Last Updated : 24 Aug, 2017 12:54 PM

 

Published : 24 Aug 2017 12:54 PM
Last Updated : 24 Aug 2017 12:54 PM

பைபிள் கதைகள் 62: பிளவுபட்ட தேசம்!

கடவுளிடம் ஞானத்தை இறைஞ்சிப்பெற்றுப் பகுத்தறிவிலும் எழுத்தறிவிலும் தலைசிறந்து விளங்கிய சாலமோன் தன் மனைவியரால் தடம் மாறினார். எந்தக் கடவுள் அவருக்கு ஞானத்தைக் கொடுத்தாரோ அந்தக் கடவுள் எச்சரிக்கை செய்திருந்தும் அதை மறந்து, தன் முதுமையில் மனைவியரின் பேச்சைக் கேட்டுச் சிலைகளை வழிபடத் தொடங்கினார். தனது பொய்யான மத வழிபாட்டை மக்கள் மீதும் திணிக்கத் தொடங்கினார். இவ்வாறு அவர் மாறியபின் மக்களையும் வரி, போர், சடங்கு என வாட்டியெடுத்தார்.

இதனால் கோபம் கொண்ட கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, “ சாலமோனே நீ என்னைவிட்டு விலகிப் போய்விட்டாய், நான் கொடுத்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டாய். எனவே, ஆட்சியை உன் கையிலிருந்து பிடுங்கி, உன்னுடைய ஊழியர்களில் ஒருவரிடம் கொடுப்பேன். உன் அப்பாவாகிய தாவீதுக்காக இதை உன் காலத்தில் செய்ய மாட்டேன். உன் மகனின் கையிலிருந்து ஆட்சியைப் பிடுங்கிவிடுவேன். ஆனால், ஆட்சியை முழுவதுமாகப் பிடுங்கிவிட மாட்டேன்” என்று சொன்னார்.

அவ்வாறே சாலமோனின் முதுமையில் இஸ்ரவேல் மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி, அரசனுக்கு எதிராகக் கலகம் செய்யத் தொடங்கினர். அதற்குப் பல மக்கள் தலைவர்கள் உந்துதலாகவும் இருந்தனர்.

ஒரு கலகக்காரனும் தீர்க்கதரிசியும்

சேரேதா என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட நேபாத் என்பவருடைய மகன் யெரொபெயாம். இவர் சாலமோனிடம் அரச ஊழியராகப் பணியாற்றிவந்தார். என்றாலும் அரசனை எதிர்த்து இவர் கலகம் செய்துவந்தார். ஒருநாள் எருசலேம் நகரத்திலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அப்போது யெரொபெயாமை எதிரே சந்தித்தார் வயது முதிர்ந்த தீர்க்கதரிசி ஒருவர். அவர் சீலோனியரான அகியா. அவர் ஒரு புது அங்கியை அணிந்திருந்தார். யெரொபெயாமைப் பார்த்ததும் அகியா தான் அணிந்திருந்த புதிய அங்கியைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்தார். அகியாவின் இந்தச் செயலைக் கண்டு யெரொபெயாம் திகைத்தார்.

பின்பு அகியா, யெரொபெயாமிடம் “நீ பத்து துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலர்களின் கடவுளான யகோவா, ‘சாலமோன் இறந்த பிறகு அவனுடைய மகனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி அதில் பத்துக் கோத்திரங்களைச் சேர்ந்த மக்களை ஆளும் உரிமையை யெரொபெயாமுக்குத் தருவேன்’ என்று என்னிடம் கூறினார். மேலும் கடவுள், ‘என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும் இஸ்ரவேலில் உள்ள எல்லாக் கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்துக்காகவும் ஒரு கோத்திரத்தை ஆளும் உரிமையை மட்டும் சாலமோனின் மகனிடம் விட்டு வைப்பேன்.” என்றார்.

மேலும் கடவுள் கோபத்துடன், ‘என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு சீதோனியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள் உருவாக்கிய சிலைகளை வணங்குகிறார்கள். அவர்கள் என் வழியில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த செயல்களைச் செய்யவில்லை. சாலமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன்’ என்று என்னிடம் கூறினார். அதை அப்படியே நான் உனக்குத் தெரிவித்துவிட்டேன். நீ கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய்” என்று அகியா தன் அங்கியைக் கிழித்ததன் அடையாளத்தை யெரொபெயாமுக்கு உணர்த்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதையறிந்த சாலமோன் யெரோபெயாமைக் கொல்ல வகை தேடினார். ஆனால், யெரொபெயாம் எகிப்துக்குத் தப்பியோடிவிட்டான்.

