

தி
ருவாசகத்தில் நான்கு பாடல்களில் தில்லையைக் குறித்து மணிவாசகர் கூறிய சான்றுகள் கிடைக்கின்றன. திருவாசகத்தின் திருத்தெள்ளேணம் பதிகத்தின் 20-ம் பாடலில் வரும் “அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற” என்ற வரிக்கு ‘கடல் நீரலைகள் ஒசை எழுப்புகின்ற தில்லை அம்பலத்தே ஆடுகின்ற’ எனப் பொருள்கொண்டால், தில்லை அம்பலம் கடற்கரையில் அமைந்திருந்ததாகக் கொள்ள இடம் உண்டு; ஆனால், பல உரையாசிரியர்கள் வயலில் தேங்கியுள்ள நீர் அலம்புகின்றது என்றே பொருள் கொள்கின்றனர்.
திருவாசகத்தின் திருப்பூவல்லி பதிகத்தின் ஒன்றாம் பாடலில் “அணையார் புனல்தில்லை” என்ற பதிவின் மூலம் தில்லையின் வயல்வளத்தையும் 14-ம் பாடலில் “தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா” என்று பதிவின் மூலம் தில்லைக் கோயில், பெரிய மதில்களைக் கொண்டிருந்ததையும் கண்டபத்துப் பதிகத்தின் ஆறாம் பாடலில் “செறிபொழில்சூழ் தில்லைநகர்” என்று வருவதால் தில்லையின் பொழில் சூழ்ந்த சோலைவளத்தையும் அறிகிறோம்.
ஞானசம்பந்தர் பாடல் ‘கழிசூழ்ந்த தில்லை’ என்று சுட்டிக்காட்டியதைப் போல, மேற்கண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் காலத்தில் தில்லைக் கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை நிறுவவில்லை. எனவே, நானூறு பாடல்கள் கொண்ட மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை ஆராய்வோம்.
திருக்கோவையாரில் (பாடல் எண்கள்: 20, 49, 85, 122, 182, 183, 222) ஏழு பாடல்கள் தில்லைப் பெருங்கோயிலுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன.
இதுகாறும் தமிழிலக்கிய வரலாறு எழுதிய தமிழியல் ஆய்வாளர்கள் மாணிக்கவாசகர் காலத்திலிருந்த மன்னனின் பெயர் வரகுணப்பாண்டியன் என்பதைத் திருக்கோவையாரிலிருந்துதான் எடுத்துக்காட்டினார்கள்; அம்மன்னன், முதலாவது வரகுணனா இரண்டாவது வரகுணனா என்று ஆய்வுப் பட்டிமன்றங்கள் நிகழ்த்தி, புறச்சான்றுகளைக் கொண்டு, இரண்டாவது வரகுணனே என்று முடிவுகட்டி, மாணிக்கவாசகரின் காலத்தை ஒன்பதாவது அல்லது பத்தாவது நூற்றாண்டு என்று முடிவுசெய்தனர். அதே திருக்கோவையாரில்தான், தில்லையைக் கடல் சூழ்ந்திருந்த செய்தியைத் தெளிவாகச் சுட்டும் அகச் சான்றுகளான ஏழு பாடல்களைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
முருகப்பெருமானைக் குறித்துத் திருவாசகம் திருவுந்தியார் 17-ம் பாடலில் “குமரன்தன் தாதைக்கே உந்தீபற!” என்றும், திருப்பொற்சுண்ணம் 3-ம் பாடலில் “நல்வேலன் தாதை” என்றும் இரண்டு பதிவுகள் கிடைக்கின்றன.
இளையவரான குமரக் கடவுளைக் குறித்து மணிவாசகர், மூத்தவரான விநாயகப் பெருமானைத் தன் பாடல்களில் எங்குமே குறிப்பிடவில்லை என்பதிலிருந்து, மாணிக்கவாசகரின் காலத்தில் தமிழகத்தில் விநாயக வழிபாடு இல்லாமல் இருந்தது என்பது மிகத் தெளிவு.
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றியது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. மூவர் தேவாரங்களிலும் காணப்படும் விநாயகப் பெருமான் வழிபாடு, மாணிக்கவாசகரின் திருவாசகத்திலோ திருக்கோவையாரிலோ முற்றிலும் இல்லாதது, மாணிக்கவாசகரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதற்கும், தேவார மூவருக்கும் முந்தையது என்பதற்கும் ஒரு வலுவான புறச் சான்று.
மூவருக்கும் மூத்த திருமூலரை சம்பந்தரும், அப்பரும் பாடவில்லை.
“ஒன்று அவன்தானே” என்று தொடங்கும் பாடலே திருமந்திரத்தின் முதல் பாடல் என்று சேக்கிழார் பெருமான் சொல்வதிலிருந்து திருமூலரின் திருமந்திரத்திலும் விநாயகர் வழிபாடு இல்லை என்பதும், திருமூலரும் தேவார மூவருக்கும் மூத்தவர் என்பதும் தெளிவு.
திருமூலரைத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் பாடவில்லை; ஆனால், சுந்தரர் பெருமான் திருத்தொண்டர் தொகையில் ‘நம்பிரான் திருமூலன்’ என்று தனியடியாராகப் பாடியதுபோல், ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று மணிவாசகரையும் தனியடியாராகப் பாடியிருப்பதற்கான வாய்ப்பை மறுக்க இயலாது. சுந்தரர் பெருமான் ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்றது மணிவாசகரைத்தான் என்று நிறுவினால், அறுபத்துமூவரில் மணிவாசகர் உண்டு என்பது தெளிந்துவிடும்.
