

ஸ்ரீ நாராயண மந்திரத்தை உச்சரித்தால் பாவங்களைத் தொலைத்து முக்தி பெறலாம் என்ற உண்மையை ஊருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்ற அச்சுறுத்தல் எழுந்தபோதும், ஊர் மக்கள் அனைவருக்கும் ஸ்ரீ நாராயண மந்திரத்தின் பொருளைக் கூறி முக்திக்கு வழிகாட்டியவர் ஸ்ரீராமானுஜ பெருமான். அத்தகு மகானுக்கு நாட்டிலேயே முதன்முறையாக சேலத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டில் இம்மண்டபம் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
முன்னொரு காலத்தில் சைலம் என்றழைக்கப்பட்ட இன்றைய சேலத்தில் அன்று எம்பெருமானார் பாளையம் எனப்பட்ட இன்றைய எருமாபாளையம் ஏரிக்கரையில் அழகே உருவாய் எழுந்தருளியுள்ளது ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம்.
சேலம் நகரின் பரபரப்பில் இருந்து சற்றே விலகி நகரின் எல்லையில் கோட்டைபோல மலைகள் சூழ்ந்த இடத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் மணிமண்டபத்தை காண வருபவர்கள் மகான் ஸ்ரீராமானுஜரோடு நான்கு திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர தரிசிக்கலாம்.
18 அடி உயர ராமானுஜர்
மணி மண்டப வளாகத்தில் நுழைந்து படியேறிச் சென்றால் பிரதான மண்டபத்தின் மீது விஸ்வரூபமாக 18 அடி உயர திருமேனியுடன் மலர்ந்த தாமரை போல வீற்றிருக்கிறார் ஸ்ரீ ராமானுஜர். அந்த மகானின் திருவுருவத்தைப் பார்க்கும்போது நம்மையறியாமல் நமது உடல் ஒரு கணம் சிலிர்த்து விடுகிறது.
ஈசான மூலையில் திருவரங்க ரங்கநாதரும், நைருதி மூலையில் திருமலை சுவாமி திருவேங்கடமுடையானும், அக்னி மூலையில் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாளும், வாயு மூலையில் மேலக்கோட்டை சம்பத்குமார சுவாமியும் குடிகொண்டு இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மணிமண்டபம் மற்றும் பெருமாள் கோயில்களில் தினமும் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் பக்தர்கள் சுவாமியை வழிபடலாம். தினமும் காலை எட்டு மணிக்கு கோ பூஜை, காலை 8.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது. காலை 9 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி என மூன்று கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு கோஷ்டி பாராயணமும் நடைபெறுகிறது.
ஸ்ரீராமானுஜர் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளன்று ஸ்ரீராமானுஜருக்கும், திருவோண நட்சத்திரத்தில் திருவேங்கடமுடையானுக்கும், புனர்பூச நட்சத்திரத்தன்று மேல்கோட்டை ஸ்ரீசம்பத்குமாரருக்கும், ரேவதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கநாதருக்கும், ஹஸ்த நட்சத்திரத்தன்று ஸ்ரீவரதராஜருக்கும் சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.
இந்த மண்டபத்தில் உள்ள பிரத்யேகத் திரையரங்கில் பக்தர்களுக்கு ஸ்ரீராமனுஜரின் வாழ்க்கை வரலாறு காண்பிக்கப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விக்க சிறு பூங்கா, செயற்கை நீருற்று, நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. 20 அடி உயர மணிமண்டபத்துக்கு செல்ல வயதானவர்களுக்கு லிஃப்ட் வசதி, வளாகத்தைச் சுற்றி வர பேட்டரி கார் வசதி உள்ளது.
(கோயில் பணிகள் சார்ந்த விவரங்களுக்குத் தொடர்புகொள்ள: 98947-66501, 98651-11230, 98428-15398.)
எப்படிப் போகலாம்?
சேலம் புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், சேலம் உடையாப்பட்டி புறவழிச் சாலையில் எருமாபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலும் சாலை வசதியுடன் மணிமண்டபம் அமைந்துள்ளது.
‘தி இந்து’ நாளிதழின் தமிழ் திசை பதிப்பகம் சார்பில் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டினை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ எனும் நூல் சேலம் ராமானுஜர் மணிமண்டப வளாகத்தில் உள்ள புத்தக ஸ்டாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இதன் விலை 300 ரூபாய்.
ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்
நூல் விலை: ரூ.300/-
தபாலில் பெற: இந்தியாவுக்குள் ரூ.360/-
KSL MEDIA LIMITED என்ற பெயரில் டிடி அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி
‘தி இந்து’ - தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்களைக் குறிப்பிட மறவாதீர்கள்
தொடர்புக்கு: 044-30899000 மற்றும் 7401296562