ஓர் ஆண் மகனை அனுப்புவேன்

ஓர் ஆண் மகனை அனுப்புவேன்
Updated on
2 min read

ஏக இறைவனாம் யகோவா தேவன் பூமியை ஒரு சொர்க்கலோகம் போலவே படைத்தார். அதில் முதல் மனிதனாகிய ஆதாமையும் அவனது தனிமையின் துயர் துடைக்க ஏவாளையும் படைத்தார். அவர்களுக்கு ஏதேன் எனும் தோட்டத்தில் தங்க இடம் தந்தார். அவர்கள் இருவரும் கபடமும் வெட்கமும் இல்லாத புனிதத்தன்மையுடன் வாழ்ந்தார்கள். இறைவனின் ஊழியனாகப் பணிபுரிந்த லூசிபர் எனும் தேவதூதன், அவரது ஆளுகையை ஏற்காமல் புரட்சி செய்தான்.

இதனால் உலகின் முதல் தீய சக்தியாக மாறிய அவனை மரணத்தின் நிழலாகச் சபித்தார் இறைவன். தன் வீழ்ச்சியில் பாடம் கற்றுக்கொள்ளாத லூசிபர், இறைவனைப் பழிவாங்க எண்ணி அவரது அற்புதப் படைப்பாகிய ஆதாம்- ஏவாள் இருவரையும் அழிக்க முயன்றான்.

அவர்களுக்கு ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்ணும்படி செய்தான். இதனால் இறைவனின் கோபத்துக்கு ஆளான ஆதாம் ஏவாள் இருவரும், மீண்டும் மீண்டும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு, கீழ்ப்படியாமை எனும் பாவத்தில் நிலைத்திருக்காத வண்ணம், அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். அது முதல் கபடமும், வெட்கமும், அச்சமும் பெற்று இயற்கையோடு போராட்டம் மிகுந்த வாழ்வைத் தொடங்கினார்கள்.

ஏதேன் தோட்டத்தை இழந்த போது ஆதாமும் ஏவாளும் அடைந்த துக்கமும் துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல. என்றாலும் கடவுள் தன் படைப்பைக் கைவிட விரும்பவில்லை. கீழ்ப்படியாமையால் முதல் பாவத்தைச் செய்து, கடவுளின் கோபத்துக்கு ஆளான அவர்களை, அந்தப் பாவத்திலிருந்து விடுவித்து மீட்க. “ஓர் ஆண்மகனை அனுப்புவதாக” அவர்களுக்கு வாக்களித்தார். கிறிஸ்தவக் கலாச்சார வாழ்வில் இதுவே ‘ வாக்குத் தத்தம்’ என்று வருணிக்கப்படுகிறது.

ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர்

முதல் குடும்பத்தின் கீழ்ப்படியாமையால் விளைந்த பாவம், அவரது சந்ததியார் தொடங்கி இன்றுவரை, பாவம் செய்யும் சுபாவத்துடனே மானுடப் பிறப்பு தொடர்கிறது. ஆனால், கடவுள் அளித்த வாக்குறுதி மானுட வாழ்வை நம்பிக்கை மிக்கதாக மாற்றியது. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கடவுள் அளித்த இந்த வாக்குறுதி, பெற்றோரால் பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்டு வந்தது. வழிவழியாக, பரம்பரை பரம்பரையாகத் தொடரும் தங்கள் பாவத்தை நீக்கி, இறுதித் தீர்ப்பிலிருந்து தங்களை விடுவித்து, லூசிபரின் முழு அதிகாரத்தின் கீழ் அதள பாதாளத்தில் இருக்கும் தீ நாக்குகள் தின்னும் நரகத்தில் விழாதபடி, தங்களை மீட்கும் தேவகுமாரனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

இப்படிக் காத்திருப்பதில் மக்கள் சோர்ந்து போகும் ஒவ்வொரு தருணத்திலும் தனது தூதர்களாகிய தீர்க்கதரிசி களை அனுப்பி, அவர்களை, தனது வாக்குறுதி மீது விசுவாசம் கொள்ள வைத்தார். இயேசு பிறப்பதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர், அவரைப் பற்றி ஏசாயா என்ற இறைத்தூதர்.. “நமக்கென்று ஒரு பாலகன் பிறப்பார், இதற்கென நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவரது தோளின் மேலிருக்கும்” (ஏசாயா 9:6) என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். மேலும் அவர், “ ஏனென்றால் இயேசு வல்லமைமிக்க ஓர் ஆட்சியாளராக மாறுவார். அவர் சமாதானப் பிரபு என அழைக்கப்படுவார். மேலும், அவருடைய ஆட்சி நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைநிறுத்தப்படும்”(ஏசாயா 9:7) என்று எழுதி வைத்தார்.

வருகிறது சமாதானம்

இயேசுவின் பிறப்பைப் பற்றி கன்னிகையான மரியாள் முன் தோன்றிக் காபிரியேல் தேவ தூதன் தெரிவித்தபோது ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை எதிரொலித்தார். “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது” என்று முன்னுரைத்தார் (லூக்கா 1:32).

இறைதூதன் அறிவித்த திருவருகைக் காலம், இதோ இந்த நவம்பர் மாதத்தின் இறுதியில் தொடங்கிவிட்டது. கடவுளுடைய ஆட்சியின் அரசராகக் கிறிஸ்து சாதிக்கப்போகும் செயல்களில்தான் அவருடைய பிறப்பின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியில் அனைவரும் பயனடையலாம். அவருடைய பிறப்பு ‘பூமியிலே கடவுளின் நற்பிரியமுள்ள மனிதர்கள் மேல் சமாதானத்தைக் கொண்டு வரும்’(லூக்கா 2:14) எனத் தேவதூதர்கள் கூறியதை லூக்கா சுட்டிக்காட்டுகிறார்.

சமாதானமும் நீதியும் நிறைந்த உலகில் வாழத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் கிறிஸ்துவின் ஆட்சியில் சமாதானத்தை அனுபவித்து மகிழ நாம் கடவுளை நேசிக்க வேண்டும், அவருடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுளையும் தம்மையும் பற்றி அறிவதே இத்தகைய உறவுக்கு முதல் படி என்று இயேசு கூறினார். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” (யோவான் 17:3) என்று அப்போஸ்தலராகிய யோவான் சுட்டிக்காட்டுவதை இயேசுவின் திருவருகைக் காலம் நெருங்கிவிட்ட இந்தத் தருணத்தில் தியானிக்கத் தயாராகுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in