Last Updated : 06 Jul, 2017 10:30 AM

 

Published : 06 Jul 2017 10:30 AM
Last Updated : 06 Jul 2017 10:30 AM

திருப்பணி கண்ட புராதனக் கோயில்

திருவாரூருக்குத் தென்மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடையபுரம் கிராமத்தில் பாண்டவை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சேவுராயர் என்ற அய்யனார் கோயில் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

விடையபுரம் சிவன் கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கப்பட்ட கல்வெட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது. மேலும் விடையபுரம் கிராமத்திலிருந்து 4 நடனப் பெண்களையும் தன்னுடைய 400 நடனப் பெண்களின் குழுவில் ராஜராஜன் சேர்த்திருக்கிறான். விடையபுரம் கிராமத்தைச் சேர்ந்த வணிகர்கள் திருவிடைவாசல் சிவன்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் மனைவி சொக்க கூத்த நாச்சியார் செப்புத் திருமேனி செய்து அளித்ததோடு, நாள் வழிபாட்டுக்கும் உதவிய செய்தியும் கல்வெட்டில் காணக்கிடைக்கிறது.

பனை மரங்கள் அடர்ந்த காட்டில் கடந்த சில ஆண்டுகளாகச் சிதைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சமீபத்தில் திருப்பணிகள் நடைபெற்றன.

சேவுராயர் சுவாமியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் பரவி வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து திருப்பணி செய்வது என்று முடிவெடுத்து 25 லட்சம் ரூபாய் செலவில் பணிகளை நிறைவேற்றியுள்ளனர்.

துள்ளுகுட்டி வீரன், சப்த கன்னிமார்கள், முத்தாள் ராவுத்தர், மாக்கான், மாக்காயி ஆகியோர் இருக்கும் இந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தை வெளியூர்களில் இருந்தும், பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் குடும்பம் குடும்பமாக வருகைதந்து கண்டுகளித்தனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளைக் கோயில் பரம்பரை பூசாரி பி. சங்கரன், பி. சுப்பிரமணியன், என். நக்கீரன், எம். கோவிந்தராசு, கே. முருகானந்தம், எஸ். சேதுராமன் ஆகியோரும் கிராமவாசிகளும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x