பஞ்சமியில் வாராஹி வழிபாடு; கடன் தீரும்; எதிர்ப்புகள் அகலும் 

பஞ்சமியில் வாராஹி வழிபாடு; கடன் தீரும்; எதிர்ப்புகள் அகலும் 
Updated on
1 min read

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டால், கடன் பிரச்சினைகள் தீரும். எதிரிகள் தொல்லை ஒழியும். இன்று பஞ்சமி திதி. மறக்காமல் வாராஹியை வழிபடுங்கள்.

சப்தமாதர்களில் ஒரு தேவதை வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வர். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், வெற்றிக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லை என்பது ஐதீகம்.

காலப்போக்கில், சப்தமாதர்கள் சந்நிதியும் குறிப்பாக வாராஹிக்கென்று சந்நிதியும் பெருகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், வாராஹிதேவிக்கென தனிக்கோயிலே அமைக்கப்பட்டு, வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள்.

சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி மஹாத்மியம் சிலாகித்துச் சொல்கிறது. சப்த என்றால் ஏழு. ஏழு தேவியரைக் கொண்டதால் சப்தமாதர்கள் என்று பெயர். இவர்களை 700 மந்திரங்களால் விவரித்துச் சொல்லப்பட்டிருப்பதால் அதற்கு சப்த சதீ என்றே போற்றியிருக்கிறார்கள்.

சும்ப - நிசும்ப அரக்கர்களை அழிக்க, ஆதிபராசக்தி முடிவெடுத்தபோது, அவளுக்குத் துணையாக, அவளுக்கு உதவியாக, அவளின் பக்கபலமாக, படையாக உருவெடுத்து வந்தவர்களே சப்தமாதர்கள் என்கிறது புராணம்.

இவர்களில், இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் நீங்கும். அதாவது எதிரிகள் பயம் இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவாள் என்பது ஐதீகம்!

பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதித்து அருள் பெறுவதற்கான அற்புதமான நாள். இந்த நாளில், அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!

இதோ... இன்று 7.7.19 ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி. சப்தமாதர்களில் ஒருவராக இருக்கும் வாராஹிதேவியை வணங்குங்கள். எதிர்ப்புகள் விலகும். மனோபலம் பெருகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in