Last Updated : 27 Jul, 2017 10:54 AM

 

Published : 27 Jul 2017 10:54 AM
Last Updated : 27 Jul 2017 10:54 AM

இறைமை இயற்கை 09: உயிர் வளர்க்கும் காற்று

நிலையாமை என்கிற ஒற்றைக் காலில் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது. இந்த உலகத்தில் எவையெல்லாம் நிலையில்லையோ அவையெல்லாம் அமரத்துவம் எய்துகின்றன.

உடல் நிலையில்லாதது; அது இறப்புக்குப் பிறகு ஐம்பூதங்களில் உறைகிறது. செல்வம் நிலையில்லாதது; அது வந்த வழியே திரும்பிச் செல்லக்கூடியது. செயல்களின் விளைவுகள் நிலையில்லாதவை; அவை புகழ் என்ற மாலையைச் சுமந்து காலத்தில் நிற்கவல்லவை.

இந்த வாழ்க்கையின் சிறப்பே நிலையாமைதான். பிறப்பது யாவும் மறைந்தே தீரும் என்பதால்தான், இடைப்பட்ட காலம் இன்பமாக இருக்கிறது. நிலையாமை மட்டும் இல்லாவிட்டால், மனிதர்களுக்குக் காலங்கள் இல்லை; கவலைகள் இல்லை; தேடல் இல்லை; தினசரி வாழ்க்கையும் இல்லை.

இப்படி மனித வாழ்க்கைக்கு நிலையாமையை ஏற்படுத்தித் தரும் இறைவனே நிலைத்த புகழைக் கொண்டவன். அவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பவன். எனவேதான் ‘மெய்யா விமலா’ என்று இறைவனை அழைத்து, அவனது அமரத்துவத்தைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர் (திருவாசகம் – திருவண்டப் பகுதி)

நிலையாமையும் இயக்கமும்

காற்று என்பது நிலையாமையின் சின்னம். காற்று எங்கும் நிலைப்பதில்லை. ஓர் இடத்தில் காற்று நிலைத்தால், அது வெளிப்பட்டே ஆக வேண்டும். ஒரு பலூனுக்குள் நிலைத்திருக்கும் காற்று, அதிலிருந்து அமைதியாக வெளியேறும் அல்லது வெடித்துச் சிதறும். கடல் பரப்பில் காற்று நிலைத்தால் புயல் உருவாகும்; மண்ணுக்குள் காற்று நிலைத்தால் எரிமலை வெடிக்கும். ஓர் உடம்பில் காற்று நிலைத்தால், நோய் தோன்றும். ஒட்டுமொத்தமாகப் பூமியில் காற்று நிலைத்தால் ஊழி வெடிக்கும்.

காற்று என்பது நிலையாமையின் சின்னம் மட்டுமல்ல; அது இயக்கத்தின் அடையாளமும்கூட. இந்த உலகத்தில் காற்று சுழன்றுகொண்டே இருக்கிறது என்றால், பூமி இயங்கிக்கொண்டே இருக்கிறது என்று பொருள். ஓர் உடம்பில் காற்று சுழன்றுகொண்டே இருக்கிறது என்றால், அந்த உடம்பில் உயிர் இருக்கிறது என்று பொருள். உயிரற்ற ஓர் உடம்பில் இருந்து முதலில் வெளியேறுவது காற்றுதான். காற்று முற்றிலுமாக வெளியேறிவிட்டால், அங்கு உயிர் இருப்பதில்லை.

காற்றின்றி உயிரில்லை

ஒரு நலமான மனிதர் உணவு உட்கொள்ளாமல், சில வாரங்கள் வாழ முடியும்; தண்ணீர் அருந்தாமல் சில நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் சில மணித் துளிகள்கூட உயிர் வாழ முடியாது. காற்று அவ்வளவு அத்தியாவசியமானது. மனிதர்கள் காற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம். மற்ற பூதங்களைப் போல மாசுபடுத்தலாம். ஆனால், இறுதி அதிகாரம் என்பது காற்றிடம்தான் இருக்கிறது.

இப்படி அதிகாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், நிலையாமையில் நிலைத்திருப்பதும், இயங்கிக்கொண்டே இருப்பதும் இறையின் குணமேயன்றி வேறில்லை.

‘காயமே இது பொய்யடா – வெறும்

காற்றடைத்த பையடா’ என்பது

சித்தர் பாடல்.

பை போன்ற உடலில் காற்று நிரம்பி இருந்தால்தான் அது ‘மெய்’. இல்லாவிட்டால், அது பொய் (பிணம்) என்கிற நிலையாமையைப் பாட நினைத்த சித்தர், காலத்தில் ‘நிலைத்து’ விட்டார்.

வழிபடுகிறோம்

ஐம்பூதங்களில் திளைக்கத் திளைக்க ஊறிக் கிடந்த பாரதியார், காற்றுடன் உரையாடுகிறார். அவரிடம் காற்றுத் தேவன், ‘என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் பிராணன்.’ என்று சொல்கிறான்.

பிறகு அவர் எழுதுகிறார்: ‘காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து, நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருவான். அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம்.’(வசனக் கவிதைகள்: காற்று – 8 (சுருக்கம்)

எல்லாம் கடத்துபவன்

காற்று என்பவன் ஒரு கடத்தல்காரன். நாம் இறைவனுக்கு ஏற்றும் விளக்கிலிருந்து ஒளியைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்குச் சூடும் மலர்களிலிருந்து வாசத்தைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்கு ஓதும் திருமுறைகளிலிருந்து மொழியைக் கடத்துகிறான். நாம் இறைவனுக்கு ஊதும் வாத்தியங்களிலிருந்து இசையைக் கடத்துகிறான். நாம் இறைவனின் மீது கொண்டிருக்கும் காதலிலிருந்து பத்திமையைக் கடத்துகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, மேலிருந்து பிரபஞ்ச ஆற்றலைக் கடத்தி வந்து ஒவ்வோர் உயிருக்கும் அமுதத்தைப் பொழிகிறான்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத, மாற்று கண்டறிய முடியாத காற்றை நாம் எப்படிக் கையாளுகிறோம்?

யுக முடிவு

தொழிற்சாலைகளைப் பெருக்கினோம்; வாகனங்களைப் பெருக்கினோம்; ரசாயனங்களைப் பெருக்கினோம்; குப்பைகளைக் கொளுத்தினோம்; வளர்ச்சியின் சிகரத்தில் நின்று நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொண்டோம்.

ஆனால், காற்று நலமாக இருக்கிறதா, என்பதைப் பற்றி நமக்கு உணர்வே இல்லை. காற்று மாசு என்பது ஆபத்தான நிலைக்கு உயர்ந்துவிட்டது என்பதைப் பற்றி நமக்குக் கவலையே இல்லை. காற்று நலமாக இருந்தால்தான், நம்முடைய வாழ்வு நலமாக இருக்கும் என்கிற சிந்தனைகூட இல்லை. இந்தியாவின் தலைநகரமே முகமூடி அணிந்து சாலையில் நடந்து போனதைப் பார்த்த பிறகும்கூட, நமக்குக் காற்று மாசு குறித்த கவனம் பிறக்கவில்லை.

காற்றை நாம் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால், பாரதியார் சொல்வதுபோல, இந்த உலகம் என்கிற பந்தலின் கயிறுகளைக் காற்று அசைத்திடுவான். யுக முடிவு செய்திடுவான். அப்போது ஈசன் வெறியிலே இருப்பான்.

தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x