Published : 27 Nov 2014 01:04 PM
Last Updated : 27 Nov 2014 01:04 PM

சங்கரனுக்கு சங்காபிஷேகம்!

கார்த்திகை மாதத்தில் மூன்றாவது சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்குச் சங்காபிஷேகம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.

சோமவாரத்தன்று மாலை வேளையில் சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 108, 60, 64 வரிசைகளில் சாதாரண அபிஷேகச் சங்குகளை வைப்பர். தலைவாழை இலையில் அரிசி போட்டு, தர்ப்பைப் புல் வைத்து சங்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிறத் துணியில் மிகப்பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, நீர் விட்டு, வாசனை திரவியங்கள் போட்டு அருகில் சிவபெருமானைக் கலசத்தில் வர்ணிக்க வேண்டும்.

சோமவாரத்தில் சங்காபிஷேக வைபவம், அபிஷேக ஆராதனைகள் பல சிவத்தலங்களில் செய்யப்படுகின்றன. எதையுமே ஆகம சாஸ்திர முறைப்படி செய்தால்தான் முழுப்பலன் கிட்டும். அபிஷேகத்துக்காக சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு பூஜை நடத்தும் இடத்தில் பல பக்தர்கள் அவற்றைத் தொடுவதும், பூஜை முடிந்ததும் அவர்களே கருவறைக்குள் எடுத்துச் சென்று கொடுப்பதும் கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆகம விதிப்படி 32 சங்குகளை வைத்து ஆவாகன பூஜை செய்தால் சிவாகமக் கலைகளை நடுவில் உள்ள சங்கில் (தபினீ, தாபினி, ப்ரீதிரங்கதா, ஊஷ்மா போன்றவை) 18 கலை அம்சமாக பூஜை செய்வது விதியாகிறது.

54 சங்குகளை வைத்தால் கலைகளோடு ஆதார சக்திகளை 22 பேராக வர்ணிக்க வேண்டும்.

60 சங்குகளை வைத்தால் வருடங்கள் அறுபதை வர்ணித்து சிவசக்தியரை கலசம் மற்றும் சங்கினுள் ஆவாகன பூஜை செய்தல் வேண்டும்.

64 சங்குகளை வைத்து வழிபடும் கோயிலில் ஆயகலைகள் அறுபத்து நான்கை வர்ணித்து, பூஜிக்க வேண்டும்.

108 சங்குகளை வைத்து வழிபட்டால் சிவாகமத்தில் கூறப்பட்ட சிவனுடைய ஐந்து மூர்த்தங்களோடு (ஈசானம், தத்புருஷம், வாமதேசம், சத்யோஜாதம், அகோர இருதயம்) ஆவரண தேவதைகளை - பஞ்சமாவரண பூஜா விதிப்படி ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.

சங்குகளைச் சுற்று முறையில் அடுக்கி வைத்தும், ஸ்வஸ்திகம், சங்கு, திரிசூலம், சிவலிங்கம், பத்மதளம், வில்வதளம் வடிவங்களிலும் அடுக்கி வைத்து வழிபடலாம்.

சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.

‘சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்'

என்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x