Published : 11 Jul 2019 11:06 AM
Last Updated : 11 Jul 2019 11:06 AM

அவனிடத்தில் கொள்ளும் ஆர்வமே பூ

ஜீலை 11 : பெரியாழ்வார் அவதாரத் திருநாள்

ஆழ்வார்களுள், தம் பாமாலைகளாலும், பூமாலைகளாலும் கைங்கர்யம் செய்து, பெருமாளுக்கே மாமனாராகி, மிகப் பெரிய பேற்றை பெற்ற பெரியாழ்வாரின் அவதாரத் திருநாளாக ஆனி ஸ்வாதி கொண்டாடப்படுகிறது.

ஆழ்வார் என்ற சொல்லுக்கு இறைவனிடம் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்பது பொருளாகும். பெரியாழ்வாருக்கு அவர் தம் பெற்றோர்கள் இட்ட பெயர் ‘விஷ்ணு சித்தர்’ என்பதாகும். விஷ்ணுவை சித்தத்தில் உடையவர் என்ற அவரது பெயருக்கு பொருள்படும் படி, எம்பெருமானை பற்றிய சிந்தனைகளை மட்டுமே தன் உள்ளத்துக்குள் கொண்டு தொண்டு புரிந்து வந்தார் பெரியாழ்வார். “ மார்வமே கோயில் , மாதவனே தெய்வம், அவனிடத்துக்கொள்ளும் ஆர்வமே பூ “ என்றே வாழ்ந்தவர் அவர்.

பாசுரங்களில் சாதனை

எம்பெருமான் தன்னுள்ளே உறைகிறான் என்றே உணர்ந்த அவர், “ மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானர் கிடந்தார், பைக்கொண்ட பாம்பணையோடும்” என்று எம்பெருமான் என்னுடலைத் தன்னுடலாக்கி கொண்டு, அவன் சயனித்து கொண்டிருக்கும் பாம்பணையொடு வந்து என்னுள்ளே சயனித்து கொண்டிருக்கிறார் என்றே தனது பாசுரங்களில் சாதிக்கிறார்.

தன்னைப் பார்க்கக் கருடனோடு வந்த பெருமானுக்கு எங்கே கண் பட்டு விடப்போகிறதோ என பயந்து நடுங்கி, பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடிய ஆழ்வார் அவர். சீவல்லபன் எனும் பாண்டிய மன்னனது அரசவையில் , நடந்த விவாதத்தில், “ நாராயணனே பரம் பொருள்” என்று பரத்துவ நிர்ணயம் செய்து, பொற்கிழியைப் பெற்றார்.

பாண்டிய மன்னன், விஷ்ணு சித்தரை யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்தார். விஷ்ணுசித்தரைப் பார்ப்பதற்காக கருடன் மீது அமர்ந்தபடி, பறந்த படி பெருமாள், தாயாரோடு வருவதை விஷ்ணுசித்தர் பார்த்தார். பெருமாளின் அழகுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட போகிறதே என்றெண்ணி, அவருக்கு கண் த்ருஷ்டி பட்டு விட்டால் என்னாகிடுமோ என மனம் பதைபதைக்க, “ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என பாட ஆரம்பித்துவிட்டார்..

அடிபணிவோம்

தாம் வாழ்ந்த திருவில்லிப்புத்தூரில், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அழகான மலர் தோட்டம் அமைத்து, எம்பெருமானுக்கு தினம் பூமாலைகளைச் சார்த்தி மனதிருப்தி அடைந்தார். பெரியாழ்வார் திருமொழியில் தம்மை யசோதையாகப் பாவித்து கொண்டு க்ருஷ்ண லீலைகளை தம் பாசுரங்களின் வழி நம் கண் முன்னே நிறுத்தி, நம் கண்களிலிருந்து நீரையும் சேர்த்து வரவழைத்து விடுவார்.

கண்ணனுக்கு மாணிக்கத் தொட்டில் கட்டுவதிலிருந்து, அவனை நீராட அழைப்பதிலிருந்து , குழந்தை கண்ணனுக்கு நிலா காட்டுதல், அப்பூச்சி காட்டுதல் எனத் தாயின் பாசத்தையும் பரிவையும் அந்த பாசுரங்களின் வழி தாமும் அனுபவித்து நமக்கும் அந்த அனுபவத்தைத் தந்தவர் அவர். அப்படித்தான், ஆண்டாளை வளர்க்கும் மிகப்பெரிய பேற்றை அவர் பெற்றிருக்க வேண்டும்.

“ ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று தந்தையின் பரிவோடு பாசுரம் பாடிய பெரியாழ்வாரின் அடி பணிவோம்…

-  நளினி சம்பத்குமார் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x