

விவிலியம் காட்டும் விருட்சம் என்று அத்திமரத்தைப் போற்றுகிறார்கள் பைபிள் ஆராய்ச்சியாளர்கள். இஸ்ரேல் ஒரு மத்திய கிழக்கு நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வ இஸ்ரவேலில் திராட்சைக் கொடிகளைப் போலவே நிலப்பரப்பின் கலாச்சாரக் கருப்பொருட்களில் ஒன்றாக இருந்தது அத்திமரம். அது சுட்டெரிக்கும் கோடையில் நிழல்தரும் மரமாகவும் இருந்ததால் அத்திமரங்களைச் சாலைநெடுகிலும் நிழலுக்காக நட்டு வளர்க்கும் வழக்கமும் இருந்தது.
அதேபோல் திராட்சைத் தோட்டங்களின் வரப்புகளில் அத்திமரங்கள் நடப்பட்டன. வயலில் வேலை செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற தருவாக அத்திமரம் இருந்தது. பெரிய இலைகளும், பரந்த கிளைகளும் இருப்பதால் அத்திமரம் மத்திய கிழக்கு நாடுகளில் இன்றும் போற்றப்படுகிறது. அத்திமரம் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒலிவமரங்கள்(ஆலீவ்)அவற்றின் எண்ணெய்க்காகக் கொண்டாடப்பட்டன. தமிழ்நாட்டின் நிலவியல் வரலாற்றிலில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் அத்திமரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இனி அத்திமரம் விவிலியத்தில் எடுத்துக் கொண்ட இடத்தைப் பார்ப்போம்.
செழுமையின் அடையாளம்
அத்திமரம் அதன் உரிமையாளருக்குத் தாதுச்சத்துக்கள் நிறைந்த பழங்களைக் கொடுக்கிறது. ஆகவே, சாலொமோன் ராஜாவின் காலம் தொட்டே ஒருவன் தனக்குச் சொந்தமான அத்திமரத்தின் கீழ் உட்காருவது சமாதானத்தையும் செழுமையையும் நிறைவையும் அர்த்தப்படுத்தியது.
இதை விவிலியத்தின் ஆதியாகமத்தில் இராஜாக்கள் பகுதியில் படித்து உணர முடியும். இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்திமரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).
ஆண்டிற்கு இருமுறை விளைச்சல் தரும் அத்திமரத்தின் முதல் அறுவடையை யூதர்களாகிய இஸ்ரவேல் மக்கள் பழங்களாக உண்டு மகிழ்ந்தனர். இரண்டாம் அறுவடையில் கிடைக்கும் அத்திப் பழங்களை உலர வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தினர். உலர்ந்த அத்திப் பழங்களை வட்டவடிவமான அடைகளாகத் தட்டி உண்டனர். உறவினர்களுக்கும் பரிசாகக் கொடுத்தனர். இயேசுவின் மூதாதையரான தாவீதுவுக்கு ஞானவதியாகிய அபிகாயில் ஒருநூறு அத்திப் பழ அடைகளை பரிசாகக் கொடுத்தாள். நாடோடிகளுக்கு ஊட்டம்மிகுந்த உணவாக அது இருக்கும் என்பதை அவள் அறிந்திருந்தாள் என்பதை விவிலியம் நமக்கு விளக்குகிறது.
விளைச்சல் இல்லா மரம் வெட்டப்படும்
யூத மண்ணின் பூர்வ விவசாயிகள் பலன்தராத அத்திமரங்களை பயிர்களுக்கு நடுவிலான களைகளைப் போல் எண்ணினார்கள். அத்திமரம் பற்றிய ஒரு விவிலிய எடுத்துக்காட்டில் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் தன் தோட்டத் தொழிலாளியிடம் : “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிக் களைத்தேன்; ஒரு கனியைக்கூட அது என் கண்களுக்குக் காட்டவில்லை, இதை வெட்டிப்போடு, இது வளமான நிலத்தைக் கெடுக்கும் களைபோல் உள்ளது”(லூக்கா 13:6) என்று கூறியிருக்கிறார். பிறகு இயேசுவின் காலத்தில் கனிதரும் மரங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டதால், பலன்தராத மரம் வெட்டப்பட்டது.
