காற்றில் கீதங்கள் 26: தியாகராஜனின் இதயத்துள் புகுந்தவனே!
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், ராமனின் பராக்கிரமத்தைப் பற்றியும் சிறப்புகளைப் பற்றியும் இயற்றிய எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம். அன்னை சீதையைப் பற்றியும் பாடியிருப்பதைக் கேட்டிருப்போம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் சிவனைப் போற்றி தியாகராஜர் எழுதியிருக்கும் கீர்த்தனை `சம்போ மகாதேவா’.
பக்தனுக்கு இரங்கும் தயாள மனம் படைத்தவனே, மலைமகளின் அன்புக்கு உரியவனே, கங்கையை அணிந்தவனே எனப் பலவாறு சிவனை வர்ணிப்பவர், அவருடைய தனிப்பட்ட முத்திரையையும் பதிக்கத் தவறவில்லை.
`தியாகராசனின் இதயத்துள் புகுந்தவனே’ என்கிறார். சம்போ மகாதேவா பாடலை தனது காத்திரமான குரலில் ஷங்கர் மகாதேவன் இந்தக் காணொளியில் பாடியிருக்கிறார். ராகபரம்பராவின் வெளியீடான இந்த ஒலிப்பதிவில் நமது மரபார்ந்த இசைக் கருவிகளின் ஒலியும் மேற்குலக இசைக் கருவிகளின் ஒலியும் ஸ்ருதி பேதமின்றி இரண்டறக் கலக்கின்றன.
சங்கொலி, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், மேற்குலகின் டிம்பொனி போன்ற மேளங்களின் கூட்டிசைவில் ஷங்கர் மகாதேவனின் குரல் பல்லவி, அனுபல்லவி, சரணம் என ஒவ்வொரு படிநிலைக்கும் நம்மை அரவணைத்துச் செல்கிறது.
தியாகராஜ சுவாமிகள் சிவனைப் பாடும் இந்த அரிய கீர்த்தனையை பந்துவராளி, காமவர்த்தினி எனும் இரண்டு ராகங்களில் பாடப்படுவதாகக் குறிப்புகள் இருந்தாலும், இந்தக் காணொலியில் பந்துவராளி ராகத்திலேயே ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார்.
பிறவாமை வேண்டும் அப்படிப் பிறந்தாலும் மறவாமை வேண்டும் என்பதே பல அருளாளர்கள் இறைவனிடம் வைக்கும் வேண்டுகோளாக இருக்கும். இந்தக் கீர்த்தனையிலும் தியாகராஜர் பிறவாமையையே வேண்டுகிறார். நாமும் அதையே மறக்காமல் கேட்போம்.
‘சம்போ மகாதேவா’ பாடலைக் காண:
