this world is the best of all possible worlds) என்பதுதான் லைப்னிட்சின் இறைநீதிக் கொள்கை.
லைப்னிட்சு சொல்வதைப்போல, எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது, இதுதான் உச்சம் என்று கையைத் தூக்கிவிடுவது இறைவனின் புகழுக்கு இறுதிச் சங்கு ஊதுவதாகாதா?
நமக்குள் பேசிக்கொள்வோம்: இந்த இறைவன் தன் எல்லையற்ற மீப்பெரும் ஆற்றலைப் பயன்படுத்தித் தீமையை ஒழித்துவிட்டால்தான் என்ன? அது அவனால் இயலாததா என்றால், இயலக்கூடியதுதான். ஆனாலும் அவன் செய்வதில்லை.
ஏன்? ஏனெனில் அவன் ஜனநாயகக் கூர் மிக்கவன். உயிர்களின் கட்டற்ற செயல் உரிமையை (free will) மதிப்பவன். நன்மை செய்ய வேண்டுமா, தீமை செய்ய வேண்டுமா என்பது உயிரின் தேர்வாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, ஆண்டவரின் விருப்பத் திணிப்பாக இருக்கக்கூடாது.
மனிதர்களே வரையறுத்தார்கள்
அவ்வாறு இருந்தால் அது செயல் உரிமைப் பறிப்பும் ஜனநாயக மறுப்பும் சர்வாதிகாரமும் ஆகும். தத்தம் இருப்பு நிலை நோக்கித் தத்தம் நன்மை குறித்துத் தாம் தாம் விரும்பிய வகையில் செயலாற்றிக்கொள்ள அவரவர்க்கு உரிமை உண்டு; அவ்வாறன்றிக் கையைப் பிடித்து மடக்கிக் காரியம் செய்ய வைப்பது விடுதலையாகாது; அடிமைத்தனமே ஆகும்.
ஆகவே ஆண்டவர் நன்மை, தீமை விவகாரங்களில் தலையிடவில்லை. நன்மை இது, தீமை அது என்று வரையறுக்கவும் இல்லை. மனிதர்களே வரையறுத்தார்கள். கடவுளையே மனிதர்கள்தாம் வரையறுத்தார்கள் எனும்போது, இது என்ன அதிசயமா? மனித வரையறைகள் மாற்றத்துக்கு உரியவைதாமே?
இன்பம், இடர்என்று இரண்டுஉற வைத்தது;
முன்புஅவர் செய்கையி னாலே முடிந்தது;
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்புஇலார் சிந்தை அறம்அறி யாரே.
(திருமந்திரம் 267)
இன்பம், நன்மை, அறம் என்று நேராக மட்டுமே வகுத்துவைக்காமல் இன்பத்தோடு துன்பம், நன்மையோடு தீமை, அறத்தோடு மறம் என்று எதிராகவும் வகுத்து இரண்டையும் இணைத்தே வைத்தான் இறைவன். நன்மையோ தீமையோ, ஒருவர் முன்பு செய்தது எதுவோ அதுவே அவர்க்குப் பின்னும் விளைந்தது என்றால் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்தால் அறமாகும் என்று அறியாமல் முட்டிக்கொள்கிற மூடர்களைப் பற்றி என்ன சொல்ல? அன்பைக் கொடுத்தால் இன்பம் விளையாதா?
அறத்துக்கு இலக்கணம் வகுத்துக் கொடுக்கிறார் திருமூலர்: அன்பைக் கொடுத்து இன்பம் விளைத்தல் அறம். வம்பிழுத்துத் துன்பம் விளைத்தல் மறம். அன்பைக் கொடுத்து அறம் செய்வார் வாழ்க. வம்பிழுத்து மறம் செய்வார் திருந்துக.
(அறம் வளர்ப்போம்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com