

ஆலய வழிபாடு என்பதே சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது மேலும் சிறப்பு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், நம் இல்லத்தின் கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்; துக்கமெல்லாம் துரட்டியருளுவாள் துர்காதேவி!
அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். துர்கை கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவாள். அதேபோல், அம்மன் கோயில்களிலும், துர்காதேவி கோஷ்டத்திலும் இருப்பாள். பெருமாள் கோயில்களிலும் கூட துர்கை காட்சி தருவாள். இங்கே இவளுக்கு விஷ்ணு துர்கை என்றே பெயர். சில கோயில்களில் தனிச்சந்நிதியாகவும் வீற்றிருப்பாள்.
இன்னும் சொல்லப் போனால், அம்பாளின் அம்சம்... துர்காதேவி. எனவே எந்த அம்மனாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமையான ராகுகால வேளையில், அதாவது மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலத்தில், ஆலயம் சென்று, தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை தீபமேற்றுங்கள். முடிந்தால் செந்நிற மலர்களை சார்த்துங்கள்.
இதோ... இன்று 2ம் தேதி செவ்வாய்க்கிழமை. அதிலும் அமாவாசை. எனவே மறக்காமல், ராகுகால வேளையில் ஆலயம் செல்லுங்கள்; துர்காதேவியை தரிசியுங்கள். மனதார உங்கள் குறைகளையெல்லாம் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். முடிந்தால், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் பொட்டலம் வழங்குங்கள்.
கஷ்டத்தையெல்லாம் காணடித்து, நம் துக்கத்தையெல்லாம் விரட்டி, நம் இல்லத்தில் ஒளியேற்றிவைப்பாள் துர்காதேவி.