

கண்டாகரண் ஒரு சிவ பக்தன், விஷ்ணுவை எதிரியாக நினைப்பவன். அவன் இரு காதிலும் மணியை அணிந்து யாரேனும் நாராயண நாமத்தைச் சொன்னால் அவன் காதில் விழாமல் காதை ஆட்டி மணியோசை கேட்பான்.
கண்டா – மணி, கர்ணம் – காது, கண்டாகர்ணன் - காதில் மணி அணிந்தவன்.
இவனின் வாழ்வு முடிந்து கைலாயம் சென்று சிவபெருமானிடம், “எனக்கு மோட்சம் வேண்டும்” என்று கேட்டான். சிவபெருமான், “நான் கைலாயம் கொடுப்பேன், மோட்சம் வேண்டும் என்றால் நாராயணன்தான் தருவான்” என்றார். ‘சிவசிவா’ என்று காதை அசைத்துக்கொண்டான். “அப்பனே எந்த நாராயண நாமத்தை நான் கேட்கக் கூடாது என்று காதில் மணி அணிந்துள்ளேனோ அவன் பெயரையே சொல்கிறீர்களே” என்றான்.
சிவபெருமான் கூறுகிறார்: “நான் பார்வதி தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு உலக உயிர்களுக்கு மோட்ச கதி கொடுக்க.
‘ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணனே’
என்ற விஷ்ணு நாமத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன்”.
“நீ காதில் உள்ள மணியை அவிழ்த்துவிட்டு நாராயண நாமத்தை ஜபித்துக் கொண்டிரு, நாராயணன் உனக்குக் காட்சி தந்து மோட்சம் கொடுப்பார்”. “அப்பனே எப்பொழுது நான் நாராயணனைப் பார்ப்பது” என்றான். பூலோகத்தில் ஸ்ரீவிஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் உள்ளதாகவும் துவாபர யுகம் முடிந்து தன்னைக் காண கைலாயம் வருவார். அப்போது நீ அவரிடம் மோட்சம் வாங்கிக்கொள் என்றும் கூறினார்.
கண்டாகரண் காதில் இருந்த மணியைக் கழற்றிவிட்டு ‘நாராயணா நாராயணா’ என்று நாம ஜபம் செய்துகொண்டிருந்தான். நாராயணன் கைலாயம் வந்தார். அவரைப் பார்த்து பரவசம் அடைந்தான். உடனே நாராயணனுக்கு ஏதாவது படையல் கொடுக்க வேண்டுமே என்று அவன் பக்கத்தில் முனிவர் ஒருவர் தவமிருந்தார். அவரைக் கொன்று விருந்து படைத்தான்.
நமக்குப் பிடித்த உணவை இறைவனுக்குப் படைப்போம் அதுபோல கண்டாகரண் பேயல்லவா, அதனால் பிணத்தை விருந்தாகப் படைத்தான். “சுவாமி நல்ல சாத்வீகமான முனிவரின் உடல் இது. இறை நாமத்தை ஜபித்த முனிவர். இவரை உங்களுக்குப் படையல் இடுகிறேன். எனக்கு மோட்சம் தாருங்கள்” எனக் கேட்டான். உடனே நாராயணன் ‘தந்தோம் மோட்சம்’ எனக் கொடுத்துவிட்டார்.
மோட்சத்துக்காகத் தவமிருந்த முனிவருக்கும் மோட்சம் தந்தார். இறைவனுக்குத் தேவை உண்மை அன்பு, மாறாத பக்திதான். பிணவிருந்திட்ட கண்டாகர்ணனுக்கும் மோட்சம் தந்தார். நான் ஒரு புஷ்பத்தைக்கூட இறைவனுக்குச் சமர்ப்பிக்கவி்ல்லையே சுவாமி என்று வருந்தினாள் நம் திருக்கோளூர் பெண் பிள்ளை.
(ரகசியம் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com