Published : 03 Aug 2017 10:29 am

Updated : 03 Aug 2017 10:29 am

 

Published : 03 Aug 2017 10:29 AM
Last Updated : 03 Aug 2017 10:29 AM

பைபிள் கதைகள் 60: ஒரு சேய் இரு தாய்

60

ளிய ஆயனாக இருந்த தாவீதை மாவீரனாக்கி இஸ்ரவேல் தேசத்தின் பேரரசன் ஆக்கினார் கடவுளாகிய யகோவா. சவுல் தாவீதைக் கொல்லத் துடித்தபோது, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவரைப் பதிலுக்குப் பழிவாங்கக் கூடாது என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். சவுலைக் கொல்ல நினைக்காமல் அவருக்குப் புத்திசாலித்தனமான வழிகளில் பாடம் கற்றுக்கொடுத்து, இஸ்ரவேல் மக்கள் தன் மீது வைத்திருந்த மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டார்.

சவுலுக்குப் பிறகு அரியணை ஏறிய தாவீது, 40 ஆண்டுகள் அரசாண்டார். கோட்டை நகராக இருந்த சியோயனைக் கைப்பற்றினார். அது பின்னர் ‘தாவீதின் நகரம்’என்று அழைக்கப்பட்டது. அங்கே பிறந்தவர்தான் தாவீதுக்குப் பின் இஸ்ரவேலின் அரசனாய் ஆன அவருடைய மகன் சாலமோன். 70 வயதில் தாவீது மறைந்தபோது, சாலமோன் இருபது வயதைக்கூட எட்டாதவராக இருந்தார்.

ஞானம் மிக்க சாலமோன்

வயதுக்குரிய துடிப்பு இருந்தாலும் பரந்த ராஜ்ஜியத்தையும் திரளான மக்கள் கூட்டத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் தன்னிடம் இல்லை என்பதை சாலமோன் உணர்ந்தார். அதேநேரம் தனது அனுபவங்களிலிருந்து தந்தை தாவீது கூறிய அறிவுரைகளை மனதில் கொண்டு நல்ல வழியில் ஆட்சி செய்யத் தொடங்கினார். கடவுள் அளித்த புனிதச் சட்டங்களைப் போற்றி நடந்தார். கடவுள் மீது நேசத்தை வைத்தார். அரசனைவிடக் கடவுளே உயர்ந்தவர் எனப் பிரகடனம் செய்தார்.

சாலமோனின் அன்பைக் கண்ட கடவுள் மிகவும் மகிழ்ந்தார். சாலமோனின் கனவில் தோன்றிய கடவுள், “சாலமோனே, என்ன வேண்டும் கேள், அதை உனக்குத் தருகிறேன்” என்றார். அதற்கு சாலமோன், “பரலோகத் தந்தையே… நான் இளைஞனாக இருக்கிறேன். இந்தத் தேசத்தையும் பெருந்திரளான உமது மக்களையும் சரியான பாதையில் நடத்திச் செல்ல, நீதி வழுவாத ஆட்சியை நான் செய்தாக வேண்டும். ஆனால், அதற்குரிய அறிவும் ஞானமும் என்னிடம் இல்லை. எனவே, போதிய ஞானத்தை எனக்குத் தாரும்” என்று கேட்டார். இதைக் கேட்டு கடவுள் மிகவும் சந்தோஷப்பட்டார்.

கடவுள் சாலமோனைப் பார்த்து, “நீண்ட காலம் வாழ வேண்டும் என்றோ பெரும் செல்வம் வேண்டும் என்றோ நீ கேட்கவில்லை, மாறாக மக்களைக் காக்க ஞானம் வேண்டும் எனக் கேட்டாய், எனவே இதுவரை யாருக்கும் அருளப்படாத அளவு ஞானத்தை உனக்கு நான் கொடுக்கிறேன். நீ விரும்பிக் கேட்காத செல்வங்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்று கடவுள் கூறினார்.

விநோத வழக்கு

கடவுள் அருளியபடியே தனக்குத் தலைசிறந்த ஞானம் வந்துவிட்டத்தை சாலமோன் உணர்ந்தார். அவர் நன்கு வளர்ந்து ஒரு அரசனுக்குரிய கம்பீரத் தோற்றம் பெற்றார். சாலமோனின் ஆட்சியில் இஸ்ரவேல் மக்கள் மகிழ்ச்சியும் அமைதியும் வசதிகளும் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்துவந்தனர்.

அப்போது அவரது அரசவைக்கு ஒரு விநோத வழக்கை இரு தாய்மார்கள் கொண்டு வந்தனர். கையில் ஒரு ஆண் குழந்தையைத் தூக்கி வந்திருந்த ஒரு தாய், அரசனைப் பார்த்து கூறினாள். “அரசே... இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு தினங்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான்.

ஆனால், ஒருநாள் இரவு அவளுடைய மகன் இறந்துவிட்டான். அதனால், நான் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் இறந்த அவளுடைய மகனை என் பக்கத்தில் படுக்கவைத்து விட்டு என்னுடைய மகனை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கிக் கண்விழித்தபோது என் பக்கத்தில் இறந்த நிலையில் இருந்த அவளுடைய மகனைக் கண்டேன். கண்டதுமே, அவன் என் குழந்தை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.” என்றாள்.

மற்றொரு தாய், “இல்லை அரசே… அவள் கூறுவது பொய்! உயிரோடிருக்கும் இந்தக் குழந்தை என்னுடைய மகன். நம்புங்கள்” என்றாள். முதலில் பேசிய தாயோ, இரண்டாமளைப் பார்த்து, “இல்லை இல்லை.. இறந்த குழந்தை உன்னுடையது, உயிரோடிக்கும் குழந்தை என் மகன்.. உன் வாயை மூடு” என்றாள். இப்படியே இரு தாய்மார்களும் அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்து வாய்ச் சண்டை இட்டார்கள்.

சாலமோனின் தீர்ப்பு

தனது மெய்க்காப்பாளனை அழைத்த சாலமோன். “வாளை எடுத்து உயிரோடுள்ள இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி, ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு” என்றார். அரசனின் ஆணையைக் கேட்டு அலறினாள் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்.

“ஐயோ வேண்டாம்! என் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவளுக்கே அவனைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறி மண்டியிட்டுக் கதறி அழுதாள். ஆனால், மற்றொரு தாயோ “எங்கள் இருவருக்குமே அந்தக் குழந்தை வேண்டாம்; அதை இரண்டாக வெட்டிப் போடுங்கள்” என்றாள். இதைக் கேட்ட சாலமோன் காவலனைத் தடுத்தார்.

“குழந்தையைக் கொல்ல வேண்டாம் எனக் கதறித் துடித்தவளே இந்தக் குழந்தையின் உண்மையான தாய். அவளிடமே அதைக் கொடு” என்றார். பொய்யுரைத்த தாய் வெட்கித் தலைகுனிந்து அவமானத்தால் கூனிக்குறுகிப் போனாள்.

பெரும் சலசலப்புடன் அரசவை ஆச்சரியத்தில் மூழ்கியது. ஒரு சேயுடன் வந்த இரு தாய்மாரின் வழக்கை சாலமோன், பிரச்சினையைத் தீர்த்து வைத்த விதத்தைப் பற்றி இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டனர். ஒரு ஞானமுள்ள அரசன் கடவுளால் அருளப்பட்டிருக்கிறார் என்று கூறி மகிழ்ந்தனர்.

- பைபிள் கதைகள் தொடரும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x