சாலமோனின் முடிவும் தேசப் பிரிவும்

தன் முதுமையில் கடவுளுக்கு உண்மையற்றவராய் மாறிப்போன சாலமோன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்த பிறகு இறந்துபோனார். அவரை தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்தார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்தார் சாலமோனின் மகனாகிய ரெகொபெயாம். அவரிடம் மறைந்த அரசன் சாலமோன் கொண்டுவந்த கெடுபிடிகளைத் தளர்த்துமாறு இஸ்ரவேல் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து பிரிவு மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், ரெகொபெயாம் மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. சாலமோன் இறந்த தகவல் கிடைத்ததும் யெரொபெயாம் எகிப்திலிருந்து நாடு திரும்பினான். இப்போது தங்கள் கோரிக்கையை வென்றெடுக்கப் பத்துக் கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி யெரொபெயாமைத் தங்களுக்குத் தலைவர் ஆக்கினார்கள். தங்கள் தலைவரோடு சென்று கேட்டும் சாலமோனின் மகன் செவி சாய்க்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட மக்கள், “எங்களுக்கும் தாவீதுக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரிடமிருந்து எங்களுக்குப் பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இஸ்ரவேலர்களே, நீங்கள் போய் உங்கள் தெய்வங்களை வழிபடுங்கள். தாவீதே, உன்னுடைய வம்சத்தை மட்டும் நீ பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு ரெகொபெயாமுடன் மற்ற பத்து கோத்திரங்களைச் சேர்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். விரைவில் யெரொபெயாமை அழைத்து இஸ்ரவேல் முழுவதுக்கும் அவரை அரசன் ஆக்கினார்கள். யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரும் தாவீதின் வம்சத்தாருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இவ்வாறு தேசம் இரண்டாக உடைந்தது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாலமோனின் மகன் ரெகொபெயாம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் கோத்திரத்திலிருந்தும் ஒன்றுதிரட்டினார். பிரிந்துபோன இஸ்ரவேல் மக்களுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காகப் போரை அறிவித்தார். அப்போது கடவுளாகிய யகோவா, தீர்க்கதரிசியாகிய செமாயாவிடம் பேசினார். யூதாவின் அரசனாகிய சாலமோனின் மகன் ரெகொபெயாமிடமும் அவனை ஆதரிக்கும் யூதா, பென்யமீன் கோத்திரத்தாரிடமும் உடனே செல். ‘உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்யக் கூடாது. ஏனென்றால், நானே தேசத்தைப் பிரித்துக் கொடுத்தேன் எனக் கூறு’ என்றார். சகோதர மக்களுக்கு மத்தியில் போர் தொடங்கவிருந்த சூழ்நிலையில் விரைந்து சென்ற செமாயா தீர்க்கதரிசி கடவுளின் வார்த்தைகளை அவர்களிடம் அறிவித்தார். போருக்குத் தயாராக வந்திருந்த வீரர்கள் யகோவாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஆயுதங்களை உறையிலிட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்ரவேல் மக்கள், தங்கள் கடவுளின் கருணை குறித்து நெகிழ்ந்துபோனார்கள்.

பாதையை மாற்றிய பதவி ஆசை

பெரும் போர் ஆபத்து கடவுளால் நீங்கியது குறித்து மகிழ்ச்சியடைந்தாலும் வெகுவிரைவிலேயே யெரொபெயாமின் பாதையைப் பதவி ஆசை மாற்றியது. எப்பிராயீம் மலைப்பகுதியில் சீகேம் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறிய யெரொபெயாம், பின்னர் பெனூவேல் நகரத்தைக் கட்டினார். அப்படியும் யெரொபெயாமின் மனம் ஆறுதல் அடையவில்லை. ‘நடக்கவிருந்த பெரும் போரில் சகோதரர்களுடன் மோதி மடிந்துவிடாமல் காப்பாற்றிய யகோவாவின்மேல் பிரியமாக இருக்கும் இந்த இஸ்ரவேலர்களின் மனதை எப்படி மாற்றுவது? மீண்டும் எருசலேம் நகரத்திலிருக்கும் சாலமோன் கட்டிய தேவாலயத்துக்குக் கடவுளை வணங்கச் சென்றால் காலப்போக்கில் இவர்களுடைய இதயம் தங்கள் எஜமானாகிய ரெகொபெயாம் பக்கம் சாய்ந்துவிடும். பின்பு, அவர்கள் என்னைக் கொன்றுவிட்டு யூதாவின் ராஜாவான ரெகொபெயாமுடன் சேர்ந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார்.

இதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார். பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு நிறையக் கஷ்டமாக இருக்கும். இதோ! எகிப்தில் அடிமைகளாய் இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்” என்று அறிவித்து, அவற்றில் ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றை தாணிலும் பிரதிஷ்டை செய்தார். மக்கள் மீண்டும் பாவக்குழியில் விழுவதற்கு அரசன் உருவாக்கிய புதிய வழிபாடு காரணமானது. யூதாவில் கொண்டாடப்படும் பாஸ்கா பண்டிகையைப் போலவே ஒரு பண்டிகையை எட்டாம் மாதத்தில் தொடங்கிவைத்தார். போலிச் சடங்கிலும் கொண்டாட்டங்களிலும் மக்கள் மந்தைகளைப் போல் மதிமயங்கிக் கிடந்தார்கள். யெரொபெயாமைக் கடவுள் தண்டிக்க முடிவு செய்தார்.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x