வரலாற்று ஆய்வுநெறி முறைகள் அடிப்படையில் நோக்கினால், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், மாணிக்கவாசகரின் காலத்தில் கடற்கரைக் கோயிலாக விளங்கியது என்பதை விளக்கும் திருக்கோவையாரின் ‘கடல்சூழ்ந்த தில்லை’ பதிவுகளும், விநாயகப் பெருமான் வழிபாட்டுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவர் மாணிக்கவாசகர் என்பதைக் காட்டும் வலுவான சான்றுகளை ஒப்பிடும்போது, வரகுணன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் காலத்தையும் மாணிக்கவாசகரின் காலத்தையும் ஒப்பிடும் வாதம் மிக மிக வலுவற்றது என்பது தெளிவாக விளங்கும். (ஒரு மன்னனின் பெயரை அவன் மகன்வழிப் பெயரனோ, மகள்வழிப் பெயரனோ பெறுவது தமிழ்க் குடிகளில் இன்றும் நாம் காணும் தொன்மப் பண்பாட்டு நிகழ்வுகள்.) எனவே, மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதி.
எக்காலத்தும் மாறாது நிலைபெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும் உண்மை ஆகும்; இடையே தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் என்னும் மாற்றம் ஆகும். இறைவனும் உயிர்களும் மெய்ப்பொருட்கள்; உலகமும் உலகியல் சார்ந்த மனித உடல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் மாற்றம் என்பதற்கு உட்பட்டு, மாறிக்கொண்டே இருப்பதால் அவை யாவும் பொய் ஆகும்.
முற்றறிவு பெற்ற இறைவன், ஆணவம் என்னும் அறியாமையில் அகப்பட்டுக் கிடக்கும் சிற்றறிவு கொண்ட உயிர்களுக்கு அறிவு புகட்டி, ஆணவ மலம் நீக்கவே, எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகையும் உடல்களையும் படைத்து, உயிர்களை அவ்வுலக உடல்களில் வாழச்செய்து, உயிர்கள் தன்னிச்சையாக வினைகள் செய்ய அனுமதிக்கிறான்; அவ்வினைப்பயன்களை உயிர்களுக்கு நுகர்வித்து, உயிர்களுடன் தானும் உடன் வாழ்ந்து, வழிகாட்டுகிறான். இவ்வாறு, மெய்ப் பொருளான இறைவனே, உயிர்களிடம் கொண்ட கருணையால் பொய்ப் பொருளாகவும் ஆகி நிற்கும் மாண்பை, மணிவாசகர் “உண்மையுமாய், இன்மையுமாய்” என்று போற்றுவார்.
இறைவன் இன்மையாய் (பொய்ப் பொருட்களாகவும்) நிற்பது, உயிர்கள் உண்மையை (மெய்ப் பொருளை) உணரும் பொருட்டே என்னும் திருவுளக் குறிப்பை அறிந்து, மெய்ப் பொருளான சிவத்திடம், மெய்ம்மையாம் சிவத்தையே வேண்டினார் மணிவாசகர். சுந்தரர் காலத்துக்கு முன்பும், பின்பும் திருவாசகத்துக்கு இணையான நூல் இல்லை.
மணிவாசகரையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்தார் சுந்தரர் பெருமான்.
உயிர்கள் உலகில் வாழ, மாறிக்கொண்டேயிருக்கும் தன்மைவாய்ந்த இப்பொய்ப் பொருட்களும் அவசியம். மூவர் தேவாரமும் இத்தேவை கருதி, பொய்ப் பொருளாம் பொன்னையும் மெய்ப் பொருளாம் இறைவனையும் ஒருங்கே வேண்டுபவை என்பதால் அவை ‘திரோதானம்’ என்னும் உலகியல் வழியாக இறைவனை அடையப் பாடப்பட்டவை; திருவாசகப் பாடல்களில் ‘திருவருள்’ என்னும் மெய்ப் பொருளாம் சிவத்தை மட்டுமே பாடி, இப்பொய்ப் பொருட்களைச் சிந்தையிலும் வைக்காத மணிவாசகரின் பொய்யடிமை இல்லாச் சிறப்பே திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர் பெருமானின் மனதில் மேலோங்கி நின்றதால், ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று மணிவாசகரைப் பாடிவிட்டார்.
இறுதியாக, மணிவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முந்தையது என்பதும் சுந்தரர் பெருமான் தம் திருத்தொண்டர் தொகையில் தாம் பாடிய தனியடியார்கள் அறுபத்தியொருவரில் ஒருவராக மணிவாசகப் பெருமானையே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார் என்பதும் அவரையே பெரிய புராணத்தில் சேக்கிழாரும் பாடியுள்ளார் என்பதும் தெளிவு. சிவாலயங்களில் அறுபத்து மூவர் வரிசையில் மணிவாசகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டுச் சிவனடியார்களின் மனங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த குறை நீங்கும். ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த வரலாற்றுப் புதிரை விடுவித்து நற்செய்தியுடன் வான்கலந்த மாணிக்கவாசகம் உங்களுடன் கலந்து நிறைவடைகிறது.
(வாசகம் நிறைந்தது)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in