சிம்மம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

சிம்மம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)
Updated on
2 min read

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்களே! 27.7.2017 முதல் 13.2.2019 வரை உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பிரச்சினைகளில் சிக்கவைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால் வலி எனப் புலம்பித் தவிக்கவைத்த ராகு பகவான், இப்போது ராசிக்குப் பனிரெண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காதுகுத்து என நல்லதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கும். பார்த்து வெகுகாலமான தூரத்து உறவினர்கள்கூட, இனி படையெடுத்து உங்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும். தந்தையுடனிருந்த மனக்கசப்பு நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியிடம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர்திருத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்கள் உங்களுடைய கருத்துகளை முதலில் மறுத்தாலும், பிறகு ஏற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும் உடல்நலக்குறைவையும் அடுக்கடுக்காகத் தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் எனத் தொல்லை தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வேலைக்கு முயல்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், வி.ஐ.பி.களால் ஆதாயமடைவீர்கள். ரத்த சொந்தங்கள் தேடி வருவார்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், ஆரோக்கியம், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.

இந்த ராகு-கேது மாற்றம் திடீர் யோகத்தையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதுடன், சமூகத் தில் முதல் மரியாதையையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்: அமாவாசை திதி நாட்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை நெய் தீபமேற்றி வணங்குங்கள். பலாமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். நினைத்தது நிறைவேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in