Published : 03 Aug 2017 10:27 am

Updated : 03 Aug 2017 10:27 am

 

Published : 03 Aug 2017 10:27 AM
Last Updated : 03 Aug 2017 10:27 AM

இறைமை இயற்கை 10: காற்றை வென்றால், உலகை வெல்லலாம்

10

ம்பூத வரிசையில் காற்றுக்குத் தனிச் சிறப்பு உண்டு. நிலம், நீர், நெருப்பு போன்ற பூதங்களை மனிதர்கள் கண்களால் காண முடியும். வெளி என்கிற தலைமை பூதத்தைக்கூட மனித அறிவுக்கு உட்பட்டு கண்களால் கண்டுணர முடியும். ஆனால், காற்றை உணரத்தான் முடியுமே தவிர, கண்களால் காண முடியாது. இது இறையின் குணங்களில் முக்கியமான ஒன்று.


இறைவனின் மீது பத்திமை (பக்தி உணர்வு) கொண்டு அவனைத் தேடுவோர் அனைவரும் இறைவனை உணர முடியும். ஏதாவது ஒரு வகையில், ஒரு வடிவத்தில், ஓர் உருவத்தில் தன்னை உணரும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். ஆனால், இறைவனைக் கண்களால் காணக்கூடிய திருக்காட்சி என்பது எல்லோருக்குமானது அல்ல.

இறையை உணர…

யாரெல்லாம் காற்றின் தொழிலை உணர்கிறார்களோ, அவர்களெல்லாம் இறைவனை உணர முடியும். ஏனென்றால், உடலுக்குள் உயிராகவும், உயிருக்குள் இறையாகவும் உறைந்திருப்பது காற்றேயாகும்.

திருமந்திரத்தில்,

‘பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்

தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்

மேவிய சீவனில் மெல்லநீள வாயுவுங்

கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே’

(திருமந்திரம் – கர்ப்பக்கிரியை – பாடல்: 5) என்கிறார் திருமூலர்.

பூவின் வாசத்தை காற்று உலகுக்குக் அறிவிப்பதுபோல, உயிரின் இயக்கத்தையும் அது உலகுக்கு அறிவிக்கிறது. அந்த அறிவிப்பானது இறைவனின் விருப்பத்தின் பேரிலேயே நடக்கிறது என்கிறார் திருமூலர்.

இயக்கத்தின் வெளிப்பாடு

இயக்கத்தை உணர்த்துவது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் ஒன்றைக் கட்டுடைப்பதும், அதன் மூலம் புதிய ஒன்றை நிலைநிறுத்துவதும் காற்றின் குணம். காற்று ஒன்றை அசைக்கிறதென்றால், அது அடுத்த நிலையை எட்டுகிறது என்று பொருள். இதனைப் பாரதியார் அழகாக எடுத்துரைக்கிறார்:

‘நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம் – இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே, வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதிகொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம்.’ (வசன கவிதைகள்: காற்று – 9, சுருக்கம்).

இந்தப் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காற்று வீசியடிக்கிறது என்றால், அங்கு நிலவும் பருவநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பொருள். ஒரு மழை பெய்து முடித்த பிறகும், ஒரு புயல் வீசி முடித்த பிறகும், ஒரு சூறாவளி கடந்து போன பிறகும் அங்கு நிலவும் காற்றின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடியும்.

மரபை மாற்றிய வரலாறு

ஐம்பூதத் தலங்களில் காற்றுக்கானது (ஆந்திர மாநிலத்தில் உள்ள) திருக்காளத்தி. சைவ சமயத்தின் திருத்தொண்டர்களில் கண்ணப்ப நாயனார் வாழ்ந்த நிலம். அவரது வரலாறு, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இறைப் பூசை மரபைக் கட்டுடைத்த வரலாறு.

பொன்முகலி ஆற்றங்கரையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேடரான கண்ணப்பனார், ஈசனின் ஈர்ப்பால், மலையின் மீதிருக்கும் சிவலிங்கத்தை அடைகிறார். ஈசனின் மீதான அவரது அன்பு அளப்பரியதாக மாறுகிறது. பசியோடிருக்கும் ஈசனுக்கு, தான் வேட்டையில் வீழ்த்திய பன்றியைச் சமைத்து, ஊனமுது படைக்கிறார்.

