

செ
ன்னை மாநகரத்துக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. தென்புறத்தில் திருவொற்றியூரும் வடபுறத்தில் திருவான்மியூரும் கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும் மேற்குப் பகுதியில் ராமானுஜர் தோன்றிய திருப்பெரும்புதூரும் அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கின்றன. பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் சென்னை குன்றத்தூரில் பிறந்தவர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களும் அருள்ஞானியரே. நாயன்மார்களின் வரலாற்றை ஊர்தோறும் சென்று ஆராய்ந்து இலக்கியங்கள், தேவாரத் திருமுறைகள், கல்வெட்டுகள், அரிய பண்பாட்டுச் சீர்மைகள் செறிந்து உன்னதமான காப்பியமாகப் பெரிய புராணத்தைத் திருத்தொண்டர் புராணம் என்று தமிழுலகுக்கு மணியாரமாக வழங்கிய பெருமை சேக்கிழாரைச் சேரும்.
அரச போகத்தில் வாழ்ந்துவந்த சோழ மன்னன் அநபாயனைத் திருத்த அவனுக்கு அறுபத்து மூவர் வரலாற்றைச் சேக்கிழார் பாடினார். அதுதான் பெரிய புராணம். வேந்தர் முதல் வேடுவர்வரை எந்தச் சாதியில் பிறந்தாலும் அவர்களின் பக்திப் பெருக்கைக் கொண்டு சிவனடியார்களாக அனைவரையும் வணங்கத்தக்கவர்களாக மாற்றியவர் சேக்கிழார்.
அறிவு வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் காண்கிறோம். அவை அச்ச நிலை, வியக்கும் நிலை, ஆயும் நிலை. பண்டைய மக்கள் இயற்கைப் பொருளை முதலில் கண்டு அஞ்சி ஓடினர். அவற்றின் அளவிலாத ஆற்றலைக் கண்டு வியந்தனர். இயற்கையையே தெய்வமாக வணங்கத் தொடங்கினர். இறுதியில் பகுத்தறிவின் துணைகொண்டு அப்பொருட்களை ஆராய்ந்தனர்.
இயற்கைத் தெய்வங்களைப் பற்றிக் கதைகள் எழுதப்பட்டன. மக்கள் அவற்றை நம்பினர். புராணங்கள் இவ்விதமாக உருவாயின. தமிழகத்திலும் புராணங்கள் எழுந்தன. அவற்றுள் முதன்மையானவை மூன்று. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய மூன்றில் பெரிய புராணம் மட்டுமே தனித்தமிழ் நூல். மற்றவை வடமொழி புராணங்களின் தழுவல்கள். சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு முதல் நூல் சுந்தரரது திருத்தொண்டத் தொகையாகும்; வழிநூல் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதியாகும்.
திருத்தொண்டர் புராணம் தனி அடியார் அறுபத்து மூவரைப் பற்றியும் தொகையடியார் ஒன்பதின்மரைப் பற்றியும் வரைந்து காட்டும் வரலாற்று நூல் மட்டுமல்ல. இறையருள் பெற்று இறை முனைப்பின் வழிவந்த ஈடுமெடுப்புமில்லாத திருநூல் இது. புராணப் பெருங்கடல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழாரது செந்தமிழ் மாட்சியை, ‘தெய்வ மணக்குஞ் செய்யுளெ லாம்’ என்று போற்றிப் பாடுகிறார். சேக்கிழாரின் பால்வடி செந்தமிழ் என்று சுத்தானந்த பாரதியாரைப் போலப் பாடிப் பரவலாம்.
(கட்டுரையாளர், தலைவர், பாரத் பல்கலைக்கழகம்)