கடவுளுக்குக் கீழ்ப்படியாததன் காரணமாக அத்திப் பழங்களின் விளைச்சல் குறைவாக இருந்தது கஷ்டகாலத்தைக் குறித்தாக விவிலியம் எடுத்துக் காட்டுகிறது. “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியா மற்போனாலும்; நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்”(ஆபேகூக் 3:17) என ஆபேகூக் தீர்க்கதரிசி பரலோகத் தகப்பன் மீதான தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல ஆட்சியாளர்களுக்கும் பழைமைவாதிகளுக்கும் பயப்படாத கடவுளுக்கு உண்மையாயிருந்த யூதர்களை நல்ல அத்திப் பழங்களுள்ள ஒரு கூடை என்றார் எரேமியா. ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுயநலத்தை எண்ணி நாப்பிரழ்ந்த வர்களை சாப்பிட முடியாத கெட்ட அத்திப் பழங்கள் என்றார். “அவற்றை தூக்கியெறியத்தான் வேண்டியிருந்தது”(எரேமியா 24:2) என்றார்.
அத்திமரம் புகட்டும் பாடம்
விவிலியம் முழுவதும் காணப்படும் அத்திமரமும் அதன் பழங்களும் இயேசுவின் பார்வையில் இன்னும் ஒருபடி மேலாகப் பளிச்சிட்டன. யூதேயா தேசத்திடம் கடவுள் பொறுமையாக இருந்ததை இயேசு அத்திமர உவமையின் வழியாகச் சுட்டிக் காட்டினார். மேலே நீங்கள் படித்த தன் திராட்சைத் தோட்டத்தில் விளைச்சல் அற்ற அத்திமரத்தை வெட்டி எறியச்சொன்ன உவமையை இயேசு சொன்னார்.
ஆனால், அந்தத் தோட்டக்காரனோ, “எஜமானே இது இந்த வருடம் மரத்தைச் சுற்றிலும் கொத்தி, எருப் போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” (லூக்கா 13:8) என்று சொன்னான்
இயேசு அத்திமர உவமையைச் சொன்ன காலத்தில் அவர் ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக யூதேயா தேசத்தாருக்கு பிரசங்கித்து, பரலோகத் தகப்பன் மீதான அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த பாடுபட்டுவந்தார். ஆனால் யூதேயா மேசியாவைப் புறக்கணித்தும் தனது சொந்த மக்களாலேயே இயேசு கைவிடப்பட்டதும் வரலாறாகிவிட்டது. ஆன்மீக ரீதியாக யூதேயா தேசம் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதை விளக்கவே இயேசு அத்திமரத்தை பயன்படுத்தினார்.
அவர் வாதைமிகுந்த தனது மரணத்தை எதிர்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன், பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியில் இலைகள் நிறைந்திருந்த ஒர் அத்திமரத்தைக் கண்டார்; ஆனால் அதில் பழங்களே இல்லை. அது பயனற்ற மரம் என்பதைக் காட்டியது(மாற்கு 11:13). என்றாலும் கனிகளற்ற அந்தமரம் செழிப்பாக காட்சியளித்தது. அதைப்போலவே யூதேயா தேசமும் ஆன்மிகத்தில் செழித்திருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தைத் தந்தது.
ஆனால் அது கடவுளுக்கேற்ற கனியைக் கொடுக்கவில்லை. பரலோகத் தகப்பனின் சொந்த குமாரனையே புறக்கணித்துவிட்டது. கனியற்ற அத்திமரத்தை இயேசு சபித்தார், அடுத்த நாள் அந்த மரம் பட்டுப்போய் இருப்பதை அவரது சீடர்கள் கண்டு அதிர்ந்தார்கள். ’இறைமக்களாக’ தேர்ந்தெடுத்த யூதர்களைக் கடவுள் நிராகரித்து விடுவார் என்பதற்குப் பட்டுப்போன அந்த மரம் பொருத்தமான அடையாளமாக இருந்தது (மாற்கு 11:20) என்கிறார் மாற்கு. அத்திமரம் தற்காலத்திற்கும் புத்தி புகட்டும் ஒன்றாகவே காற்றில் அசைந்தாடுகிறது.