

சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பொன்னேரி தெரு வழியாக காஞ்சி மஹா பெரியவர் வந்துகொண்டு இருந்தார். 1964-ம் ஆண்டு அது. அந்த அதிகாலைப் பொழுதில் ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாளின் விஸ்வரூப தரிசனம் காண அக்கோயிலுக்குள் நுழைந்தார். முதன் முறையாக இப்பெருமாளைக் கண்ட அவர், பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது சென்ற நிகழ்ச்சி வியாச பாரதத்தில் விளக்கப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்தார்.
பின்னர் பெரியவர் அதனைக் குறிப்பிட்டு, அன்று இப்பெருமாள் எப்படி இருந்தார் என்று வியாசர் தமது இலக்கியத்தில் விளக்கி இருந்தாரோ, அதேபோல சிற்பி சிலையை வடித்துள்ளார் என்பதைத் தெரிந்துகொண்டார். சங்கர மடத்தில் இருந்து வியாச பாரதம் நூலைக் கொண்டு வரச் செய்து, பெருமாளின் திருவுருவத்தை சிற்பி, அச்சு அசலாக வடித்துள்ள விதத்தை வியாச பாரதத்தில் உள்ள சுலோகம் மூலம் விளக்கியும் உள்ளார்.
அதற்குப் பின்னரும் இத்திருக்கோயிலுக்கு பல முறை மஹா பெரியவர் தொடர்ந்து வந்துள்ளார். திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி ஸ்தாபிக்க அவரே உபயம் செய்துள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் காணக் கிடைக்கிறது.
திருப்பாடகம்
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகியோர் தங்கள் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். திருத்தலத்திற்குப் பாடகம் என்றும், இத்தலப் பெருமாளை திருப்பாடகத்தான் என்றும் அழைத்து ஆழ்வார்கள் மங்களாசாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்ற பெருமாள் என்பதால் பாண்டவ தூதப் பெருமாள் என்பது திருநாமம். தனிச் சன்னிதியில் குடி கொண்டுள்ள தாயாரின் திருநாமம் ஸ்ரீருக்மணி.
மகாபாரதத்தில் கிருஷ்ணரது முதல் விஸ்வரூபம் துரியோதனனுக்குக் காட்டப்பட்டதுதான். இதனைத்தான் திருமங்கை ஆழ்வாரும் பெரிய திருமொழியில் ‘பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்’ திசை எல்லாம் திடுக்கிட விஸ்வரூபம் எடுத்தவன் எனக் குறிப்பிடும் வகையில் கீழ்க்கண்ட பாசுரத்தை அமைத்துள்ளார்.
“அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்.”
சுக முனிவர் வர்ணனை
கிருஷ்ணரின் இந்த விஸ்வரூபக் காட்சியை சுக முனிவர் அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மகாராஜாவிடம் விளக்கினார். மகாராஜாவும் தனது மகன் ஜனமேஜயனுக்கு இந்த அற்புதக் காட்சியை விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அஸ்வமேத யாகம் செய்து, அதன் பலனாகவே இதனைக் காணமுடியும் என்று கூறினார் வைசம்பாயனர். அவ்வாறே மன்னனும் கிருஷ்ணரின் விஸ்வரூபக் காட்சியைக் கண்டானாம். நகரேஷூ காஞ்சி என புகழ் பெற்ற, தற்போதைய காஞ்சிபுரத்தில் அக்காட்சி அச்சு அசலாக அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ள தலம் தான்ட காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில்.