

காஞ்சி மகா முனிவர் தனது சென்னை விஜயத்தின்போது மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலைக்கு அருகே உள்ள சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்குவது வழக்கம். தெய்வத்தின் குரலில் காணப்படும் கட்டுரைகள் பலவற்றுக்கான சொற்பொழிவுகளை அங்கிருந்துதான் நிகழ்த்தினாராம். இந்த விஜயங்களின்போது அவர் மயிலை கற்பகாம்பாள் உடனுறையும் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவது வாடிக்கை.
அப்போது திருக்கோயில் குளத்தில் குளித்துவிட்டு, குளப்படியில் அமர்ந்து ஜபம் செய்வாராம். இத்திருக்கோயில் குளம் இருக்கும் மேற்கு வாயில் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்து துவஜஸ்தம்பம் அருகே உலக நன்மையை வேண்டி வணங்கி நேராக சுவாமி சன்னிதிக்கு முன் வருவாராம். அங்கு சுவாமி, அம்பாள் இரு சன்னிதிகளையும் தரிசனம் செய்யும் வண்ணம் நந்திகேஸ்வரர் உள்ள மகா மண்டபத்தின் நடுவில் நின்றபடி சுவாமி, அம்பாள் இருவரையும் வணங்குவாராம். அப்போது மகா பெரியவர் ‘மயிலாப்பூர் மகா ஷேத்திரம்’ எனக் கூறியதாக, கபாலீஸ்வரர் திருக்கோயிலின் ஜெயா சிவாச்சாரியார் தெரிவித்தார்.
அந்தக் காலகட்டத்தில் கற்பகாம்பாளுக்காக ஆனந்தவல்லி தலைமையில் பக்தர்கள் இணைந்து ஆயிரம் சவரன்கள் கொண்ட தங்கக் காசு மாலை தயாரித்தனர். இதில் லலிதா சகஸ்ரநாமத்தில் உள்ள லலிதாம்பாளின் ஆயிரம் நாமங்கள் ஒவ்வொரு காசிலும் ஒரு நாமம் வீதம் பொறிக்கப்பட்டது. இந்த நாமங்கள் பிழையில்லாமல் இருக்கிறதா என்பதைப் பூதக் கண்ணாடி வைத்துச் சரி பார்த்து உறுதி செய்தாராம் மஹா பெரியவர். இதற்கு சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக ஜெயா சிவாச்சாரியார் மேலும் தெரிவித்தார். இன்றளவும் அந்த தங்கக் காசு மாலை, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறதாம்.
மாதொரு பாகன் எனப் போற்றப்படும் ஈசன் உறையும் கபாலீஸ்வரர் திருக்கோயில் பெண்களைப் போற்றும் விதத்தில் அமைந்துள்ளது எனலாம். இங்கு மயிலாக வந்த அன்னை பார்வதி தேவி கற்பகாம்பாள் என்ற திருநாமம் கொண்டாள். அம்பாளின், பூஜையை ஏற்ற கபாலீஸ்வரர் அன்னையைத் திருமணமும் செய்தார். அங்கம் பூம்பாவை என்ற பெண்ணை சம்பந்தர் உயிர்ப்பித்த தலமும் இதுவே.