அதுவரைக்கும் சைவ உணவையே படைத்து, ஈசனுக்கு ஆகமப் பூசை செய்துவரும் சிவக்கோசரியாருக்கு இச்செயல் சினத்தை ஏற்படுத்துகிறது. நாள்தோறும் கண்ணப்பனார் இப்படிச் செய்வதைக் கண்டு, ஈசனிடம் முறையிடுகிறார் சிவக்கோசரியார். இப்படி ஊனமுது படைக்கும் ஒருவனை உன்னருளாலே ஒழித்தல் வேண்டும் என்கிறார் அவர்.

ஆனால், ஈசனோ மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறான். அந்த மகிழ்ச்சி வழிய சிவக்கோசரியாரிடம் இப்படிச் சொல்கிறான்: “அவன் அன்பன். அவனது வடிவெல்லாம் நம் மீதான அன்பேயாகும். அவனது அறிவெல்லாம் நம்மையறியும் அறிவேயாகும். அவனுடைய செயல்களெல்லாம் நமக்கு இனியவையாகும். எனவே கவலையொழிக’’ என்று கண்ணப்பரின் அன்பை மெச்சுகிறான் ஈசன்.

கண்ணப்பனாரின் அன்பை உலகுக்கு உணர்த்த இதுவும் போதாதென்று, கண்ணப்பனார் கண்களைப் பிடுங்கித் தனக்குச் சூட்டும் படியாக ஒரு திருவிளையாடலையும் அரங்கேற்றுகிறான் ஈசன்.

கட்டுடைக்கும் காற்று

சைவ உணவு சிறந்ததா? அசைவ உணவு சிறந்ததா என்பது இப்போதும் விவாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. ஆனால், சைவமோ, அசைவமோ… படைப்பவரின் மனதில் மிகுந்திருக்கும் அன்புதான் முக்கியம்; அன்புக்குப் பிறகுதான் அனைத்தும் என்கிற கருத்தை உணர்த்துகிறது கண்ணப்ப நாயனாரின் வரலாறு.

அத்தகைய அன்பையும், அன்பின்பாற்பட்ட கட்டுடைத்தலுமே காற்றின் இயல்பு. எனவேதான் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் வித்தைகளைச் சொல்லித் தரும் திருமூலர், மனித மனத்தின் இருவேறு குணங்களை மூச்சுக் காற்றோடு ஒப்பிடுகிறார்.

‘ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே’

(திருமந்திரம் – பிராணாயாமம் – பாடல்: 2)

மாண்புடன் வாழ

நம்முடைய மூச்சுக் காற்றில் உள்மூச்சு, வெளிமூச்சு என இருவகை மூச்சுகள் உள்ளன. உள்மூச்சு என்பது உயிர் வளியைச் சுமந்து செல்வது; வெளிமூச்சு என்பது கரியமிலக் காற்றைச் சுமந்து செல்வது. இவற்றைப் போலவே மனித மனங்களில் நல்லவை, தீயவை என இரண்டு குணங்களும் இரண்டு குதிரைகளைப் போல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குதிரைகளுக்குக் கடிவாளம் இட்டு, அடக்கியாள்பவர் ஒருவரும் இல்லை. ஈசனின் அருள் கிடைக்கப்பெற்றால், இந்தக் குதிரைகளை அடக்கியாளும் தந்திரத்தைக் கற்க முடியும் என்பது இதன் பொருள்.

இதையே ஒருவரியில் சொல்வதானால், காற்றை (மூச்சை) வென்றவர், மனதை வெல்கிறார், மனதை வென்றவர், வாழ்வை வெல்கிறார்.

‘காற்றைப் புகழ முடியாது; அவன் புகழ் தீராது’ என்பது பாரதியாரின் வாக்கு.

காற்றைப் புகழக்கூட வேண்டியதில்லை. மாசுபடுத்தாது இருந்தாலே போதும்; மனித இனம் மாண்புடன் வாழும்.

தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x